கடந்த ஞாயிறு (17.11.2024) அன்று மாலை தி.நகர் சோஷியல் கிளப்பில் சித்த மருத்துவர் டி. பாஸ்கரனின் சித்தாவரம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சுமார் நானூறு பேர் வந்திருந்தார்கள். இன்னும் சற்று பெரிய அரங்காக இருந்திருந்தால் வந்திருந்த இன்னும் நூறு பேருக்கு இடம் கிடைத்திருக்கும். இடம் இல்லாததால் சுமார் நூறு பேர் திரும்பிச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இத்தனை கூட்டத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பாஸ்கரனுக்கு இவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு இனிய அதிர்ச்சிதான். அதிலும் பாதிப் பேர் பத்திரிகையாளர்கள் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்தவர்கள்.
விழா எந்தக் குறையும் இல்லாமல் நடந்தது இன்னொரு மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஒன்பதரைக்கு மணிக்கு விழா முடிந்தவுடன் வந்திருந்த அனைவருக்கும் ஆட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. (சைவ உணவுக்காரர்களுக்கு தனியாக சைவப் பந்தி!) பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளில் பிரியாணி என்று சொல்வார்களே தவிர பிரியாணியில் கறியே இருக்காது. குஸ்காவைத்தான் பிரியாணி என்று பெயர் மாற்றிப் போடுவார்கள். ஆனால் பாஸ்கரன் நம்ப முடியாத அளவுக்கு நல்லவர். ஒரு philanthropist. பொதுவாக பிரியாணியில் கறியைத் தேட வேண்டியிருக்கும்; ஆனால் பாஸ்கரன் கொடுத்த பிரியாணியில் சோற்றைத்தான் தேட வேண்டியிருந்தது. நான் தஞ்சாவூர்க்காரன். அதனால் எனக்கு மட்டும்தான் விசேஷமாக கறி போட்டிருக்கிறார்களா என்பதை சோதிப்பதற்காக எல்லோரும் சாப்பிடும் இடத்துக்குப் போய் அவர்கள் சாப்பிடும் தட்டை நோட்டம் விட்டேன். அந்த பிரியாணியிலும் சோறை விட கறிதான் அதிகமாக இருந்த்து.
இப்படிப்பட்ட சேவை செய்வதற்கெல்லாம் ஒருவித மனோபாவம் தேவைப்படுகிறது. அதை நான் சீனியிடமும் செல்வாவிடமும்தான் பார்த்திருக்கிறேன். நாலு பேர் கூடியிருக்கிறோம். யாரையாவது பழம் வாங்கிக்கொண்டு வரச் சொன்னால் அரை கிலோ திராட்சையும் ரெண்டு ஆப்பிளும் வாங்கி வருவார்கள். ஆனால் சீனி ரெண்டாயிரம் ரூபாய்க்கு நாலு பை நிறைய பழம் வாங்கி வருவார். அதில் ஒரு டஜன் வெள்ளரிக்காயும், ஒரு கிலோ வெங்காயமும், ரெண்டு கிலோ பழுத்த தக்காளியும், விதவிதமான வண்ணங்களில் ரெண்டு கிலோ குடை மிளகாயும் இருக்கும். எல்லாம் ஸலாத் செய்வதற்கு.
அடுத்து பாஸ்கரனைத்தான் பார்க்கிறேன். பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார். எனக்கு ஒரு மாலை அணிவித்தார் பாஸ்கரன். அப்படி ஒரு மாலையை என் வாழ்நாளில் கண்டதில்லை. ஒரு குங்குமச் சிமிழ் அளவு வெண்தாமரையும், செந்தாமரையும் கலந்து கட்டிய ஆளுயர மாலை அது. அப்போதுதான் எனக்கு அத்தனை சிறிய அளவு தாமரையும் இருப்பது தெரிய வந்தது. அதேபோல் பனை ஓலையால் செய்த மலர்க்கொத்து.
ஆறு மணிக்கு ஆரம்பித்த விழா பத்து மணிக்குத்தான் முடிந்தது. ஆனால் எல்லா விழாக்களிலும் நடப்பது போலவே என் பேச்சு கடைசியில்தான் இருந்தது. பாஸ்கரன் ஆரம்பத்திலேயே என்னைக் கேட்டார்.
“முதலில் பேசுகிறீர்களா? கடைசியில் பேசுகிறீர்களா?”
நான் வழக்கம் போலவே கடைசியில் பேசுகிறேன் என்றேன்.
இதில் ஒரு catch 22 பிரச்சினை இருக்கிறது. முதலில் பேசினால்தான் பார்வையாளர்களும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்; நாமும் சுறுசுறுப்பாக இருப்போம். எல்லோரும் பேசி விட்டு நாம் கடைசியில் பேசினால் பார்வையாளர்கள் பெரிதும் சோர்வடைந்து விடுவார்கள். பேச்சாளரும் சோர்வாகத்தான் இருப்பார். அது மட்டுமல்லாமல் இன்னொரு விஷயத்தையும் கவனித்திருக்கிறேன். ஒன்பது மணிக்கும் மேல் ஆகிவிட்டால் கூட்டத்தில் பாதிப்பேர் கிளம்பிப் போய் விடுவார்கள்.
ஓரிரு இலக்கியக் கூட்டங்களில் என்னிடம் மைக் வருவதற்கு இரவு பத்து மணி ஆகி விடும். அதற்கு மேல் என்ன பேச? தேசிய கீதம் பாடி விட்டு நகர்ந்து விடுவேன். கூட்டமும் முடிந்து விடும்.
நல்லவேளை, பாஸ்கரன் விழாவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும், கூட்டத்தில் பேசிய ஓரிருவரைத் தவிர மற்ற அனைவருமே சிறப்புச் சொற்பொழிவை ஆற்றியதால் எட்டேமுக்கால் மணிக்கு நான் பேச ஆரம்பிக்கும்போது பார்வையாளர்கள் அனைவரும் கடும் சோர்வில் இருந்ததை அவர்களின் முகத்தைக் கொண்டே அனுமானிக்க முடிந்தது. அப்படி எட்டே முக்கால் மணிக்கு எனக்கு மைக் கிடைத்ததற்கே மேடையில் பேசிய இரண்டு மூன்று நண்பர்கள்தான் காரணம். சிவக்குமார், இயக்குனர் பத்ரி, மாயவரத்தான் ரமேஷ்குமார் மற்றும் எம்.பி. உதயசூரியன். இவர்களுமே சிறப்புச் சொற்பொழிவு ஆற்றியிருந்தால் என் கைக்கு வழக்கம்போல் பத்து மணிக்குத்தான் மைக் கிடைத்திருக்கும். நானும் வழக்கம் போல் தேசிய கீதம் பாடி முடித்திருப்பேன். நல்லவேளை, மைக் எனக்கு எட்டே முக்காலுக்குக் கிடைத்து விட்டது.
ஆனாலும் பார்வையாளர்கள் ஐந்தரை மணியிலிருந்து எட்டே முக்கால் வரை ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து சிறப்புச் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறார்கள். மூன்று மணி நேரத்துக்கும் மேல். பசி, சோர்வு, தூக்கக் கலக்கம். சிலர் கொட்டாவியும் விட்டார்கள்.
நானுமே சோர்வடைந்து விட்டேன். பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. நல்ல காலம். ஆரம்பத்தில் கொடுத்த அவித்த பயறை சாப்பிட்டிருந்ததால் பசியைத் தாங்க முடிந்தது.
ஆம், விழா தொடங்குவதற்கு முன்னால் எல்லோருக்கும் மூலிகைகளால் ஆன சூப்பும் அவித்த பயறு வகைகளும் கொடுக்கப்பட்டன. மூலிகை சூப்பு என்றாலும் அது கிட்டத்தட்ட ஆட்டுக்கால் சூப்பு போல் அத்தனை ருசியாக இருந்தது. அவித்த பயறுவகைகளும் மருத்துவர் பாஸ்கரன் அவரைச் சந்திக்க வருவோருக்கெல்லாம் எப்போதுமே கொடுப்பது வழக்கம். அதுவுமே அதிருசி. இது போன்ற இயற்கை உணவுகளெல்லாம் ருசியாக இருக்காது என்று ஒரு வதந்தி உண்டு. அது தவறு. சாதாரணமாக நாம் உண்ணும் உணவை விட ருசியானது இயற்கை உணவு.
பொதுவாக நான் இரவு உணவு உண்பதில்லை. ஒரு வாழைப்பழம்தான் ஆகாரம். காரணம், நான் காலையில் மன்னனைப் போலவும், மதியம் மந்திரியைப் போலவும், இரவில் பிச்சைக்காரனைப் போலவும் சாப்பிடும் ஆள். ஆனால் மருத்துவர் பாஸ்கரன் கூட்டம் முடிந்து எல்லோருக்கும் மட்டன் பிரியாணிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லியிருந்ததால் மதியம் நான் மந்திரி போல் சாப்பிடாமல் பிச்சைக்காரன் போல் சாப்பிட்டிருந்தேன்.
மைக்கின் முன்னே நின்ற போது, என் கைகளில் ஒன்றரை மணி நேரத்துக்கான குறிப்புகள் இருந்தன. சரி, இதில் பாதியையாவது பேசலாம் என்று ஆரம்பித்து நேரம் போனது தெரியாமல் ஒரு மணி நேரம் பேசி விட்டேன். ஆனாலும் நேரமின்மை தந்த பதற்றத்தின் காரணமாக நான் பேசியதில் கோர்வை இல்லை. பேச வேண்டிய பல முக்கியமான விஷயங்களை விட்டு விட்டேன்.
அதில் ஒன்று, சித்த மருத்துவம் எனக்கு அறிமுகமான கதை.
என் முப்பது வயதிலிருந்து நாற்பது வரை மூல வியாதியால் மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். கண்ணாடியைக் கொண்டு ஆசன வாயை அறுப்பது போல் இருக்கும். இருபத்து நாலு மணி நேரமும். தற்கொலை செய்து கொள்ளத் தோன்றும். ஆனாலும் அலோபதி சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்மானமாக இருந்தேன். காரணம், அவர்கள் தரும் அறுவை சிகிச்சை. மூலத்துக்கு அறுவை சிகிச்சை தீர்வு அல்ல. அறுவை சிகிச்சை செய்தால் மீண்டும் மூலம் வரும். அலோபதியை நான் பெரும்பாலும் நாடாததன் காரணம் இதுதான். அலோபதி ஒரு அருமையான தற்காலிகத் தீர்வைத் தரும். ஆனால் நோயின் மூலத்தை அறுக்காது. அது பற்றி அலோபதிக்குத் தெரியாது. சித்தம், ஆயுர்வேதம் எல்லாம் நோயின் மூலத்தை அறுத்து விடும்.
பத்து வருடம் சிரமப்பட்டேன். அவந்திகாவைத் திருமணம் செய்து கொண்ட பிறகு அவந்திகாவின் மூலம் மருத்துவர் கலைமணியின் நட்பு கிடைத்தது. அவர் அண்ணா நகரில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினார். அவருக்கும் பாஸ்கரனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், கலைமணி என்னிடம் ஒரு கல்லூரி மாணவனைப் போல் பழகுவார். நாங்கள் சந்தித்தால் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். பாஸ்கரன் அமைதி.
கலைமணியிடம் பிரச்சினையைக் கூறினேன். மருந்து தருகிறேன் என்றார்.
காரம் கூடாது.
இல்லை டாக்டர், எனக்கு தினமும் இரண்டு பச்சை மிளகாய் தொட்டுக்கொள்ளாவிட்டால் உணவு இறங்காது என்றேன்.
சரி, மது கூடாது.
இல்லை டாக்டர், வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை மது அருந்தாவிட்டால் என்னால் எழுத முடியாது என்றேன்.
அதோடு அவர் பேச்சை நிறுத்திக்கொண்டு மருந்தை மட்டும் கொடுத்தார்.
நாக பஸ்பம், நத்தை பஸ்பம்.
ஒரு மாதத்தில் மூலம் காணாமலே போய் விட்டது. நான் பச்சை மிளகாயையும் நிறுத்தவில்லை; மதுவையும் நிறுத்தவில்லை.
முப்பது ஆண்டுகளாக மூலம் என்னை எட்டியே பார்க்கவில்லை.
நான் என் நண்பர்களிடம் பாஸ்கரன் பற்றி எவ்வளவோ சொல்கிறேன். ஆனால் யாருமே என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறார்கள். அவர்களுக்கு சித்த மருத்துவத்தின் பேரில் நம்பிக்கை இல்லை.
ஒரு நண்பர். எனக்கு மிகவும் நெருக்கமானவர். தினமும் இரவு ஒன்றரை வரை தூக்கம் வருவதில்லை, காலையிலும் சீக்கிரம் எழுந்து கொள்ள வேண்டியிருக்கிறது, சரியான தூக்கம் இல்லாததால் நாள் முழுவதும் சோர்வாக இருக்கிறது என்று புலம்பினார். நான் கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டேன். ஒரு வார்த்தை பாஸ்கரன் பற்றிப் பேசவில்லை.
ஏனென்றால், பாஸ்கரன் பற்றி அவரிடம் ஏற்கனவே இருநூறு முறை சொல்லியிருக்கிறேன். அவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. எதைச் சாப்பிட்டாலும் பெட்ரோல் வாசனை வரும். அவருக்குக் கொரோனா வந்து மீண்டதிலிருந்து இந்தப் பிரச்சினை. இதை ஆயுர்வேதம், சித்தா, அலோபதி ஆகிய எந்த மருத்துவத்தாலும் சரி பண்ண முடியவில்லை.
அவ்வளவு பெரிய பிரச்சினையை பாஸ்கரன் சரி பண்ணினார். ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு செய்தார்.
அப்படிப்பட்ட மருத்துவரை என் நண்பர் நம்ப வேண்டுமா இல்லையா?
அடிக்கடி ஜுரம் வருகிறது என்றார். பாஸ்கரனைக் காண்பித்தேன்.
மருந்து சாப்பிட்டார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
ஒருமுறை மருந்து வரத் தாமதம். (பாஸ்கரன் சில மருந்துகளை தன் கைப்பட செய்கிறார்.) உடனே நண்பர் ஆயுர்வேத மருத்துவரை அணுகினார்.
இதற்கிடையில் பாஸ்கரனின் மருந்து வந்தது.
என்னைத் தொலைபேசியில் அழைத்து, பாஸ்கரனின் மருந்தை என்ன சாரு செய்யலாம் என்று கேட்டார்.
குப்பையில் போடுங்கள் என்றேன்.
உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்தது. வெளியே காண்பித்துக் கொள்ளாமல் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் குரலில் சாந்தமாகச் சொன்னேன்.
நண்பரும் நான் சொன்னதை நம்பி விட்டார்.
என் நண்பர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.
இன்னொரு நண்பன். அவனுக்கும் தூக்கம் இல்லை. ஆள் ஹிந்தி நடிகன் மாதிரி இருப்பான்.
பாஸ்கரன் விலாசம் சொன்னேன்.
அடப் போங்க சாரு, என் அண்ணன் டாக்டர். என் அக்கா டாக்டர். என் சித்தி டாக்டர். என் மாமா டாக்டர். நான் அவர்களை வைத்துப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
எல்லோரும் அலோபதி மருத்துவர்கள்.
எல்லோரும் அவனை சாப்பாட்டைக் குறைக்கச் சொன்னார்கள் போல் இருக்கிறது. (எனக்குத் தெரியாது. என் யூகம்.) அவனை பாஸ்கரன் விழாவில் ஆறு மாதம் கழித்துப் பார்த்தேன். ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருந்தான். ரத்தக் கண்ணீர் வந்தது. என்ன சொல்ல முடியும்? அலோபதியை நம்பி நம்பி சாவுங்கடா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.
மக்களே, நான் அலோபதிக்கு எதிரி அல்ல. மூளையில் ரத்தக் கசிவு, ஹார்ட் அட்டாக் மாதிரி பிரச்சினைகள் என்றால் அலோபதிதான் மக்களின் உயிர் காக்கும். ஆனால் ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தோல் வியாதி, தலைவலி, ஜுரம், தூக்கமின்மை, மலட்டுத்தனம், ஆண்மைக் கோளாறு, விரைப்பு இன்மை போன்ற பிரச்சினைகளுக்கெல்லாம் சித்தாதான் தீர்வு.
கூட்ட்த்தில் கவிஞர் கதிர்பாரதி மற்றும் கௌதமின் சொற்பொழிவுகளும் இயக்குனர் பத்ரியின் பேச்சும் பிரமாதமாக இருந்தன. என்ன இது பத்ரி, ஏதோ தொழில்முறைப் பேச்சாளர் போல் பொழிந்து தள்ளுகிறார்!
கதிர்பாரதியும் கௌதமும் ஆளுக்கு ஒரு கதை சொன்னார்கள். பிரமாதமான கதைகள்.
இரண்டுமே கேட்ட கதைகள்தான் என்றாலும், அவர்கள் அதைச் சொன்ன விதம் அட்டகாசமாக இருந்தது.
கதிர்பாரதி சொன்ன ஆள்கொல்லிப் பிசாசுவின் கதை:
நாலு பேர் ஒரு வனத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிரே வந்த ஒரு முதியவர் “இந்தப் பக்கம் போகாதீர்கள், அங்கே ஒரு ஆட்கொல்லிப் பிசாசு இருக்கிறது, அது உங்கள் நாலு பேரையும் தீர்த்துக்கட்டி விடும்” என்றார்.
இவர்கள் கேட்கவில்லை. போனார்கள்.
அங்கே ஒரு இடத்தில் குவியலாகத் தங்க நாணயங்கள் கிடந்தன.
சாக்கில் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டார்கள்.
மதியம் வந்து விட்டது. பசியும் வந்தது. “சரி, நாங்கள் இருவர் போய் சாப்பிட்டு விட்டு உங்களுக்கும் சாப்பாடு வாங்கிக் கொண்டு சாக்கும் எடுத்து வருகிறோம்” என்று இரண்டு பேர் கிளம்பினார்கள்.
வரும்போதே அவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது. தங்கத்தை ஏன் நாலு பேர் பிரித்துக்கொள்ள வேண்டும், ரெண்டு பேரை சாப்பாட்டில் விஷம் வைத்துத் தீர்த்துக் கட்டினால் என்ன?
அதே மாதிரியே வனத்தில் இருந்த ரெண்டு பேரும் யோசித்து ஒரு திட்டம் வைத்திருந்தார்கள். சாப்பாட்டுக்குத் தண்ணீர் வேண்டுமே, கொண்டு வாருங்கள் என்று கிணற்றைக் காண்பித்தார்கள்.
சரி, எப்படியும் சாகப் போகிறவர்கள்தானே, அவர்களுக்குத் தண்ணீரைக் கொடுப்போம் என்று கிணற்றில் தண்ணீர் சேந்தப் போனார்கள் விஷம் வைத்த ரெண்டு பேரும். அவர்களை அப்படியே கிணற்றில் தள்ளி விட்டுவிட்டு மீதி இருவரும் விஷ உணவை அருந்தி செத்துப் போனார்கள்.
வனத்தின் வழியே திரும்பி வரும்போது நான்கு பிணங்களையும் பார்த்த முதியவர் “இதற்குத்தான் அப்போதே சொன்னேன்” என்று அலுத்துக்கொண்டாராம்.
கௌதம் சொன்ன கதை:
காம இச்சையால் பெரிதும் தூண்டப்பட்ட ஒருவன் ஒரு ஒட்டகத்தைப் புணர முயற்சி செய்கிறான். ஒட்டகம் அவனை உதைத்துத் தள்ளுகிறது. அவன் படும் கஷ்டத்தைப் பார்த்த ஒரு இளவரசி, அவனிடம் தன்னையே கொடுக்க எண்ணி, “உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்கிறாள். அவன் உடனே மிகுந்த மகிழ்ச்சியுடன், ”இந்த ஒட்டகத்தின் காலைக் கொஞ்சம் பிடித்துக்கொள்” என்றானாம்.
இரண்டு கதையுமே எதற்கு என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். சித்த மருத்துவத்தின் அருமை தெரியாத மூடர்களைப் பற்றிச் சொன்ன கதைகள்.
சித்த மருத்துவர் எழுதிய சித்தாவரம் என்ற நூல் பற்றியும் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.
ஒருமுறை பாஸ்கரன் என்னிடம் ஆசி வேண்டிய போது “உங்களுக்கு வேலையில்லாமல் போக வேண்டும்” என்று சொன்னேன். அதுவே இந்த உலகத்துக்கும் என் சக மானுடருக்கு நான் சொல்லும் செய்தி. அதுவே பதிணென் சித்தர்களும் உலகுக்கு அருளிய செய்தி.
அதே செய்தியைத்தான் பாஸ்கரன் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். இந்த நூலைப் படித்தால் நாம் மருத்துவர்களையே அணுக வேண்டாம்.
பாஸ்கரனின் தொடர்பு எண்: 78260 57789
நூல் கிடைக்கும் இடம்:
தேநீர் பதிப்பகம்
24/1, மசூதி பின் தெரு,
சந்தைக்கோடியூர்,
ஜோலார்ப்பேட்டை 635 851
விலை ரூ. 150/-
தொலைபேசி: 90809 09600
விழாவில் நான் சந்தித்த மற்றொரு முக்கியமானவர் மேனகா. மண்வாசனை என்ற பாரம்பரிய உணவுப் பொருள் நிறுவனத்தை நட்த்தி வருகிறார். பாரம்பரிய உணவை மக்களிடம் கொண்டு செல்லும் செயல்பாடுகளில் நான்கு முறை உலக சாதனை படைத்திருக்கிறார்.
அவர் செய்த சில பதார்த்தங்களை (லட்டு, முறுக்கு, காராசேவு) சாப்பிட்டுப் பார்த்தேன். அத்தனை ருசியாக என் வாழ்நாளில் சாப்பிட்டதில்லை. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணத்திலேயே அவருடைய தொடர்பு எண்ணை இங்கே தருகிறேன். அவருடைய இணைய தளத்தையும் சென்று பாருங்கள்.
பாஸ்கரனின் புத்தகத்தைப் படித்த போது நாஸ்டால்ஜியா சார்ந்த பலவித எண்ணங்கள் எழுந்தன. உதாரணமாக, அவர் குறிப்பிடும் மாப்பிள்ளை சம்பா அரிசி. சிறிய வயதில் எத்தனை முறை சாப்பிட்டிருக்கிறேன்! இப்போது அந்த அரிசியைப் பார்த்தே ஐம்பது ஆண்டுகள் இருக்கும். மேனகாவிடம் மாப்பிள்ளை சம்பாவில் செய்த உணவுப் பொருள்கள் உள்ளன. இப்படி அநேகம் வைத்திருக்கிறார்.
அவருடைய எண்: 98841 66772
இணையதளம்: mannvasanai.com