வெங்கடேஷ் குமார்

வெங்கடேஷ் குமாரின் வயது 71. இந்த வயதில் அவர் பெயர் உலகமெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கிஷோரி அமோங்கர், கங்குபாய் ஹங்கல் அளவுக்கு இன்று பாடக் கூடிய ஒரே நபராக இருப்பவர் வெங்கடேஷ் குமார். ஆனால் அவரது எளிமையான குணத்தின் காரணமாக அவர் பெயர் எந்த அளவுக்குத் தெரிந்திருக்க வேண்டுமோ அந்த அளவுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இன்னொரு காரணம், வெங்கடேஷ் குமாரின் தியாக மனப்பான்மை. இருபது ஆண்டுகள் அவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவரும் அவர் குழந்தைகளும் கொடூரமான வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கிடைத்த வேலை அந்தப் பல்கலைக்கழக வேலை. வேலையை விட்டிருந்தால் உலகம் பூராவும் இசை நிகழ்ச்சிகள் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாம். பணத்தை விடுங்கள். உலகமெல்லாம் அவர் இசையைக் கேட்டிருக்கும். ஆனால் அந்தப் புகழையும் பணத்தையும் விட தான் கஷ்டப்பட்ட காலத்தில் சோறு போட்ட வேலையை விடலாமா என்று நினைத்தார். மட்டுமல்லாமல், கச்சேரி செய்வதை விட மாணவ சமுதாயத்துக்கு சங்கீகத்தைக் கற்றுக் கொடுப்பதை அவர் முக்கியமாக நினைத்தார்.

என்ன செய்வது, நேர்மையான மனிதர். இல்லாவிட்டால் சேரிக் குழந்தைகளிடம் போய் ஆலாபனை செய்து படம் எடுத்து ஆங்கிலப் பத்திரிகைகளில் கொடுத்திருந்தால் மக்ஸேஸே விருது கிடைத்திருக்கும். (ம்ஹும், அதற்கும் பிராமணனாக இருக்க வேண்டும்.)

வெங்கடேஷ் குமார் அளவுக்கு பாடக் கூடிய ஒரு ஹிந்துஸ்தானி பாடகரை இன்றைய இந்தியாவில் என்னால் சொல்ல முடியவில்லை. கிஷோரி அமோங்கர் “எனக்குப் பிறகு ஹிந்துஸ்தானி இசை போய் விடும்” என்றார். போகாமல் செய்து விட்டார் வெங்கடேஷ் குமார்.

நாளை மறுநாள் அவரது கச்சேரிக்குப் போகிறேன். ஒரு வீட்டின் முற்றத்தில் இருபது பேர் கூடியிருக்க வெங்கடேஷ் குமார் பாட்டு.

வெங்கடேஷ் குமார் பற்றி கிரிஷ் காஸரவள்ளி இயக்கிய ஒரு ஆவணப்படத்தின் இணைப்பை இத்துடன் தருகிறேன். அவசியம் பாருங்கள். வெங்கடேஷ் குமாரை நினைக்கும்போதெல்லாம் எனக்கு மோகமுள்ளின் ரங்கண்ணாதான் நினைவுக்கு வருவார். பாபு அவரை சந்திக்கச் செல்லும் வேளையில் ரங்கண்ணா மனசுக்குள்ளேயே ஆலாபனை செய்ய, அவர் கரம் காற்றில் நடனமாடும் காட்சி அது.

இன்னொன்று, யமுனா ஒரு கோவிலில் ஒரு ஹிந்துஸ்தானி பாடகரைக் கேட்டு, “இந்த க்ஷணமே செத்து விடலாம் போல் இருக்கு பாபு” என்று சொல்லும் தருணம்.

வெங்கடேஷ் குமாரைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு யமுனாவின் வாக்கியம் ஞாபகம் வரும்.

இத்துடன் ஆவணப் படம்.

https://youtu.be/yxHPaveb9AA