ம்…

இன்று காலை ஆறரை மணிக்கு ஷுகர் டெஸ்டுக்கு ரத்தம் கொடுக்க பரிசோதனைச் சாலைக்குப் போனேன்.  ரத்தம் கொடுத்து விட்டு உடனடியாகக் காஃபி குடித்தேன்.  காலை உணவு கோதுமை உப்புமா சாப்பிட்டு விட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் கொடுத்தேன்.  மாலை முடிவு தெரிந்தது.  ஷுகர் இல்லை.  ஆனால் ஷுகர் மாத்திரையை நிறுத்தினால் ஷுகர் ஏறுகிறது.  ஷுகரைக் கட்டுப்படுத்த காலையில் கோமிய மருந்தும் இரவில் அலோபதி மருந்தும் எடுத்துக் கொள்கிறேன்.

இன்று இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து சீனியை அழைத்தேன்.  ஒரு வாரமாக வீட்டுக்கே போகாமல் அலுவலகத்திலேயே இருந்து வேலை செய்கிறேன், அதனால் மூன்று நாள் லீவில் வீட்டில் தங்கப் போகிறேன் என்றார்.  விட்டு விட்டேன்.  வினித்தை அழைத்தேன்.  சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் லீவில் திருவாரூர் போய் விட்டார் என்று தெரிந்தது.  என்ன விஷயமாக அழைத்தீர்கள் சாரு என்றார்.  ஒன்றுமில்லை, சும்மாதான் அழைத்தேன் என்று பொய் சொல்லி விட்டேன்.  குமரேசனை அழைக்கலாமா என்று யோசித்து கடைசியில் அழைக்கவில்லை.  குடும்பத்தில் குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை.  சுரேஷை அழைக்கலாம்.  ஆனால் அவரை நான் மாலை நேரத்தில் சந்தித்ததே இல்லை.  அதனால் அந்த சந்திப்பு இயல்பாக நடக்கட்டும், இன்று வேண்டாம் என்று நினைத்து விட்டு விட்டேன். 

டார்ச்சர் கோவிந்தனை அழைத்து இது பற்றி வருத்தப்பட்டேன்.  அருகில் நெருங்குபவர்களையெல்லாம் விரட்டி விட்டு விடுகிறீர்கள், இப்படித்தான் தனியாகக் கிடக்க வேண்டும் என்றார். 

இரவு உணவுக்குப் பழம் சாப்பிடலாம் என்று மந்தைவெளியில் உள்ள பழமுதிர் நிலையம் கடைக்குப் போனேன்.  அதற்குப் பக்கத்தில் மேட்டுக்குடியினருக்கான எலீட் டாஸ்மாக் இருந்தது. வார இறுதி என்பதாலும் திங்கள் டாஸ்மாக் விடுமுறை என்பதாலும் கூட்டம் திமிறிக் கொண்டிருந்தது.  எலீட்டுக்கே இந்த நிலையா?  அங்கே நின்ற கியூ பழமுதிர் நிலையம் வரை நீண்டிருந்தது.

எந்த இடத்துக்குப் போனாலும் எட்டரை மணி ஆனதும் அடித்துப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வருவேன்.  வர வேண்டும்.  இல்லாவிட்டால் வீட்டில் சுனாமி அடிக்கும்.  ஆனால் ஒரு பத்து நாட்களுக்குப் பரோல் கிடைத்திருக்கிறது.  பேசத்தான் ஆள் இல்லை. 

ம்…