இன்னா செய்தாரை ஒறுத்தல்…

நாய்க்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.  நாயைக் கல்லால் அடித்தால் குரைக்கும்.  குரைத்து விட்டுப் போய் விடும்.  குரைத்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படாது.  நான் படுவேன்.  இப்படி வாரம் ஒருமுறை குரைத்து விட்டு, வாரம் பூராவும் குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்படுவேன்.  பிறகு அடுத்த வாரம், அடுத்த குரைப்பு.  ஆக, ஒவ்வொரு நாளுமே குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டவனாகவே வாழ வேண்டியது என் வரம்.  ஆனால் தினமும் குரைக்க மாட்டேன்.  குரைக்கவே கூடாது என்ற மன உறுதியிலும் மனப் பயிற்சியிலும்தான் இருப்பேன்.  ஆனால் கல் என் விதைக் கொட்டையில் பட்டு விட்டால் குரைத்து விடுவேன்.  அப்போது அந்த மனப்பயிற்சி என்னிடமிருந்து அகன்று விடும்.

அவ்ட்ஸைடர் ஆவணப்படம் இதுவரை 16 மணி நேரம் எடுக்கப்பட்டிருக்கும்.  இதை எடிட்டர் முக்கால் மணியாகப் பண்ணி விடுவார்.  ஆனால் அதைச் செய்ய அவர் 16 மணி நேரமும் பார்க்க வேண்டும் அல்லவா?  அதன் பொருட்டு தமிழ் ஸ்டுடியோஸுக்கு வந்திருக்கிறார் லெனின்.  காலை ஒன்பது மணி.  நான்தான் போய் வரவேற்று அவர் அருகே அமர வேண்டும்.  நான் போகவில்லை.  எனக்கு வீட்டில் எடுபிடி வேலை.  அனுமதி கிடைக்காது.  “நான் ரெண்டு நாளில் ஊருக்குப் போகிறேன், நீ பாட்டுக்கு ஊர் சுற்றப் போய் விடாதே” என்று ஏற்கனவே சொல்லியிருந்தாள் அவந்திகா.  அதனால் அனுமதி கேட்டால் வீணாகப் பிரச்சினைதான் வரும்.  லெனினிடம் இதையெல்லாம் விளக்க முடியாது.  அதனால் ஜலதோஷம் என்று பொய் சொல்லி மெஸேஜ் தட்டிக் கொண்டிருந்தேன்.  ஒளி முருகவேலுக்கும் மெஸேஜ்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். 

அப்போது பூனைகள் வாஷிங் மெஷினின் மேலே ஏறி அதை நிறுத்தி விட்டன.  அதை கவனித்த நான் அவந்திகாவிடம் சொன்னேன்.  நீ இங்கேயே இருந்து பார்த்துக் கொள்ளக் கூடாதா என்றாள் கோபமாக.  முதல் கல்லடி.  வாஷிங் மெஷின் ஒரு மணி நேரம் ஓடும்.  எந்த மூடனாவது ஒரு மணி நேரமும் அதன் அருகிலேயே நின்று கொண்டிருக்க முடியுமா?  ஒரு பட்டனை அழுத்தினால் மறுபடியும் ஓடப் போகிறது?  கல்லடி விழுந்தால் அமைதியாக இருக்க வேண்டும் என்ற மனப்பயிற்சியின்படி நான் அமைதியாகப் போக எத்தனித்தேன்.  உடனே அடுத்த கல்லடி கொட்டையில் பட்டு விட்டது.  ”உனக்கு சொன்னா கோவம் வரும்.  உனக்கு ஃபோனை நோண்டிக்கிட்டு இருக்கத்தான் நேரம் இருக்கு.”  பத்து நிமிடம் குரைத்து எனக்கு நெஞ்சு வலியும், அவளுக்கு எக்கச்சக்கமான மனவலியும் வந்து விட்டது.  இனிமேல் கொட்டையில் பட்டாலும் குரைக்கக் கூடாது என்று உறுதி பூண்டேன். 

இப்போது அவந்திகா மும்பை சென்றிருப்பதால், கடந்த ஒரு வாரமாக எனக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது.  முந்தாநாள் ப்ரியா கல்யாணராமனின் மரணத்தினால் பாதிக்கப்பட்டிருந்தேன்.  ஏதோ காரணத்தினால் டார்ச்சர் கோவிந்தனிடம் கோபித்துக் கொண்டு விட்டேன்.  என்ன காரணம் என்று சுத்தமாக ஞாபகம் இல்லை.  மீண்டும் குற்ற உணர்ச்சியால் பீடிக்கப்பட்டேன்.  இன்னும் ஒரு வாரத்துக்குப் பேச மாட்டாரே என்றும் கவலையில் இருந்தேன்.  கடைசியில் பார்த்தால் இன்று காலை டன்ஸோவில் கருவாடு கொடுத்து அனுப்பியிருந்தார். 

நோபல் பரிசெல்லாம் என்ன, ஒன்றுமே இல்லை.  இப்படி சில ஆத்மாக்கள் என்னைச் சுற்றி இருக்குமாறு வரம்  பெற்றிருக்கிறேன்.  அது போதும்.  இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், டார்ச்சர் அய்யர் சமூகத்தைச் சேர்ந்தவர்.  மட்டுமல்லாமல், உணவுக்காக பிற உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற கொள்கை கொண்டவர்.  கொள்கையில் தீவிரவாதி.  ஆனாலும் எனக்குக் கருவாடு என்றால் உயிர் என்பதை மனதில் இருத்திக் கொண்டிருக்கிறார் போல.  அவர் நண்பர் ஒருவர் மலேஷியா செல்ல, உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவர் டார்ச்சரைக் கேட்க, டார்ச்சரிடம் நான் எப்போதோ ’மலேஷியாவில் கருவாடு நன்றாக இருக்கும்’ என்று சொல்லியிருந்ததை ஞாபகம் கொண்டு, கருவாடு வாங்கி வாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். 

நல்ல அருமையான நெத்திலிக் கருவாடு.  சின்ன நெத்திலி என்பதால் குழம்புக்கு ஆகாது.  லேசாகப் புரட்ட வேண்டும். இது போன்ற கருவாட்டைப் பார்க்கும் போதெல்லாம் சைவ உணவுக்காரர்கள் மேல் பரிதாபம் மேலிடுகிறது.   

ஒரு விஷயத்தை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.  தன் நண்பரிடம் போனில் “கருவாடு வாங்கிட்டு வாங்க” என்று சொல்லும் போது அந்தத் தருணம் எப்படி இருந்திருக்கும்?   நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது சாத்தியமா?  இதுவாவது பரவாயில்லை.  அவந்திகாவிடம் அவள் அண்ணா கேட்கிறார்.  இன்னிக்கு என்னம்மா தளிகை?  (எல்லாம் அய்யங்கார் கோஷ்டி) எங்காத்துல இன்னிக்கு மீன் அண்ணா, வஞ்சிரம் வறுத்துட்டூ, நெத்திலிக் குழம்பு வைக்கப் போறேன்.  அதான் எல்லாம் ஆஞ்சுண்டு இருக்கேன்.

நிஜமாகவே நடந்தது.  இட்டுக்கட்டி சொல்லவில்லை.  அவந்திகா அவள் இனத்தவரிடம் அந்த பாஷையையும் மற்றவர்களிடம் வேறு விதமாகவும் பேசக் கூடியவள்.  அநேகமாக பெரும்பாலான பிராமண சமூகத்தினர் அப்படித்தான் பேசுவதை கவனித்திருக்கிறேன்.  டார்ச்சரின் இன்றைய செயலைப் பார்த்த போது எனக்கு தலைப்பில் போட்ட குறள் ஞாபகம் வந்தது.