fall of a sparrow…

நேற்று இரண்டாவது தடவையாக அழுதேன்.  முதல் முறை அழுத்து என் தம்பி ரங்கன் 40 வயதில் செத்த போது.  என்னைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று அழைத்துக் கொண்டே இருந்தான்.  இப்படி செத்துப் போவான் என்று தெரிந்திருந்தால் ஓடிப் போய் பார்த்திருப்பேன்.  பார்க்காமலேயே போய் விட்டான்.  உடம்பு எலும்புக் கூடாக இருந்த்து.  இரண்டு மூன்று மாதங்களாக சாப்பிடவில்லையாம். 

அதற்குப் பிறகு நேற்றுதான் அழுதேன்.  பொதுவாக எந்த மரணமும் என்னை எதுவும் செய்வதில்லை.  அதற்கு விதிவிலக்காக அமைந்து விட்டது நேற்றைய மரணம்.  

நான் அஞ்சலிக் கட்டுரைகள் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  அது ஒருவகையில் நெக்ரோஃபீலியா போல் தோன்றுகிறது.  ஒரு உதாரணம் சொல்லலாம்.  தலைமுறைகள் படம் வந்த பிறகு பாலு மகேந்திராவை நேரில் பார்க்கச் சென்றேன்.  விலை உயர்ந்த ஒரு பூங்கொத்தை வாங்கிச் சென்றேன்.  ஏன் அனாவசிய செலவு சாரு என்று அன்புடன் கடிந்தார்.  பிறகு பேசிக் கொண்டிருக்கும்போது பாலச்சந்தர் தவிர வேறு யாருமே ஒரு ஃபோன் கூட செய்து பாராட்டவில்லை என்று சொல்லி வருந்தினார்.  அடுத்த வாரம் அவரது மரணச் செய்தி வந்தது.  சினிமா உலகத்தினர் அத்தனை பேரும் பூங்கொத்தோடு வந்திருந்தார்கள்.  உயிரோடு இருந்த போது அவரை மதித்து ஒரு வார்த்தை பேசவில்லை.  பிணத்துக்கு மாலை போடுகிறார்கள். 

உயிரோடு இருந்தபோது அவரைப் பற்றி நான் எழுதியதில்லை.  இப்போது அவர் இறந்த பிறகு எழுதி என்ன பயன்?  இந்த மனநிலையில்தான் நான் அஞ்சலிக் கட்டுரைகள் எழுதுவதில்லை.  இன்னொரு காரணம், ஒவ்வொருவராலும் நான் காயப்பட்டிருப்பேன்.  அதுவும் ஞாபகம் வரும்.  வெகுஜனப் பரப்பில் என்னையும் என் எழுத்தையும் நேசித்தவர்கள் வாலி, பாலகுமாரன்.  அடுத்து இவர்.  அவ்வப்போது போனில் அழைத்துப் பேசுவார்.  என் எழுத்தின் மிகத் தீவிர ரசிகர்.  அப்படித்தான் ப்ரியா கல்யாணராமனை நான் அறிவேன்.  குமுதம் ஆசிரியராக அல்ல. 

56 வயதில் போய் விட்டார்.  பார்க்க 26 மாதிரிதான் தெரிவார்.  ஆஞ்ஜைனா என்று மருத்துவமனை போயிருக்கிறார்.  ஒன்றுமில்லை என்று சொல்லித் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள், ஏதோ ஒரு தண்டக்கருமாந்திர மருத்துவமனையில்.  வந்து அறைக்குள் போயிருக்கிறார்.  அவ்வளவுதான். 

எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர்.  அதுதான் என்னைப் பல மடங்கு ஆச்சரியப்படுத்துகிறது.  அப்படியானால் பெரியோர் சொல்வது சரிதான் போல.  நம்முடைய தேதி குறிக்கப்பட்ட பிறகே நாம் பூமியில் தங்க வருகிறோம்.  இன்று என்னுடைய இன்னொரு நண்பருடன் பேசினேன்.  26 வயதிலிருந்து இப்போது 66 வயது வரை தினமும் சுமார் நூறு சிகரெட் குடிக்கிறார்.  தினமும் 8 ரவுண்ட் விஸ்கி குடிக்கிறார்.  ஒரு நாள் கூடத் தவறியதில்லை.   

வெகுஜனத் தளத்தில் எனக்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும் போய் விட்டது.  எந்த விதத்திலும் நியாயமே இல்லாத மரணம். 

There’s a special providence in the fall of a sparrow. If it be now, ’tis not to come; if it be not to come, it will be now; if it be not now, yet it will come. The readiness is all.                                                                                            shakespeare