10. கேள்வி: உங்களுக்கு ஏன் காஃபி பிடிக்கும்? நீங்கள் தினமும் பருகும் காஃபி பிராண்ட் என்ன? ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடிப்பீர்கள்? நீங்கள் சுவைத்ததிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த காஃபி வகை எது?
கார்த்திக்,
திருவள்ளூர்
பதில்: காஃபி பற்றியும் இட்லி பற்றியும் நிறையவே எழுதி விட்டேன். இருந்தாலும் பரவாயில்லை. சொல்லிக் கொண்டே இருக்கலாம். கிட்டத்தட்ட என் காலம் பூராவுமே எது சிறந்த பிராண்டு என்று போராடியபடியே இருந்தேன். ஒரு மாதம் லியோ பிடிக்கும். மூணாவது மாதம் பிடிக்காமல் போய் விடும். அடுத்து இன்னொரு பிராண்டு முயற்சிப்பேன். முதலில் ஆஹா, இதையல்லவா தேடிக் கொண்டிருந்தோம் என்று தோன்றும். ரெண்டு மாதத்தில் அலுத்து விடும். காஃபி டே கொஞ்ச நாள். பெங்களூரிலிருந்து கோத்தாஸ் ரொம்ப நாள் தாங்கியது. இங்கே சென்னையில் கிடைக்கும் முன்பே பெங்களூரிலிருந்து வாங்கி அனுப்பிக் கொண்டிருந்தார் அன்னபூர்ணி. அப்புறம் சென்னையிலேயே பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தது. ரொம்ப நாள் ஆராய்ச்சிக்குப் பிறகுதான் எனக்கு சிக்கரி அதிகம் கலந்தால் பிடிக்கிறது என்பதையே கண்டு பிடித்தேன்.
ஆனால் பாருங்கள், காஃபியின் சுவை பிராண்டில் மட்டும் இல்லை. அதில் பல்வேறு நுணுக்கங்கள் உள்ளன. காஃபித் தூள் புதிதாக இருக்க வேண்டும். டிகாக்ஷன் புதிதாகப் போட்டதாக இருக்க வேண்டும். முன்பெல்லாம் காஃபிக் கொட்டையை சிறிய அளவில் அரைக்க ஒரு சின்ன மெஷின் இருந்தது. எப்போது காஃபி வேண்டுமோ அப்போது கொட்டையை வறுத்து அந்த மெஷினில் போட்டு அரைத்து டிகாக்ஷன் போட்டுக் குடித்தால் அதன் ருசியே தனி. அதெல்லாம் இப்போது செய்தால் மரண தண்டனைதான் கிடைக்கும்.
ஆனால் ஒரு இடத்தில் நான் மேலே கூறியவாறு காஃபி போட்டு கொடுக்கிறார்கள். அதனால்தான் அந்த இடத்துக்கு அடிக்கடி செல்கிறேன். ப்ரூ ரூம்.
கேப்பச்சினோவும் மிகவும் பிடிக்கும். ஆனால் சென்னையில் நல்ல கேப்பச்சினோ கிடையாது. ப்ரூ ரூம் மட்டும் விதிவிலக்கு. அங்கே கிடைக்கும் கேப்பச்சினோ மாதிரி பார்க் ஷெரட்டனிலோ அமேதிஸ்டிலோ கூட கிடையாது. ப்ரூ ரூம் மட்டும்தான்.
க.நா.சு. ஒரு காஃபி அடிக்ட். தினமும் பத்து காஃபி குடிப்பார் போலிருக்கிறது. அதற்கு மேலே கூட இருக்கலாம். ஆனால் சர்க்கரை அதிகமாகப் போட்டு லைட்டாகக் குடிப்பார். லைட்டாகக் காஃபி குடிப்பவர்களை காஃபி தீவிரவாதிகள் காஃபி குடியர்களாகவே ஒப்புக் கொள்ள மாட்டார்கள். நீங்களும் உங்கள் காஃபியும் என்று க.நா.சு.வை சுந்தர ராமசாமி கிண்டல் செய்வாராம். க.நா.சு. அளவுக்கு நான் லைட்டாகக் குடிக்க மாட்டேன். ஆனால் ரொம்ப ஸ்ட்ராங்காகவும் இருக்கக் கூடாது. மீடியம் என்று சொன்னால் சரியாக இருக்கும். நான் குடிக்கும் லைட்டைப் பார்த்து கோவிந்தன் ஒன்று சொல்வார். அந்தக் காலத்தில் பெரியவர்கள் காஃபி குடிக்கும் போது அதைப் பார்த்து சிறு குழந்தைகளும் கேட்கும். அப்போது பாலில் கொஞ்சமே கொஞ்சம் டிகாக்ஷன் கலந்து கொடுப்பார்கள். ஒரு சொட்டு ரெண்டு சொட்டு. அந்த மாதிரிதான் குடிக்கிறேனாம்.
எனக்கு காஃபியை ஆற்றக் கூடாது. ஆற்றி நுரையிருந்தால் குடிக்க மறுத்து விடுவேன். யாராக இருந்தாலும் சரி. காஃபியில் துளிக்கூட ஆடை இருக்கக் கூடாது. பாலை சேர்க்கும் போதே வடிகட்டி விட வேண்டும். காஃபியை வெள்ளி டம்ளரிலோ பித்தளை டம்ளரிலோதான் குடிப்பேன். பித்தளையில் விரைவில் களிம்பு ஏறி விடுவதால் வீட்டில் வெள்ளி டம்ளர்தான். வெள்ளி டம்ளரை தொட முடியாது என்பதால் துண்டு போட்டு பிடித்தபடி குடிப்பேன்.
காலையில் நான்கு மணிக்கு எழுந்து இதயத்துக்கான ஹோமியோ சொட்டு மருந்து. ஆறு மணிக்கு ஒரு காஃபி. எல்லாமே அரை டம்ளர்தான். முழு டம்ளர் இல்லை. கடையில் என்றால் மினி காஃபி. எட்டரைக்கு சாப்பிட்டு விட்டு அரை டம்ளர் காஃபி. பத்தரைக்கு அரை டம்ளர் காஃபி. மாலை நாலரைக்கு அரை டம்ளர். மொத்தம் நான்கு தடவை. ஒவ்வொரு முறையும் புதிதாகப் போட்ட டிகாக்ஷன்தான். பழைய டிகாக்ஷனைத் தொடுவதே இல்லை.
இன்ஸ்டண்ட் காஃபி குடிப்பவர்களுக்கு நரகம் நிச்சயம். காஃபி போன்ற ஒரு அற்புதத்தை ’அப்யூஸ்’ செய்வதால். இப்போது Hathmic மைசூர் சூப்பர் ஸ்ட்ராங் என்று ஒரு காஃபித் தூள் வந்துள்ளது. அதை பாலில் கலந்தால் ஃபில்டர் காஃபி போலவே உள்ளது. வித்தியாசமே தெரியவில்லை. ஆனால் காஃபி 52 சதவிகிதம், சிக்கரி 48 சதவிகிதம்.
எனக்குப் பசும்பாலில் காஃபி போட்டால் பிடிக்கிறது. எங்கள் வீடு மைலாப்பூரில் இருப்பதால் அப்போது கறந்த பசும்பாலை கோனார் எங்கள் வீட்டிலேயே கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்.
”எனக்கு ஏன் காஃபி பிடிக்கும்?” என்ற கேள்விக்கு இன்னொரு கேள்விதான் பதில். அது: எனக்கு ஏன் வைன் பிடிக்கும்?