கருட கமனா ரிஷப வாஹனா இயக்குனரிடமிருந்து ஒரு கடிதம்

நேற்று இரவு (15.1.2022) பத்து மணிக்கு கருட கமனா ரிஷப வாஹனா படத்தைப் பற்றிய என் மதிப்புரையை எழுதி பதிவேற்றி விட்டுப் படுத்தேன். காலையில் பார்த்தால் இயக்குனர் ராஜ் பி. ஷெட்டியிடமிருந்து இப்படி ஒரு கடிதம். இதுவுமே கூட தமிழில் நிகழ்வது வெகு அரிது. கேரளத்தில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதுவது வழக்கம். ஆனால் கர்னாடகாவில் எழுத்தாளர்கள்தான் சமூக வெளியில் உச்ச நிலையில் இருப்பவர்கள். சிவராம் காரந்த்துக்கும், யு.ஆர். அனந்தமூர்த்திக்கும், எஸ்.எல். பைரப்பாவுக்கும் கன்னடத்தில் உள்ள மதிப்பும் மரியாதையும் எப்படித் தெரியுமா? இங்கே ரஜினிக்கும் கமலுக்கும் சமூகம் கொடுக்கும் மரியாதையை அங்கே எழுத்தாளர்களுக்குக் கொடுக்கிறது கன்னட சமூகம்.

கே.வி. புட்டப்பா என்று ஒரு கன்னட எழுத்தாளர் (1904 – 1994). 90 வயது வாழ்ந்தவர். இப்போது பைரப்பாவுக்கும் 90 வயது ஆகிறது. புட்டப்பாவின் 54ஆவது வயதில் – 1958இல் – அவருக்கு பத்மபூஷன் விருது கொடுக்கப்பட்டது. 51ஆவது வயதில் கிடைத்தது சாஹித்ய அகாதமி விருது. இங்கே தமிழின் சமகால இலக்கியத்தில் எத்தனையோ உலக சாதனை படைத்த எழுத்தாளர்கள் உண்டு. அசோகமித்திரன் ஒரு சமீபத்திய உதாரணம். ஒரு அங்கீகாரம் கூட இல்லாமல் வாழ்ந்து மறைந்தார். புட்டப்பாவுக்கு 1967இல் ஞானபீட விருது கிடைத்தது. அப்போது வயது 63. அடுத்து, 1988இல் – அப்போது அவர் வயது 84 – பத்மவிபூஷன் விருது கிடைத்தது. பத்மவிபூஷன் விருது கிடைத்த பிறகு பத்து ஆண்டுகள் வாழ்ந்தார் புட்டப்பா. பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் இருந்தார். பி. லங்கேஷையும் கன்னடியர்கள் கொண்டாடித் தள்ளுகிறார்கள்.

இங்கே தமிழ்நாட்டில் யார் பத்மவிபூஷன் விருது வாங்கியிருக்கிறார்கள்? ஜக்கி வாசுதேவ். பாரத ரத்னா எம்ஜியார். இப்படி தமிழில் விருது வாங்க வேண்டுமானால் அவர் ஆன்மீகவாதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் சினிமா நடிகர். அதிலும் ஜக்கி வாசுதேவ் கன்னடியர். தமிழே பேசத் தெரியாதவர். அடுத்த பத்மவிபூஷன் ரஜினிக்குக் கிடைக்கும். இதுதான் தமிழின் கதி!!!

இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு ஏன் நாம் கர்னாடகாவில் பிறக்காமல் போனோம் என்று பொறாமையாக இருக்கும். quora என்று ஒரு இணையதளம் உண்டு. பொழுதுபோக்காக அதை சில சமயங்களில் நான் எட்டிப் பார்ப்பேன். தமிழர்கள் பற்றி எல்லோரும் புகழ்ந்தே எழுதுவார்கள். எதிர்மறையாக அவர்கள் எல்லோருமே எழுதும் ஒரே விஷயம், சினிமா நடிகர்களுக்குத் தமிழர்கள் கொடுக்கும் அளவு கடந்த மரியாதை. அப்படிச் சொல்வது கூட பிழை. சினிமா இங்கே மதம். சினிமா நடிகர்கள் இங்கே கடவுள்கள்.

தமிழ் சினிமா பற்றி என் வாழ்நாள் பூராவுமே எத்தனையோ மதிப்புரைகள் எழுதியிருக்கிறேன். அமீரையும், வசந்த்தையும் தவிர வேறு யாரும் ஒருபோதும் எதிர்வினை செய்ததில்லை. வசந்த் என் நெருங்கிய நண்பர், என் குடும்பம் என்பதால் அவரை நான் இதில் சேர்க்கக் கூடாது. அதனால்தான் ராஜ் பி. ஷெட்டியின் கடிதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தமிழில் எழுதப்பட்ட கட்டுரையை ஒரே இரவில் மொழிபெயர்த்துப் படித்து விட்டு காலையில் இப்படி ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

மனித குலத்தில் படிந்திருக்கும் வன்முறையைக் களைந்து விட்டு அன்பின் பாதையில் ஓரடியாவது எடுத்து வைப்போம் என்பதே கருட கமனா ரிஷப வாஹனாவின் செய்தி. அதை நான் என் மதிப்புரையில் வேண்டுமென்றேதான் எழுதவில்லை. படத்தைக் காண்பவர்கள் அதை உணர வேண்டும் என்பதற்காக.

raj b. shetty

ராஜ் பி. ஷெட்டியின் கடிதம்:

Dearest sir,
This is Raj B Shetty here, director of Garuda Gamana Vrishabha Vahana. I saw your review in Tamil and translated it and read in English. Thank you for showering your kindness and love towards our work. This validation from a writer like you gives us lot of courage to walk in the path that we already are walking…
With all the love and respect Thank you for this Your truly 
Raj B Shetty