புதிய வாசக தளம்

என்னுடைய அருஞ்சொல் நேர்காணல்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் நான் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் என்னை இதுகாறும் தொடர்ந்து வரும் வாசகர்களுக்குப் பரிச்சயமாகி இருக்கலாம். ஆனால் இப்போது அருஞ்சொல்லில் அது எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறேன். மேலும், அருஞ்சொல் வாசகர்களுக்கு அது எல்லாமே புதியவை. அருஞ்சொல் மூலம் நான் பல ஆயிரம் புதிய வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறேன் என்பதும் தெரிய வருகிறது. உதாரணம் இந்தக் கடிதம். உங்கள் பெயரே எனக்கு இரண்டு தினங்களாகத்தான் தெரியும் என்று ஆரம்பிக்கிறது கடிதம். படித்துப் பாருங்கள். இதுவரை சமகால இலக்கிய நூல்கள் எதுவுமே படிக்காமல் ஆனால் அது பரிச்சயமானால் மிக ஆர்வத்துடன் படிக்கத் தயாராக இருப்பவர்கள் ஒரு லட்சம் பேர் இருப்பார்கள். இவர்கள்தான் என் இலக்கு. இதைச் சென்றடைய உதவி செய்த சமஸுக்கு என் நன்றி.

வணக்கம் சாரு ஐயா,                 

எனக்கு நீங்கள் இரு தினங்களுக்கு முன்புதான் அறிமுகமானீர்கள். அருஞ்சொல் தளத்தை தினசரி பின்பற்றுபவள் நான். கடந்த இரு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும்  உங்களுடைய பேட்டிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் அது ஒரு இலக்கியவாதியின் நேர்காணல் என்று தெரிந்தவுடன் நான் உள்ளே சென்று படிக்கவில்லை. எனக்கு இலக்கியம் பெரிதாகப் பரிச்சயம் கிடையாது. எனக்கு அரசியல், பண்பாடு, இந்திய நிலப்பரப்பு சார்ந்த வரலாறு போன்ற துறைகளில் வெளியாகும் கட்டுரைகள், புத்தகங்கள் போன்றவற்றைப் படிப்பதில் ஆர்வம் உண்டு. நாவல்கள் என்று எடுத்துக் கொண்டால் நான் படித்தது மூன்று நாவல்களே. எரியும் பனிக்காடு, காவல் கோட்டம், கங்காபுரம். சிறுகதைகள் கூட பெரிதாகப் படிக்கும் பழக்கம் இல்லை. அவ்வபோது ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களில் வரும் சிறுகதைகளைப்  படிப்பதோடு சரி. அதனால் உங்களை எனக்கு சுத்தமாக தெரியாது. உங்கள் நேர்காணல் கொஞ்சம் நீளமாக இருந்தது, அதுவும் ஒரு காரணம்.                   

சில நாட்கள் என்னதான் அந்தப் பேட்டியில் இருக்கிறது என்று உள்ளே சென்று பார்ப்பேன். எனக்கு உண்மையிலேயே ஆரம்பத்தில்,”யாருடா இந்த பைத்தியக்காரன்?”என்றுதான் தோன்றியது. சென்ற வாரம் ரஜினியின் படத்துடன் உங்கள் நேர்காணல் வெளியானது. நானும் ஏதோ ரஜினியைப் பற்றிப் பேசுவார் போல என்று ஆர்வமாக உள்ளே சென்று பார்த்தேன். அன்றுதான் உங்கள் பேட்டியை நான் முழுமையாகவே வாசித்தேன். ஏதேதோ புதிய புதிய சொற்களெல்லாம் கூறி அதற்கு விளக்கமும் கூறியிருந்தீர்கள் .படிக்கப் படிக்க பல புதிய தளங்கள் எனக்கு அறிமுகமாகின.             

பின்புதான் உங்களுடைய மற்ற பேட்டிகளைப் படித்தேன். எனக்கு உங்களுடைய பல கருத்துக்கள் ஆச்சரியமாக இருந்தன. எல்லா தளங்களில் இருந்தும் வெளியில் நின்று  முற்றிலும் மாறுபட்டுப் பேசுகிறீரகள். நான் சினிமா இயக்குனர்கள் சிலர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன்.  எந்த ஒரு படைப்பையும், எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களிடமிடமிருந்து  மாறுபட்டு கூறுவார்கள். உதாரணமாக  இயக்குனர் ராம், மிஷ்கின் போன்றவர்கள். பின்பு உங்களுடைய நேர்காணல்கள், பேச்சுக்கள் பலவற்றை youtube-ல் கண்டேன். அதெல்லாம் பார்த்த பிறகு நீங்கள் ஒரு வட்டத்துக்குள் இயங்குபவர் இல்லை என்று மட்டும் தெரிந்தது.           

உங்களின் பேச்சு,  இதற்கு முன்  சில விஷயங்களில் நான் கொண்டிருந்த மதிப்பீட்டை மறுமதிப்பீடு செய்ய வைத்தது .பின்பு இணையதளத்தில் உங்களின் பெயரைப் போட்டுத் தேடிய பொழுது உங்களுக்கு என்று ஒரு இணையதளம் உள்ளது என்று தெரிந்தது. அதனுள் சென்று உங்களுடைய கட்டுரைகள் பலவற்றையும் படித்தேன். நீங்கள் வெளிநாட்டு அறிஞர்களையும் வெளிநாட்டுப் படைப்புகளையும் பற்றி மட்டும்தான் புகழ்கிறீர்கள், தமிழ்நாட்டுப் படைப்புகளையும் எழுத்தாளர்களையும்  புறந்தள்ளுகிரீர்கள் என்று பலரும் கூறுகின்றார்கள்.               

நீங்கள் ஜெய்பீம், விசாரணை ஆகிய படங்களை விமர்சனம் செய்ததைப் பார்த்தேன். அது ஒரு டாக்குமென்டரி போல உள்ளது ,சினிமாவாக இல்லை என்று கூறியிருந்தீர்கள். அனைவரும் ஒரு படைப்பைப் பாராட்டினாலோ ,அது மிகச்சிறந்ததாக உள்ளது என்று கூறினாலோ அது கட்டாயமாக சிறந்த படைப்பாகத்தான்இருக்க வேண்டும் என்றோ,அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ கட்டாயம் கிடையாது. நீங்கள் கூறியது எனக்குச் சரியாகப் பட்டது.                   

நீங்கள் அனைவரும் இதுதான் சிறந்தது என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் ”இல்லை, இது உண்மையானது கிடையாது” என்கிறீர்கள். எது சிறந்தது என்று பல சிறந்தவற்றை ஆராய்ந்து கூறுகிறீர்கள். மாற்றுக் கருத்துக்களுக்கும் கண்டிப்பாக இடமளிக்க வேண்டும்.  அப்பொழுதுதான்  உண்மையிலேயே பல சிறந்த படைப்புகள் வெளிவரும். கண்டிப்பாக உங்களைப் போன்ற ஒரு ஆள் தமிழ்ச் சமூகத்திற்குத் தேவைதான். 

பின்பு நீங்கள் எழுதிய புத்தகங்களின் பட்டியலும் அதன் விமர்சனங்களும் வாசித்தேன். நான் உங்களின் புத்தகங்களை வாசிக்க விரும்புகிறேன்.நீங்களே எனக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்யுங்கள்.             

உங்களுடைய பணி தொடர வேண்டும்.

உங்களது கோவா, இலங்கைப் பயணங்கள் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.                         

நன்றி.                                                 

-த.செந்தமிழ்