முதல் நூறு : 9

9.  டைட்டானிக் படத்தில் ஜாக்கும் ரோஸும் திருமணம் செய்து கொண்டிருந்தால் அவர்கள் ஒரு ரொமாண்டிக் ஜோடியாக இருந்திருப்பார்களா?

ப்ரவீண்

பதில்: திருமணத்துக்கும் ரொமான்ஸுக்கும் ரொம்ப தூரம்.  திருமணம் ஆனவுடனே இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் பொஸஸிவ்னெஸ் வந்து விடுகிறது.  பொஸஸிவ்னெஸ் அன்பையும் காதலையும் கொன்று விடும்.  அப்படியே பொஸஸிவ்னெஸ் இல்லையென்றால், அடுத்த ஆபத்து அன்பு என்ற வடிவத்தில் வரும்.  அன்பு அன்பு என்று சொல்லியே கொன்று விடுவார்கள்.  உனக்கு இது ஆகாது, உனக்கு அது ஆகாது, இதைச் செய்யாதே, இது கெடுதல், அதைச் செய்யாதே, அது கெடுதல்… என்று நூறு ஆயிரம் என்று போகும்.  பெண்ணாக இருந்தால் கணவனின் நண்பர்களே அவள் முதல் எதிரி.  அவர்கள்தான் நல்ல மனம் படைத்த நம் கணவனைக் கெடுப்பவர்கள். 

கணவனுக்கு நன்மை செய்தாகவே நினைத்துக் கொண்டு அவனை ஒரு வழி பண்ணி விடுகிறார்கள். எப்போது நீங்கள் மற்றவருக்கு நன்மை செய்யப் புறப்படுகிறீர்களோ அப்போதே அராஜகம் ஆரம்பம் என்று சொல்லி விடலாம்.  ஒரு மதப் பிரச்சாரகர் மாற்று மதத்தினரைக் குறித்து, “ஏ சகோதரர்களே, நீங்கள் நரகலைத் தின்கிறீர்கள்; எங்கள் வழிக்கு வாருங்கள்,  உங்கள் நன்மைக்காகவே சொல்கிறேன்” என்று ஆவேசமாகப் பேசினார். 

இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது அதிகாரம் (power).  எவனொருவன் அடுத்தவனின் நன்மையைப் பற்றி உபதேசிக்கிறானோ அங்கே அதிகாரம் தலையெடுத்து விடுகிறது. 

ஆண் சரியாக இருந்தால் பெண் அதிகாரத்தைச் செலுத்துகிறாள்.  இரண்டு பேரில், ஒருவர் ஆண்டான், ஒருவர் அடிமை.  இந்த இரண்டில் கணவனோ மனைவியோ யார் வேண்டுமானாலும் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.

இது வரை என் வாழ்வில் ஒருவருக்கொருவர் சிநேகமாக இருக்கும் திருமணமான தம்பதிகள் ஒரு சிலரையே பார்த்திருக்கிறேன்.  அவர்கள் போன தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.  உதாரணமாக, என் பெற்றோர். 

சிலர் வெளியில் சொல்வார்கள், ”என் கணவர் போல் உண்டா?” என்று. அது பச்சைப் பொய்.  அவர்களால் உண்மை நிலவரத்தைச் சொல்லவே முடியாது. 

வெளியிலிருந்து பார்த்தால் ரொம்பவும் அமைதியாகத் தெரியும். உள்ளே இருக்கும் முதலை நம் கண்ணுக்குத் தெரியாது. இப்படியும் ஒரு தம்பதி லோகத்தில் உண்டா என்றுதான் தோன்றும்.  ஆனால் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் தெரியும், இருவரில் ஒருவர் அடிமையாக வாழ்கிறார் என்று.  கணவனோ மனைவியோ இருவரில் ஒருவர் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்.  அந்த அடிமையைக் கேட்டால் நம்மோடு சண்டைக்கும் வருவார்.  ஏனென்றால், அவருக்கு தான் அடிமை என்றே தெரியாது.  அதன் பெயர் ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரம்.  வீரப்பன் என்ற கிரிமினலிடம் மாட்டிக் கொண்ட கன்னட நடிகர் ராஜ்குமார், ஒரு பேட்டியில், வீரப்பன் ரொம்ப நல்லவர் என்று சொன்ன மாதிரிதான் அது. 

அன்பு, ஆதிகாரம் ஆகியவற்றை நீக்கி விட்டால் ஆணும் பெண்ணும் சிநேகமாக வாழலாம்.  ஆனால் நீக்குவது சாத்தியமே இல்லை. 

எப்போதோ ஒருமுறை மாதத்தில் ஒருநாள் நண்பர்கள் கூடுவார்கள்.  மொத்தம் ஆறு பேர்.   இரண்டாவது பெக்கிலேயே ஆறு பேர் வீட்டிலிருந்தும் போன் வரும்.  “ரெண்டாவதுதானே போவுது?  இனிமே வேணாம்.  நிறுத்திரு.”  இப்படி அந்த ஆறு பேருக்குமே அன்புக் கட்டளைகள் வந்த வண்ணம் இருக்கும்.   

இதுவாவது குடி.  இதேபோல் நூற்றுக்கணக்கான  விஷயங்களுக்குத் தடை போடப்படும்.  கிட்டத்தட்ட இந்தத் தடைகளினால் ஆளையே கொன்று விடுவார்கள்.  எல்லாவற்றுக்கு ஒரே வார்த்தைதான்.  உன் நல்லதுக்குத்தான் சொல்கிறேன்.  இது போன்ற வன்முறையான வார்த்தை ஆண் பெண் உறவில் வேறு எதுவும் இல்லை. 

என் நண்பர் ஒருவர்.  65 வயது.  அடிக்கடி என்னிடம் வாழ்க்கை சலித்து விட்டது, அலுத்து விட்டது, களைத்து விட்டது, இனிமேல் வாழ்வதற்கு எதுவும் இல்லை, கிளம்பி விடலாம் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். 

மிகவும் வண்ண மயமான மனிதர்.  பயணம் செய்வதில் பெரு விருப்பம் கொண்டவர்.  அதற்காகவே அம்பது லட்சம் ரூபாய் சேமித்தும் வைத்தார்.  இப்போது சொன்னால், உங்களுக்கு வயதாகி விட்டது, எங்கேயும் போக வேண்டாம் என்கிறாராம் மனைவி.  மறு பேச்சே பேச முடியாது.  தடையென்றால் தடைதான்.  இத்தனைக் காலம் பயணம் செய்திருக்க முடியாது.  வாழ்க்கைப் பொறுப்பு, அலுவலகப் பொறுப்புகள் ஏராளம்.  மனைவிக்காகவும், மகளுக்காகவும் வாழ்ந்தார்.  இப்போது பேரப் பிள்ளைக்காக வாழ்கிறார்.  65 ஆண்டுகளில் அவர் தனக்காக ஒரு நாள் கூட வாழ்ந்தது கிடையாது.  நடைப் பயிற்சியில் கூட சுதந்திரமாக நடந்து விட முடியாது.  எட்டு மணி ஆனதும் மனைவியிடமிருந்து போன் வந்து விடும்.  கிளம்பிட்டேளா, நேரம் ஆய்டுத்தே?

ஒருநாள் கூட ஃபோன் வராமல் இருந்ததே இல்லை.

அவ்விடத்திலிருந்து போன் வரும் போதெல்லாம் அவர் ஸ்கூட்டரை ரோடு ஓரத்திலேயே நிறுத்தி பதில் சொல்லி விட்டுத்தான் கிளம்புவார்.  அதுவோ சாந்தோம் நெடுஞ்சாலை.  காலை எட்டு மணிக்கு வாகனங்கள் சீறிக் கொண்டு பாயும்.  நாங்கள் இருவரும் எம்மார்சி நகரிலிருந்து திரும்பிக் கொண்டிருப்போம்.  அப்படிப்பட்ட நெடுஞ்சாலையில் இவர் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி விட்டுப் பேசுவார்.  நிச்சயமாக அது ஆபத்துதான்.  சில சமயங்களில் ஃபோனை எடுக்க முடியாத அளவுக்கு வாகன நெருக்கடி இருக்கும்.  அப்போதும் ஃபோன் தொடர்ந்து விடாமல் அடித்துக் கொண்டே இருக்கும்.  அப்படி அடித்து இவர் போனை எடுக்க முடியாமல் போகும் போது ஸ்கூட்டர் தடுமாறுவதையும் கவனித்திருக்கிறேன்.  இவர் ஃபோனை எடுக்கும் வரை, மீண்டும் மீண்டும் போன் அடித்துக் கொண்டேயிருக்கும்.   

பொதுவாக இது போன்ற விஷயங்களில் நான் மூக்கை நுழைப்பதில்லை.  ஆனால் இதில் என் உயிரும் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒருநாள் அவரிடம், “தயவுசெய்து வீட்டில் சொல்லி விடுங்கள், இப்படி தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்க வேண்டாம் என்று;  நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது ஃபோனை எடுத்துப் பேசுவது ஆபத்து” என்று சொல்லி விட நேர்ந்தது.  ”இல்லாவிட்டால் நாம் ஏழே முக்காலுக்கே கிளம்பி விடுவோம், இல்லாவிட்டால் இருவரும் நம் வீட்டு மொட்டை மாடியிலேயே நடப்போம்” என்று மேலும் சொன்னேன்.    

இதெல்லாம் எங்கே என்றால், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சீத்தா பிராட்டி போல் ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவர் என்று இருக்கும் வீட்டில்.  அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் என்னிடம் தினம் தினம் தான் சீக்கிரம் சாக விரும்புவதாகச் சொல்கிறார்.  குடும்ப வன்முறை அவ்வளவு குரூரமானது.  வீட்டில் பாத்திரம் தேய்ப்பது நண்பர்.  வீடு பெருக்கி துடைப்பது நண்பர்.  இரண்டு பேர் துணிகளையும் துவைப்பது நண்பர்.  கறிகாய் திருத்துவது நண்பர்.  ஒருநாள் வீட்டைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்த அம்மணி, முகத்தை அஷ்டகோணலாகச் சுளித்தபடி “என்ன ஒரே நாத்தம்?” என்று கோபக்குரலில் கேட்டாரம்.  கேட்டது பிரச்சினை இல்லை.  த்வனிதான் முக்கியம்.  என்னை செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன் என்றார் நண்பர்.  இத்தனைக்கும் அந்த நண்பரின் மனைவி வீட்டோடு இருப்பவர்.  நண்பர்தான் ஆஃபீஸுக்கும் போய்க் கொண்டு இத்தனை வீட்டு வேலையும் செய்து கொண்டிருக்கிறார்.  இதை நான் ஒரு தோழியிடம் சொன்னபோது அவர் சொன்னார், உங்கள் நண்பரின் மனைவியைக் கேட்டால்தான் தெரியும், அவர் என்ன சொல்கிறாரோ?  அவர் தரப்பு நமக்குத் தெரியாது இல்லையா? 

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி – சீத்தாப் பிராட்டி குடும்பம் இப்படி என்றால், இவர்களின் குறுக்கே மூன்றாம் நபர் நாலாவது நபர் எல்லாம் நுழைந்தால் என்ன ஆகும் என்று யோசித்துக் கொள்ளுங்கள்.  ரண களம்தான். 

இன்றைய குடும்ப அமைப்பும், ஆண் – பெண் உறவும் எப்படி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது என்பதை அராத்துவின் பொண்டாட்டி என்ற நாவலில் காணலாம்.  பிரித்து மேய்ந்திருப்பார். 

முந்தைய தலைமுறையில் குடும்ப வன்முறை எப்படி இருந்தது என்பதை நாம் லா.ச.ரா.வில் முழுமையாகப் பார்க்கலாம்.  அசோகமித்திரனிலும் உண்டு. சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் இன்னொரு உதாரணம். எல்லாவற்றையும் விட புதுமைப்பித்தனின் செல்லம்மாள் என்ற ஒரு கதை போதும், குடும்பத்தின் சிதைவைச் சொல்வதற்கு.   

அதிகாரம் செலுத்தாத அன்பும் புரிதலும் இல்லாததால் இந்தியாவில் குடும்ப அமைப்பு கொடுமையான அடிமைத்தனத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்பாக மாறி விட்டது.  ஆண் பெண் இரு பாலருமே இதில் சம பங்கு வகிக்கிறார்கள். அதிகாரம் செலுத்தாத அன்பு என்பதே ஒரு oxymoron ஆக மாறி விட்டது.  அப்படி ஒரு அன்பே ஆண் பெண் உறவில் இப்போது இல்லை. 

ஆண் பெண் உறவைக் கூட விடுங்கள்.  மனித உறவிலேயே அன்பு என்பது இப்போது கொடும் வன்முறையைக் கொண்டதாக மாறி இருக்கிறது.  அன்பு என்று சொல்லிக்கொண்டுதான் என் மீது உச்சக்கட்ட வன்முறை செலுத்தப்படுகிறது.  என் சுதந்திரம் பறிக்கப்படுவது அதில் முதன்மையானது.  ஆண் செய்தாலும் சரி, பெண் செய்தாலும் சரி, மனித குலத்தின் முதன்மை எதிரி அன்புதான். 

நான் இப்படிச் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.  அன்பு வன்முறை என்றால், அப்புறம் மனித உறவுகளைப் பேணுவது எப்படி என்று கேட்கலாம்.  சொல்கிறேன்.  இந்த உலகில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் வாய் கிழியச் சொல்வார்கள், அன்பு நிபந்தனையற்றது என்று.  அப்படியென்றால் என்ன?  நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே நீங்கள் ஏற்றுக் கொண்டால் அதன் பெயர் அன்பு.  நீங்கள் என்னை நண்பனாகவோ, காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக் கொள்ளும்போது நான் கடவுள் நம்பிக்கை கொண்டவனாகவும், குடிக்காதவனாகவும் இருந்தேன்.  பத்து இருபது ஆண்டுகளில் நான் நாஸ்திகனாகவும் குடிப் பழக்கம் உள்ளவனாகவும் மாறினால், அது உங்களுக்குப் பிரச்சினையாகவும் இருந்தால் மேற்கத்திய நாடுகளில் விவாகரத்து செய்து கொண்டு நட்புடன் இருப்பார்கள்.  இங்கே அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை.  கூடவே இருந்து கொண்டு சித்ரவதை செய்வார்கள்.  இதற்குப் பெயரா அன்பு?  நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் நான் இருந்தால் அன்பு பாராட்டுவீர்கள்.  இல்லையேல் நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் என்னை மாற்ற முயற்சி செய்வீர்கள்.  முயற்சி பலிக்காவிட்டால் வதை.  சுந்தர ராமசாமியின் கவிதை ஒன்று, உன் கவிதையை நீ எழுது என்று.  இந்த நாலு வார்த்தைகளில் எல்லாமே அடக்கம்.  உங்கள் கவிதையை என்னை எழுதச் சொல்லி ஏன் பிராணனை வாங்குகிறீர்கள்? 

கோவை ஞானி என்று ஒரு புத்திஜீவி இருந்தார்.  மார்க்சீயவாதிகளிடையே பிரபலம்.  ஐம்பது வயதில் பார்வை போய் விட்டது.  தொண்ணூறு வயது வரை வாழ்ந்தார்.  தொண்ணூறு வயது வரையும் தமிழ் இலக்கிய உலகில் வந்துள்ள எல்லா புத்தகங்களையும் படித்து விட்டார்.  ஒரு இருபது வயதுப் பையனின் கவிதைத் தொகுதியையும் படித்திருப்பார்.  நாள் பூராவும் அவருக்குப் படித்துக் காண்பிக்க இளைஞர்களும் நண்பர்களும் இருந்தார்கள்.  அன்பு என்றால் வழங்குதல்.  கொடுத்தல்.  எடுத்துக் கொள்ளுதல் அல்ல.  ஆனால் உலகம் முழுவதும் அன்பு என்றால் நாம் அன்பு கொண்டவர்களின் குருதியைக் குடித்தல் என்பதாகவே நடந்து கொண்டிருக்கிறது.  இந்தியப் பெற்றோர் மீது அவர்களின் குழந்தைகள் கொண்டுள்ள அன்பு இத்தகையதுதான்.  குழந்தையில் பாலும் இளைஞரானதும் குருதியும் குடிக்கும் ட்ராக்குலாக்களே இந்தியச் சிறார்கள்.  தினந்தோறும் தினந்தோறும் ஒவ்வொரு மணித்துளியும் நான் இதைக் கண்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

அன்பு என்றால் வழங்குதல்.  ஐந்து நிமிடம் முன்பு அன்னபூர்ணி சொன்ன வார்த்தை.  19 அன்று வருகிறீர்களா என்பதற்காக போன் செய்தேன்.  அது ஒரு பத்து நிமிடப் பேச்சாக வளர்ந்தது.  கடந்த பதினைந்து வருட நட்பில் அவருடன் போனில் பேசியது பத்து முறை இருக்கும்.  அதுவும் ஐந்தாறு நிமிடங்களைத் தாண்டியதில்லை.  மற்றபடி எல்லாமே மெஸேஜ்தான்.

ஒரு ’தாய்’ ப்ரான் சூப் தேவை.

டன்.

இவ்வளவுதான்.  நன்றி சொன்னால் அன்னபூர்ணிக்குப் பிடிக்காது என்பதால் நன்றி கூட சொல்வதில்லை.  அவர் சொன்னார்,

“சாரு, நீங்கள் உலகுக்கு ஞானத்தை வழங்குகிறீர்கள்.  அதிலிருந்து நானும் எடுத்துக் கொள்கிறேன்.  இந்தப் பதினைந்து வருடத்தில் நான் உங்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஏதேனும் பெற்றதுண்டா? 

ஏன் என்றால், நாங்கள் உங்களுக்குக் கொடுக்க வேண்டும்.  நீங்கள் கொடுக்கும் ஞானம் போதும்.  உங்களிடமிருந்து நேரத்தையும் மற்றதையும் பிடுங்குவது பாவ காரியம். 

உங்களுக்குக் கொடுக்க என்னிடம் ஏதும் இல்லாவிட்டால் சும்மா இருந்து விடலாம்.  மற்றபடி உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது சமூகக் குற்றம்.  ஏனென்றால், உங்கள் நேரம் சமூகத்துக்கானது.  எனக்கு ஆனது அல்ல.” 

ஒருநாள் அன்னபூர்ணியிடம் ப்ரான் ஃப்ரை கேட்டிருந்தேன்.  டன். 

கூடவே ஒரு டப்பா நிறைய அற்புதமான பான் –உம் வந்தது.  ஆறு பான் இருந்தது.  வட இந்திய பான்.  மிகவும் விலை உயர்ந்தது.  அப்போதுதான் எனக்கு பான் கூட ஸ்விக்கியில் வருகிறது என்பதே தெரிந்தது.  ”என்ன இது, பான் எல்லாம்?” என்று மெஸேஜ் செய்தேன்.  அசைவம் சாப்பிட்டால் வெற்றிலைப் பாக்கு போடுவார்களே, மட்டுமல்லாமல் தஞ்சாவூர்க்காரரான உங்களுக்கு வெற்றிலைப் பாக்கு பிடிக்குமே என்று பதில் வந்தது. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் புத்தக விழாவில் என் புத்தகங்களே எந்த அரங்கிலும் இல்லை.  ஒரு அரங்கில் எலிப் புழுக்கையோடு இருந்தது. சில நூல்கள் கரையான் மூத்திரத்தோடு இருந்தன. ராம்ஜிக்கு முகம் சிவந்து விட்டது. 

உடனடியாக ஸ்டெல்லா மாரிஸில் ஃப்ரெஞ்ச் பேராசிரியராக இருந்த காயத்ரி வேலையை ராஜினாமா செய்து விட்டு ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் இணைந்து இருவரும் தொடங்கினார்கள். 

ஆறே மாதத்தில் ஸீரோ டிகிரி பதிப்பகம். 

என்னுடைய அத்தனை புத்தகங்களும் விற்பனைக்குத் தயார்.  நஷ்டம் வரும் ராம்ஜி, பதிப்பகமே வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன்.  அவர் கேட்கவில்லை.  கோடிக்கணக்கில் பணம் போட்டு சினிமா தயாரிக்கும் அவர் இன்று பைசா லாபமில்லாத புத்தக அரங்கில் ஒற்றை ஆளாக காலை பதினோரு மணியிலிருந்து இரவு ஒன்பது வரை கல்லாவில் நூறையும் பத்தையும் எண்ணிக் கொண்டிருக்கிறார்.  உதவிக்கு ஒரு ஆள் இல்லை.  எனக்கு ஔரங்ஸேப் இல்லை என்றால் நான் போய் பக்கத்தில் உட்கார்ந்திருப்பேன்.  இப்போது ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் இல்லாத எழுத்தாளரே இல்லை என்றாலும், ஆரம்பப் புள்ளி என் புத்தகத்தில் கிடந்த எலிப் புழுக்கையும் கரையான் மூத்திரமும்தான். 

இதன் பெயர்தான் அன்பு.  எதையும் எதிர்பாராத, நிபந்தனைகள் அற்ற அன்பு. 

அன்பு என்றால் வழங்குதல்.  எடுத்துக் கொள்வது அல்ல. 

சீனியிடம் போய் யாராவது அன்பு என்று சொல்லிப் பாருங்கள், செவுளிலேயே விழும்.  காரணம், அன்பு என்று சொல்லிக் கொண்டு எல்லோரும் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.  அதனால் ஏற்பட்ட வெறுப்பு அது.  மற்றபடி சீனியும் அன்னபூர்ணி போன்றவர்தான்.  ஆனால் அந்த அன்பு எல்லோருக்குமானது  அல்ல.  ஏன் என்று உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.

நிபந்தனையற்ற அன்பு பற்றி இன்னும் ஓரிரு வார்த்தைகள்.  ஞானி மார்க்சீயவாதி.  இடையில் அவர் ஒரு ஹிந்துத்துவாவாக மாறியிருந்தால் அத்தனை பேரும் அவர் கூட இருந்திருப்பார்களா என்ற கேள்வி எனக்கு எழுகிறது.

ஏனென்றால், எனக்கு ஒரு நண்பர் அமெரிக்காவிலிருந்து மாதம் அஞ்சாயிரம் ரூபாய் அனுப்பிக் கொண்டிருந்தார்.  20 ஆண்டுகளுக்கு முன்பு.  ஜெயேந்திரர் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைதானபோது சீஸரின் மனைவி சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜெயேந்திரரை விமர்சித்து எழுதினேன்.  சந்நியாசிகள் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் வெளியே இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.  நண்பர் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டார்.

இன்னொரு நண்பர் மாதம் பதினைந்தாயிரம் அனுப்பி வந்தார்.  என் குடும்பமே அதில்தான் ஓடிக் கொண்டிருந்தது.  ஒரு வார இதழில் ஒரு போலிச் சாமியார் பற்றி எழுதினேன்.  பதினைந்தாயிரம் நின்று போனது.  இதெல்லாம் நிபந்தனைகளோடு கூடிய அன்பு. 

தருண் என்னுடனான நட்பைக் கொண்டாடுவதன் காரணம், ஊரே அவனைப் பழித்தபோது நான் அவனை கோவா சிறையில் போய்ப் பார்த்தேன்.  உன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போனாயா என்று எனக்கு 200 மின்னஞ்சல்கள் வந்தன. 

நிபந்தனையற்ற அன்பு என்றால் என்ன, அதை உங்களால் ஒரு மனித உயிருக்கு வழங்க முடியுமா என்று ஒரு நொடி யோசித்துப் பாருங்கள்.  இத்தனை நேரம் இதை எழுதியன் பயன் எனக்குக் கிடைக்கும்…

இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது.  இந்த இழையிலிருந்து எடுத்துக் கொண்டு புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்…

சந்தா/நன்கொடை அனுப்ப:

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai

Post navigation