ஒரே நாளில் உலகப் புகழ்

நுபுர் ஷர்மா, ஸல்மான் ருஷ்டி, தஸ்லீமா நசரீன், நம்முடைய பெருமாள் முருகன் எல்லோரும் மத நம்பிக்கைகளில் கை வைத்தார்கள். ஒரே நாளில் உலகப் புகழ் கிட்டியது. பெருமாள் முருகனைப் பார்த்துத்தான் ரொம்பவும் பொறாமைப் பட்டேன். கோவிலில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்று எழுதினாலும் எழுதினார், ஒரே நாளில் உலகப் புகழ் எய்தினார். இரண்டு காரணங்கள். ஒன்று, உலகம் பூராவிலும் உள்ள புத்திஜீவிகள். கோவிலில் க்ரூப் செக்ஸ் என்றதும் இந்த உலக புத்திஜீவிகள் அத்தனை பேரும் படு குஷியாகி விட்டார்கள். அவர்களுக்கு இந்தியா என்றாலே இந்த மாதிரி ஏதாவது ஒரு செய்தி வேண்டும். ஏதாவது ஒரு இனக்குழுவில் ஒரே பெண்ணை பத்து பேர் மணந்து கொள்ளும் வழக்கம் இருந்து அது பற்றி நீங்கள் ஒரு நாவல் எழுதினால் உங்களுக்கு புக்கர் நிச்சயம். இன்னொரு கோஷ்டி இருக்கிறது. ஹிந்து மதத்தை இழிவு படுத்த வேண்டும், இந்தியா பற்றி இழிவாக எழுத வேண்டும். இதைச் செய்தால் உங்களை ஐவரி டவரில் ஏற்றுவார்கள். எனக்கே இப்படிப்பட்ட வாய்ப்புகள் அளிக்கப்பட்ட போது நான் கோவில் சிற்பங்களைப் பற்றி எழுதி அவர்களை வெறுப்பேற்றுவேன்.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில தினசரியின் அகில இந்தியப் பதிப்பும், இன்னொரு சென்னை ஆங்கில தினசரியும் உதய்பூர் சம்பவம் பற்றி கருத்து கேட்டார்கள். கருத்து சொல்ல மறுத்து விட்டேன். சொன்னால் எனக்கு ஆதரவாக யாரும் இல்லை. ரெண்டு பக்கத்திலிருந்தும் கொலையாளிகள் வருவார்கள். இப்போதைக்கு இன்னும் நான்கு நாவல்களை எழுதி முடிக்க வேண்டும்; அதுவரை என் தலை என் உடம்பிலேயே இருக்க வேண்டியது அவசியம்.