கேள்வி: காமத்திலும் காதலிலும் முத்தத்துக்கு இரு வேறுபட்ட இடங்கள். இவையிரண்டின் ந்யூட்ரலாக முத்தம் இருக்க வேண்டியதா? முத்தம் என்பதைப் பற்றிய உங்கள் கருத்தென்ன சொல்லுங்களேன்.
ஜெனிஃபர்
பதில்: என்னைப் பொறுத்தவரை காதல் வேறு, காமம் வேறு அல்ல. காதல் இல்லாத காமத்தில் எனக்கு ஈடுபாடு இல்லை. உலக வாழ்வின் அவலங்களில் அது ஒன்று. ஆனால் அன்பின் முத்தம், காதலின் முத்தம் இரண்டும் இரு துருவங்கள் ஆயிற்றே?
முத்தம் பற்றி கருத்து சொல்லக் கூடாது. அதைச் செயல்படுத்த வேண்டும். அதற்கு இந்தியாவில் வழியில்லை. நான் அறிந்தவரை இந்தியப் பெண்களுக்கு முத்தத்தில் ஈடுபாடு இல்லை எனத் தெரிகிறது. அதனால் ஆண்களும் அதை ஏதோ பெரிய சாகசம் என்றே நினைத்து விட்டார்கள் போல. அதனால்தான் திரைப்படத்தில் நடிகர் முத்தமிட்டால் ஏதோ ஜாக்கி சானின் அட்வெஞ்ச்சர் காட்சியைப் பார்த்து விட்டது போல் கை தட்டுகிறார்கள். ஒருமுறை கமலுக்கு முத்தம் கொடுக்க விரும்புகிறேன் என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு பெண் சொன்னார். அதி ஆர்வத்துடன் பார்த்தால் கன்ன முத்தம். அதில் கூட என்ன விசேஷம் என்றால், முத்த சம்பவத்துக்குப் பிறகு அந்தப் பெண் சொன்னது. நான் பார்வையாளர் பகுதியிலிருந்து எழுந்து செல்லும் போது என் கணவரை அரங்கை விட்டு வெளியே போய் விடச் சொன்னேன். ஆஹா. ஆஹா. என்ன ஒரு தமிழ்க் கலாச்சாரம்!
சமீபத்தில் ஒரு இலக்கிய விழாவில் என்னைப் பேச அழைத்த பெண் மூத்த எழுத்தாளரை முத்த எழுத்தாளராக்கி விட்டார். வார்த்தை பிசகுவது சகஜம்தான். ஆனால் என் பக்கத்தில் அமர்ந்திருந்த யுவன் சந்திரசேகர், ஆங் ஆங், அப்படியும் சொல்லலாம் என்றாரே பார்க்கலாம். ஒரே அமளி துமளி!
மற்றபடி ஒரு பிச்சைக்காரனிடம் போய் நீ சுவிட்ஸர்லாந்து பற்றி என்ன நினைக்கிறாய் என்று கேட்டது போலவே இந்தக் கேள்வியையும் எடுத்துக் கொள்கிறேன்.
இதற்காகவே அடுத்த ஜென்மத்தில் நான் ஃப்ரான்ஸில் பிறக்க முடிவு செய்திருக்கிறேன்.