சொற்கடிகை : 20

சொற்கடிகை எனக்குப் பெருத்த ஏமாற்றம் என்றார் டார்ச்சர் கோவிந்தன்.  ஆரம்பத்தில் பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது.  பழைய ஞாபகங்களை நினைவு கூர்தல் (reminiscence) என்று தொடங்கி இப்போது அன்றாட நாட்குறிப்பு மாதிரி ஆகி விட்டது என்று சலித்துக் கொண்டார்.

நான் சொன்னேன், நான் தரையிலிருந்து பார்க்கவில்லை.  தரையில் இருப்பவனுக்குத்தான் பின்னால் முன்னால் எல்லாம். நான் கலைஞன்.  மேலே பறப்பவன். எனக்கு முன்னால் பின்னால் எதுவுமே கிடையாது.  மேலே இருந்து நோக்கும்போது எல்லாமே சமம்தான்.  நேற்றும் இன்றும் ஒன்றுதான். 

மீண்டும் ஆரம்பித்தார்.  விடுங்கள், இது இப்படித்தான் என்று சொல்லி விட்டேன். 

கொஞ்ச நேரம் முன்புதான் ஔரங்ஸேப் 99ஆவது அத்தியாயத்தை எழுதி அனுப்பி வைத்தேன். 

நூறாவது அத்தியாயம் வெளியாவதை மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை ஆரோவில்லில் கொண்டாட ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.  நூறு பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.  பெயர் கொடுத்து விட்டு வராமல் இருந்து விடாதீர்கள்.  சாப்பாடு வீணாகி விடும். 

முதல் முதலாக வாசகர் வட்டச் சந்திப்பு பெங்களூரில் 2008இல் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் நடந்தது.  நண்பர் குருதான் அதற்கான முழு ஏற்பாடும் செலவும் செய்தார்.  செல்வந்தர் இல்லை.  சாதாரண நடுத்தர வர்க்கம்.  பெங்களூரில்தான் மென்பொருள் துறையில் பணி.  ஒரு லட்சம் ரூபாய் அவர் கைக்காசை செலவழித்து நடத்தினார். 

பொதுவாக என் வாசகர் வட்ட நண்பர்கள் பற்றிப் பல அவதூறுகள் நிலவுகின்றன.  அவதூறு செய்ய வேண்டும் என்று யாரும் செய்யவில்லை.  புரியாமல் பேசுகிறார்கள் என்றே அதை நான் புரிந்து கொள்கிறேன்.  ஏனென்றால், என் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களே அப்படிப் பேசுகிறார்கள்.  சமீபத்தில் ஒரு நண்பர் கேட்டார். எத்தனை கேள்விகள் வந்தன?  இருபது இருக்கும் என்றேன்.  அடுத்த நொடி அவரது எதிர்வினை, எங்க, உங்க வாசகர் வட்ட நண்பர்களுக்குத்தான் குடிக்கவே நேரம் போதாதே? 

ஏன் இப்படிப்பட்ட இமேஜ் என்றால், மற்றவர்கள் தெரியாமல் குடிக்கிறார்கள்.  இவர்கள் தெரிந்து குடிக்கிறார்கள்.  அவ்வளவுதான் வித்தியாசம்.  ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளர் – எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் – சென்ற வாரம் புத்தக விழாவில் செம தண்ணியில் வந்தார்.  யாரும் பதறவில்லை.  யாரும் அவரைக் குடிகாரர் என்று சொல்லவில்லை.  சொந்த ஊரில் குடிக்க முடியாதபடி இருக்கும்.  இங்கே சென்னையில் குடித்தார்.  அதனால் என்ன?  தள்ளாட்டம் இல்லை.  பேச்சில் கொஞ்சம் உற்சாகம் அதிகமாகத் தெரிந்தது.  ஆனால் நான் அப்படிப் போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?  பிடிக்காத பத்திரிகைகளில் கட்டம் கட்டியிருப்பார்கள்.  இமேஜ் அப்படி. 

அறம் என்பது என்ன?  பொய் பேசாதிருத்தல்.  மோசடி செய்யாதிருத்தல்.  மற்றவனை ஏமாற்றாதிருத்தல்.  எல்லாவற்றையும் விட, காரியம் ஆவதற்காக மற்றவனின் காலைப் பிடிக்காதிருத்தல்.  இதையெல்லாம் செய்பவர்கள் மீது எனக்கு எந்தக் கெட்ட அபிப்பிராயமும் இல்லை.  அறம் என்பதன் அர்த்தம் மட்டுமே சொன்னேன்.  என் வாசகர் வட்டத்தில் நூறு பேர் இருக்கிறார்கள் என்றால், அம்பது பேர் குடியைத் தொட்டே இராதவர்கள்.  ஸ்ரீராம் டாக்டராகப் பணி புரிபவர்.  மதுவைத் தொட்டதில்லை.  வளன் அரசு பாதிரியாராக இருப்பவன்.  வினித் வளனை விட இளையவன்.  மதுவைத் தொட்டதில்லை. செல்வகுமார் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மகாத்மா.  வட்டத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக் கொண்டே வட்டத் தலைவியாக வலம் வரும் பெண்மணி காஃபி கூட அருந்தாதவர்.  மது மட்டும் அல்லாமல் பலர் சைவம் வேறு.  ஆனாலும் வாங்கிய பெயர் குடிகாரர்கள்.  காரணம், இவர்கள் யாரும் ஒளிவு மறைவாக வாழ்பவர்கள் இல்லை.  வெளிப்படையான பேச்சு, வெளிப்படையான வாழ்க்கை. 

சினிமா நடிகனைப் பார்த்து கூன் போடும் ஒரு நண்பர் கூட என் வட்டத்தில் இல்லை.  நேர்மையான சொல்.  நேர்மையான வாழ்க்கை.  யாரையும் ஏமாற்றாமல், பொய் புரட்டு செய்யாமல், கூழைக் கும்பிடு போடாமல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழும் ஒருவன் குடித்தால் என்ன, குடிக்காவிட்டால் என்ன ஐயா?  அவன் அல்லவா அறம் சார்ந்து வாழ்பவன்?  அவனை நீங்கள் பாராட்ட வேண்டாமா?  அப்புறம் எதற்கு இலக்கியம் படிக்கிறீர்கள்?  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழும் சராசரிகளிடமிருந்து விலகியவனை சராசரிகளைப் போலவே விமர்சிக்கும் உங்களுக்கும் சராசரிகளுக்கும் என்ன வித்தியாசம்? 

இந்த அறம் அவர்களுக்கு என் எழுத்து அளித்த கொடை.  இவர்கள் எழுத்தாளர்களாக இல்லாமல் இருக்கலாம்.  அது ஒரு பிரச்சினையே அல்ல.  நல்ல மனிதனாக இருக்க வேண்டும்.  எழுத்தை எழுத்தாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.   

அடுத்து, வாசகர் வட்டத்தின் இரண்டாவது சாதனையாக நான் காண்பது, என்னை அவர்கள் வாழ வைத்தார்கள்.  என் சக எழுத்தாளர்களிடம் அவமானப்பட்டுக் கொண்டு 25 ஆண்டுகள் வாழ்ந்தேன்.  என்னோடு குடிப்பார்கள்.  குடித்து விட்டு நீ எழுதுவது குப்பை என்பார்கள்.  25 ஆண்டுகளும் இதே கதைதான்.  இல்லாவிட்டால் கள்ள மௌனம் சாதிப்பார்கள்.  இந்த அவமானகரமான வாழ்விலிருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்து கொண்டாடியவர்கள் என் வாசகர் வட்ட நண்பர்கள்.  வட்டம் தொடங்கிய பிறகு நான் என் சக எழுத்தாளர்களோடு அமர்ந்து பேசுவதையே நிறுத்தி விட்டேன்.  ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், அபிலாஷ் போன்றவர்கள் விதிவிலக்குகள்.    

வட்ட நண்பர்கள்தான் எனக்கு எழுதுவதற்கான தெம்பையும் உற்சாகத்தையும் அளித்தார்கள்.  இல்லாவிட்டால் எப்போதோ உலக வாழ்விலிருந்து விடை பெற்றுக் கொண்டிருப்பேன்.  எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து பதினைந்து நாள் மருத்துவ மனையில் கிடந்த போது என்னைப் பராமரித்தது வட்ட நண்பர்களே ஆவர்.  நான்கு லட்சம் ரூபாய் செலவும் அவர்களுடையதுதான்.  என் சொந்த பந்தமெல்லாம் ஒரு பைசா கொடுக்கவில்லை. 

காமராஜர் அரங்கிலேயே இரண்டு முறை என்னுடைய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடந்தது.  அவ்வளவு பெரிய அரங்கில் முதல் முதலாக நடந்த இலக்கிய நூல் வெளியீட்டு விழா என்னுடையதுதான்.   

இப்படி, இன்று நான் உயிரோடு இருப்பதற்கும், இத்தனை தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பதற்கும் என் வாசகர் வட்ட நண்பர்களே காரணம்.  என் எழுத்து இயக்கத்தின் அச்சாணியாக விளங்குபவர்கள் அவர்கள்தான்.  அவர்கள் இல்லையேல் இத்தனை தீவிரமாக நான் எழுதிக் கொண்டிருக்க முடியாது.  அது ஒன்று போதும், என் வாசகர் வட்ட நண்பர்களின் சாதனை என்று சொல்லிக் கொள்ள.   

பிச்சாவரத்தில் நடந்தது சந்திப்பு அல்ல.  அது ஒரு கார்னிவல்.  அதை நடத்தியது சீனி.  சீனிக்கு அதற்காக இரண்டு லட்சம் ரூபாய் செலவு.  அது பற்றி விரிவாக எக்ஸைல் நாவலில் எழுதியிருக்கிறேன்.  அந்த கார்னிவலின் மற்றொரு ஹீரோ பிரபு.  அவர் ஒரு சொகுசுக் கப்பலில் செஃப்- ஆக இருக்கிறார்.  பல ஹாலிவுட் நடிகர்களுக்கு சமைத்துக் கொடுத்தவர்.  அவர்தான் பிச்சாவரம் கார்னிவலின் சமையல் பொறுப்பை ஏற்றவர்.  விதவிதமான, ருசியான பல தேச உணவு வகைகளை மேஜையில் நிரப்பியவர்.

அதிர்ஷ்டவசமாக பிரபு இப்போது விடுமுறையில் வந்திருப்பதால் ஆரோவில் சந்திப்பில் சமையல் பொறுப்பை பிரபு ஏற்கிறார். 

பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

ஒரு நல்ல வாசகன் எழுத்தாளனைச் சந்திக்க மாட்டான் என்று சுஜாதா எழுதி விட்டார் போல.  எல்லோரும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  சுஜாதா சொன்னது சுத்தப் பேத்தல்.  அது சுஜாதா போன்ற ஜனரஞ்சக எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.  நான் ஒரு விஷயம் சொல்கிறேன்.

சீனி ஒருமுறை சொன்னார்.  உங்கள் ஆளுமை உங்கள் எழுத்தில் தெரிவது 25 விழுக்காடுதான் என்று.  மீதி 75ஐ நான் எழுதவில்லை.  அதற்கு உதாரணமான தருணங்களையும் சொன்னார்.  நானே மிரண்டு போனேன்.  ஆம், அதை எழுத முடியாதுதான்.

எழுதக் கூடியதைச் சொல்கிறேன். ஆனால் இது எழுத்தில் கிடைக்கவில்லை.  நேர் சந்திப்பில் சுரேஷுக்கு ஏற்காட்டில் கிடைத்தது.

அ. மார்க்ஸ் பேசிக் கொண்டிருந்தார்.  பேச்சு நெருக்கமானவர்களின் மரணம் பற்றியது.  நான் எதுவும் பேசவில்லை.  மார்க்ஸின் பேச்சு உணர்வுபூர்வமாக இருந்தது.  களப்பணியில் அவர் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் கண்டறிந்த உண்மைகள். 

சுரேஷ் ராஜமாணிக்கம் என்னைக் கேட்டார்.  மரணத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

கண்ணிமைக்கும் நேரம் கூட யோசிக்காமல் சொன்னேன்.

மரணம் நிகழ்ந்த இல்லத்தில் ஒரு பூனை எப்படி வேடிக்கை பார்க்குமோ அப்படித்தான் மரணம் எனக்கு.  அது என்னுடைய மரணமாகவே இருந்தாலும். 

அதனால்தான் நான் அடிக்கடி சொல்கிறேன், நான் ஒரு சந்நியாசி போல் வாழ்கிறேன் என்று.  சுகம் கூட என்னைத் தொடுவதை உணர முடிகிறது.  துக்கத்தை உணரவே முடியவில்லை.  துக்கத்துக்கு என் மனம் மரத்து விட்டது. 

இப்படி தத்துவம் மட்டும் அல்ல.  கார்ல் மார்க்ஸோடு ஒருநாள் நிகழ்ந்ததை அவர் சொல்லக் கேட்க வேண்டும்.  அட்டகாசமான ஒரு தருணம் அது. 

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் வினித்தைத் தொடர்பு கொள்ளலாம்.  போன் நம்பர் 84384 81241

மின்னஞ்சல் முகவரி: charuniveditareadersmeet@gmail.com

சந்திப்புக்குப் பண உதவி செய்ய விரும்புவோர் அதைக் குறிப்பிட்டு என் வங்கிக்கு அனுப்பவும்.  மற்றபடி சந்தா விஷயங்களை ஞாபகப்படுத்துகிறேன். 

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

Post navigation