ஏ.ஆர். ரஹ்மான்

என் வாழ்வில் எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். எத்தனையோ பேர் என் மனதுக்கு உகந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சிலரது சந்திப்பு ஒரே ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. சிலரைத் தொடர்ந்து சந்திக்க வாய்க்கிறது. சில நண்பர்களுடன் மிக நெருக்கமான அளவில் முப்பத்தைந்து ஆண்டுகளாக நட்பில் இருக்கிறேன். முப்பத்தைந்துதான் அதிக பட்சம். முப்பத்தைந்துக்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் அதிகம் கூட இருக்கும்.

நான் சந்தித்த மனிதர்களில் முக்கியஸ்தர்களும் அடக்கம். பிரபலம் என்ற வெளிச்சம் விழாதவர்களும் அடக்கம்.

இப்படி நான் சந்தித்த மனிதர்களிலேயே என்னை ஆகக் கவர்ந்தவராக ஒருவர் உண்டு. அவரை மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பிக்கும் குணாம்சங்கள் பல உண்டு. அதிலும் விசேஷமான ஒரு குணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

அவரைப் போன்ற பிஸியான மனிதர்கள் வெகு சிலர்தான். இருந்தாலும் அவருக்கு நான் ஒரு செய்தியை அனுப்பினால் அதிக பட்சம் அரை மணி நேரத்துக்குள் பதில் வந்து விடும். அதிகாலை மூன்று மணியிலிருந்து காலை எட்டு மணி வரைதான் விதிவிலக்கு. மற்றபடி எந்த நேரத்தில் செய்தி அனுப்பினாலும் அரை மணி நேரத்தில் பதில் தரக் கூடிய ஒரு நண்பர் என் வாழ்வில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவர் ஏ.ஆர். ரஹ்மான்.

இன்றோ நாளையோ அவரை நான் சந்திப்பதாக இருந்தது. சந்திப்பு பற்றி பத்து தினங்களுக்கு முன்பே உறுதி செய்தாகி விட்டது. என்றைக்கு என்பதை மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் இப்படி ஒரு செய்தி காலையில்.

இருந்தாலும் அது வேறு, இது வேறு என்று ஒன்றரை மணி அளவில் அவருக்கு எங்கள் சந்திப்பு பற்றி ஒரு செய்தியை அனுப்பி வைத்தேன்.

வழக்கம் போல் அரை மணி நேரத்தில் பதில். ”விரைவில் சந்திக்கிறோம் ஜி, தற்சமயம் சில சொந்த விஷயங்களில் பிஸியாக இருக்கிறேன்.”

இவர் என்ன மனிதர்தானா? அல்லது, அதிமானிடனா?

நற்குணங்களால் மட்டுமே ஆன உங்களுக்கு பூரணமான இறையருள் கிட்டும் ரஹ்மான்.