நண்டுக் குழம்பு

நேற்று உடல் நலம் பற்றி எழுதினேன் இல்லையா, எழுதியிருக்கக் கூடாது என்று இரவு தோன்றியது. எனக்கும் நல்ல ஜுரம். உடம்பு வலி. காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. ஐந்து மணிக்கே ராகவனுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். சில தினங்களுக்கு வர முடியாது என்று. ஏழு மணிக்கு ஃபோன் செய்தார். என்னால் எடுக்க முடியவில்லை. ஜுரம் அடித்தாலும் பூனை சேவை செய்தாக வேண்டுமே? ஏழரைக்கும் போன் செய்தார். அவர் வாட்ஸப் பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். நேற்று அவரைப் பற்றி எழுதி விட்டதால் படு உற்சாகமாக பார்க் பக்கம் வந்திருப்பார். இரண்டாவது முறை அவர் ஃபோன் செய்த போது எடுத்து வாட்ஸப்பைப் பாருங்கள் என்று சொல்லி வைத்து விட்டேன். தலைமுறை இடைவெளி. இன்னமும் கைபேசி கண்டு பிடிக்காத காலகட்டத்திலேயே வாழ்கிறார்.

சமையல் செய்யும் பெண் வரவில்லை. எப்போதும் வரும் நேரம் பனினொன்றரை. வந்ததும் ரசம் வைக்கச் சொல்லி பன்னிரண்டரைக்கே சாப்பிட்டு விடலாம் என்று நினைத்திருந்தேன். காலையில் சாப்பிட முடியவில்லை. மாத்திரைகளை விழுங்க வேண்டுமே என்று ஒரு இடியாப்பம் சாப்பிட்டேன். அதெல்லாம் எந்த மூலை? பன்னிரண்டரைக்கு பசி கொளுத்தியது. அரிசியைக் களைந்து வைத்தேன். ராம்ஜி நிர்வாணா என்ற உணவகம் பற்றிச் சொல்லியிருந்தார். எனக்கு அசைவம் போலவே சைவமும் பிடிக்கும். ஆனால் நிர்வாணாவில் இருந்த எந்த அய்ட்டமும் எனக்கு உகந்தது இல்லை. பாஸ்த்தா, பனீர் போன்ற உருப்படிகள். திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். ஒன்று கூட என் விருப்பத்துக்குரியதாக இல்லை. ரசத்துக்கு என்ன செய்வது? இன்று சனிக்கிழமை. டார்ச்சர் கோவிந்தனைக் கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் அவருக்கே உடம்பு சரியில்லை என்று பதினைந்து நாட்களாகப் பேசவில்லை. அவரிடம் போய் ரசம் கேட்கலாமா, தப்பில்லையா என்று தயக்கம். பாரதி மெஸ்ஸில் ரசம் சுமாராக இருக்கும். அதற்காக வேண்டி ஒரு முழு சாப்பாட்டை வாங்க வேண்டுமா? தயங்கிக் கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அடிக்கக் கேட்டது. பணிப்பெண் வந்து விட்டார். அப்பா, உங்களுக்கு நண்டு பிடிக்குமே என்று நண்டு வாங்கி வந்தேன் என்றார்.

ஆ, ஜுரத்தில் கிடக்கும் போது நண்டு சாப்பிடலாமா?

யாரைக் கேட்பது?