மீண்டும் தனிமையில்…

வரும் புதன்கிழமை அன்று அவந்திகா திரும்பவும் மும்பை செல்கிறாள்.  மீண்டும் வீட்டில் தனியாக வாழும் அனுபவம் கிடைக்க இருக்கிறது.  இந்த முறை மூன்று வாரம் மட்டுமே. 

வீட்டு வேலைக்குப் பணிப்பெண் இருப்பதால் பிரச்சினை இல்லை.  ஆனால் சமையல் செய்யும் பெண்ணை அவந்திகா மும்பையிலிருந்து திரும்பியதுமே நிறுத்தி விட்டாள்.  நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்தான் என்றாலும், கை நீளம் என்று தெரிந்தது.   குசினியில் பல பொருட்களைக் காணோம்.  ஆக, மூன்று வார காலத்துக்கு நான் வெளியில்தான் சாப்பிட வேண்டும். 

நான் தனியாக இருக்கும் காலத்திலாவது சமையலில் ஈடுபடக் கூடாது என்று தீர்மானம் செய்திருக்கிறேன்.  காரணம், என்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி நேரம் சமையலறையில் கழிந்து விட்டது.  இது எனக்கு மிகப் பெரிய நஷ்டம்.  ஒரு பாரம்பரியமான குடும்பப் பெண் சமையலறையில் கழிக்கும் நேரத்தை விட அதிக நேரத்தை நான் சமையலறையில் செலவிட்டிருக்கிறேன்.  அதனால்தான் தனியாக இருக்கும் நேரத்திலாவது சமையலில் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்ற முடிவு.

ஆனால் ஸ்விக்கி மூலம் வெளியில் வாங்கிச் சாப்பிடுவதில் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது.  தொண்ணூற்றொன்பது சதவிகிதம் வாயில் வைக்க வழங்கவே வழங்காத உணவுதான் கிடைக்கிறது.  உணவு விஷயத்தில் தமிழ்நாடு ஒரு நரகம் போல் ஆகி விட்டது.  நாகூரில் போய் பிரியாணியையோ கொத்துப் புராட்டாவையோ தேநீரையோ வாயில் வைத்து விடவே கூடாது.  குஞ்ஜாலி மரைக்கார் தெரு ஆரம்பத்தில் இருக்கும் சுல்தான் மட்டுமே இன்னமும் பிரமாதமாக வாடா போடுகிறார்.  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட அதே வாடா.  அப்போது இருந்த சுல்தான் ஒரு கோஸா.  (திருநங்கையை எங்கள் ஊரில் அப்படித்தான் குறிப்பிடுவார்கள்.)  இப்போதைய சுல்தான் அந்த சுல்தானின் வாரிசுக்கு வாரிசு. 

நாகூரில் – ஒரு மதிய வேளையில் எங்கே சாப்பிடுவது என்று தெருத் தெருவாக அலைந்து கொண்டிருந்த போது தர்ஹா மணாரடியில் (மணவறா அடி) உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடலாம் என்றேன்.  பஷீர் அல்வாக் கடைக்கு அருகில் உள்ளது அந்த உணவகம்.  “என்ன பாவம் செய்தீர்களோ, அங்கே போய் சாப்பிடுகிறீர்கள்!!!” என்று சொன்னார் கார்த்தி.  பைத்தியம் ஆகி விட்ட என் பள்ளிக்கூட நண்பன் பிரகாஷின் தம்பி.  அப்படி ஒரு கொடூரமான பிரியாணியை நான் வாழ்நாளில் உண்டதில்லை.  எல்லாவற்றையும் என் காலுக்கடியில் வந்து அமர்ந்திருந்த பூனைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து முடித்தேன்.  நாகூரில் சைவ உணவு நாங்கள் சாப்பிட்ட அசைவத்தை விடக் கொடூரமாக இருந்தது. மனிதர்கள் சாப்பிடவே லாயக்கில்லாத உணவு.   

பின்னே எப்படி நான் நாகூர் சாப்பாடு பற்றி அவ்வளவு சிலாகித்து மாய்ந்து மாய்ந்து எழுதினேன்?  அதெல்லாம் நாகூர் முஸ்லிம்களின் வீட்டுச் சாப்பாடு.  கடைச் சாப்பாடு அல்ல.  அல்லது, முன்பு இருந்த தரம் இப்போது போய் விட்டதோ என்னவோ?

ஆனால் நெடுஞ்சாலைகளில் இருந்த சில உணவகங்களில் உலகத் தரமான சாப்பாடு கிடைத்தது.

உணவு எனக்கு மதம் மாதிரி.  இங்கே சென்னை நகரம் உணவைப் பொருத்தவரை ஒரு நரகம்.  ஈரோடு அம்மன் மெஸ் என்று ஒரு உணவகம்.  மீன் குழம்பு, மட்டன் குழம்பு எல்லாம் நன்றாக இருக்கும்.  சின்ன பூண்டு, சின்ன வெங்காயம் போட்டு செய்வார்கள்.  அங்கேயிருந்து சென்ற வாரம் ஒருநாள் பிரியாணி வரவழைத்தேன்.  அழுகிய காக்காய்க் கறியில் செய்த பிரியாணி போல் இருந்தது.  தூக்கிப் போட்டு விட்டேன்.  நானூறு ரூபாய் தண்டம்.  

இங்கே மைலாப்பூரில் உள்ள பாரதி மெஸ் (சைவம்) ஓரளவு தேவலாம்.  ஆனால் ’ரிச்’ ஆக இருக்காது.   பார்க் ஷெரட்டனில் உள்ள தக்ஷிண் உணவகம் உலகத் தரம்.  ஆனால் ஒரு சாப்பாடு 2000 ரூ.  ஒரு ஏழை எழுத்தாளனுக்குக் கட்டுப்படி ஆகாது.  மைலாப்பூரில் மெஸ்கள் அதிகம்.  ஆனால் ஏழை பிராமண சாப்பாடு அல்லது சைவ சாப்பாடு எனக்கு இஷ்டப்படுவதில்லை. 

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  வேளச்சேரி என்றால் பிரச்சினை இல்லை.  அங்கே கல்யாண பிரியாணி என்று ஒரு பிரியாணி கிடைக்கிறது.  பணக்கார முஸ்லிம் வீட்டுக் கல்யாண பிரியாணி போல் இருக்கும்.    

அவந்திகா ஊருக்குப் போகிறாளா?  இன்னும் மூன்று வாரத்துக்கு என்னை ஒரு ஈ காக்கா அணுகாது.  நேற்று பார்க் போனேன்.  என் நண்பர்கள் யாரையும் காணோம்.  ஒருத்தர் ஊருக்குப் போய் விட்டார்.  அடுத்த மாதம்தான் வருவார்.  கண்ணனை அழைத்தேன்.  எட்டேகால் மணிக்கு வந்தார்.  திருவல்லிக்கேணியிலிருந்து வர வேண்டும்.  எட்டேகாலுக்கோ நான் வீட்டில் நிற்க வேண்டும்.  இல்லாவிட்டால் பெரிய புயலே அடிக்கும் வீட்டில்.  எனக்குக் கை காலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது.  இந்த விஷயத்தைக் கண்ணனிடம் முன்பே சொல்லத் தவறி விட்டேன்.  இப்போது ஒன்றும் செய்ய முடியாது.  நான் அழைத்தேன் என்று திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருக்கிறார். 

பக்கத்திலுள்ள சங்கீதாவில் அவசர அவசரமாக ரெண்டு இட்லியைப் பிய்த்துப் போட்டுக் கொண்டு, அவசர அவசரமாகக் காப்பியையும் ஊற்றிக் கொண்டு வீடு வந்த போது மணி எட்டரை.  ஸ்கூட்டரிலிருந்து இறங்கும் தருணத்தில் அவந்திகாவின் ஃபோன்.

எங்கேப்பா இருக்கே, இவ்ளோ நேரம் ஆச்சு?

இதோ வீட்டு வாசல்லேம்மா.

சரி, சரி, சீக்கிரம் வா, எனக்குக் கொலைப் பசி.  வந்து இட்லி பண்ணிக் குடு.

அவசர அவசரமாக ஓடி வந்தேன்.  பார்த்தால் பரண் மீது அமர்ந்திருந்தாள் அவந்திகா.  தலையெல்லாம் ஒட்டடை.  வீட்டின் நடுவே அலுமினிய ஏணி.  ஓ, வீடு பூராவும் ஒட்டடை அடித்து, மின்விசிறியை எல்லாம் துடைத்திருக்கிறாள். 

அவசர அவசரமாக இட்லி வைத்துக் கொடுத்தேன்.  ஒரே ஒரு நாள் பத்து நிமிடம் தாமதமாக வந்ததற்கு இந்தப் பாடு.  சரி, ஊருக்குப் போய் விட்டாளே, சாவகாசமாக வீட்டுக்கு வரலாம் என்றால் பார்க்கிலும் சரி, வாழ்விலும் சரி, ஒரு நாதி இல்லை. 

***

ஸ்ரீராம் ஒரு இருபது பிரதிகளுக்கு முன்பதிவுத் திட்டத்தில் பணம் அனுப்பியிருக்கிறார்.  அவருடைய நண்பர்களுக்கும், புத்தகம் வாங்கக் காசு இல்லாத உதவி இயக்குனர்களுக்குமாம்.  நான்தான் ஔரங்ஸேப்… நாவலை நீங்களும் இப்படி மற்றவர்களுக்கு வாங்கிப் பரிசளிக்கலாம்.

சில நண்பர்கள் எந்த வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.  கீழே விவரம்:

Axis bank account number 911010057338057

Account holder: K. Arivazhagan

Branch: Radhakrishnan road Mylapore Chennai 4

IFSC     UTIB0000006