கொக்கரக்கோ எழுத்தாளனான கதை

கொக்கரக்கோவை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தேன்.  மனிதனாகப் பிறந்த ஜென்மங்கள் எல்லாமே அடுத்த மனிதனை இம்சை செய்வதற்காகவே ஜென்மம் எடுத்திருக்கிறோம் என்பது போல் பழகிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கொக்கரக்கோ மட்டும் யார் வம்புக்கும் போகாமல், யாரையும் இம்சை செய்யாமல் வாழ்ந்தான்.  அதனாலேயே எனக்கு அவனைப் பிடித்து விட்டது என்று சொல்லத் தேவையில்லை.  ஆனால் கொக்கரக்கோவிடம் இருந்த குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் எனக்குப் பிடித்தும் இருந்தது, பிடிக்காமலும் இருந்தது.  பிடித்திருந்ததற்குக் காரணம், லௌகீகம்.  நான் லௌகீகத்தில் பூஜ்யம்.  கொக்கரக்கோ அதில் ஹெச் ப்ளஸ் வாங்கக் கூடியவன்.  (அந்தக் காலத்தில் கணிதத்தில் சில ஜீனியஸ் பையன்கள் ஹண்ட்ரடையும் தாண்டி ஹெச் ப்ளஸ் வாங்குவதுண்டு!)  பிடிக்காததற்குக் காரணம், யார் ஒருவர் லௌகீகத்தில் கில்லாடியாக இருக்கிறார்களோ அவர்கள் எழுத்தாளர்கள் ஆக முடியாது.  ஆகவே முடியாது என்று எழுதினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.  சமீபத்தில் என் சக எழுத்தாளர் எழுதியிருந்தார், யார் ஒருவருக்குத் தன் வீட்டுக்கே போக வழி தெரியவில்லையோ அவரே நல்ல எழுத்தாளராகப் பரிணமிப்பார் என்று.  என்னது, வீட்டுக்கு வழியா, கொக்கரக்கோ காட்டுக்கே வழி சொல்பவன்.  நிஜம்தான்.  அவனைக் கொண்டு போய் மனிதர்களை வறுத்துத் திண்ணும் காட்டுவாசிகள் நிறைந்த ப்ரஸீல் காடுகளில் விடுங்கள், அவர்களில் ரெண்டு பேரை அழைத்துக் கொண்டு நியூயார்க் ஐ.நா. சபைக்கு வந்து விடுவான்.  அந்த அளவுக்கு ஸ்ட்ரீட் ஸ்மார்ட்.

மேற்கூறிய காரணங்களால் அவனை நான் பெங்களூர் வாசகர் வட்டச் சந்திப்பில் முதல் முதலாகப் பார்த்ததுமே “நீங்கள் ஒருபோதும் எழுத்தாளராக முடியாது” என்று ஆசீர்வாதம் தந்தேன்.  அவனோ இது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் மயிரே போச்சு என்பது போல் இருந்து விட்டான். 

அப்புறம் போகப் போக கொக்கரக்கோ எழுத்தாளனாவது சாத்தியமே இல்லாதது என்பதற்கு இன்னொரு முக்கியமான, நடைமுறை ரீதியான காரணமும் கிடைத்தது.  அதாவது, கொக்கரக்கோவுக்கு ஒரு இடத்தில் நிதானமாக நிலைத்து பத்து வாக்கியங்களை எழுத முடியாது.  வணங்காது.  பழக்கம் இல்லை.  பழக்கப்படுத்திக் கொள்ளும் சாத்தியமும் இல்லை.  இந்த முறை அவன் மயிரே போச்சு என்று போய் விடாமல், நான் சொன்னதை முழுசாக ஒத்துக் கொண்டான்.  உண்மைதான் என்றான்.  எந்தக் காலத்திலும் தன்னால் ஒரு இருநூறு பக்கமெல்லாம் எழுதவே முடியாது என்றான்.  இருநூறு என்ன, இருபது பக்கம் கூட சாத்தியம் இல்லை என்று நான் அவனை மேலும் உற்சாகப்படுத்தினேன். 

ஆனால் விதி வேறு விதமாக வேலை செய்தது.  விதி என்று சொல்வதை விட  விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று சொன்னால் சரியாக இருக்கும். ட்விட்டரில் ஆள் கொடிகட்டிப் பறந்தான்.  ட்விட்டரில் கொக்கரக்கோ போடும் ட்வீட்டுகளுக்குப் பெரும் ரசிகர் கூட்டமே உருவானது. அதன் விளைவாக அந்த ட்வீட்டுகள் புத்தகமாக வெளியிடப்பட்டன.   பின்னர் அவன் ஃபேஸ்புக்கில் நுழைந்து இன்னும் சற்றும் அதிக வாக்கியங்களில் எழுதி, அதுவும் புத்தகங்களாக வெளிவந்து சக்கை போடு போட்டதெல்லாம் பழைய கதை.  பிறகு வந்ததுதான் கொக்கரக்கோவுக்காகவே நடந்த ஒரு தொழில்நுட்பப் புரட்சி.  நாம் பேசுவதையெல்லாம் தட்டச்சு செய்து கொடுத்தது மெஷின்.  நூறு வருஷத்துக்கு முன்னால் சொல்லியிருந்தால் யாராவது நம்பியிருப்பார்களா என்ன? அதற்குப் பிறகு கொக்கரக்கோவைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை.  இப்போது காற்று வேகத்தில் ”எழுதுகிறான்.”  ஒரே வாரத்தில் இந்தா பிடி நாவல் என்கிறான்.  நாங்கள் எங்கள் புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட ஓவியர்களைத் தொங்கிக் கொண்டிருக்கும்போது அவனே வான் கோ மாதிரி அட்டைப் படம் போட்டுக் கொள்கிறான்.  என்னடா இது மேட்டர் என்றால் எல்லாம் ஆர்ட்டிஃபீஷியல் இண்டலிஜெண்ட்ஸ் என்கிறான்.  ஒரு எழவும் புரியவில்லை.  அதுவும் நன்றாக வேறு இருந்து தொலைக்கிறது, என்ன செய்ய?

இதையெல்லாம் சற்று பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு விஷயம்தான் அதி ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருந்தது.  எப்படி லௌகீகத்தில் வெற்றிகரமான இருப்பவன் எழுத்தில் கொடி நாட்ட முடியும்?  இதோ இவன் நாட்டிக் கொண்டிருக்கிறானே?

ஆனால் பாருங்கள், திருஷ்டி என்ற ஒன்று வலுவாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.  எனக்கு அந்த ஆன்மீக குருவைப் பிடிக்காது.  ஆனால் அவர் செய்யும் பல காரியங்கள் நான் செய்வதைப் போலவே இருக்கின்றன.  குறிப்பாக, அவரது ஆடை அணிகலன்கள்.  அடுத்து, அவர் போடும் ஆட்டம்.  அதே சமயம், அவருக்கும் எனக்கும் சில வித்தியாசங்களும் உள்ளன.  அவரைப் போல் சமஸ் போன்ற ஒரு பத்திரிகையாளரிடம் நான் உளற மாட்டேன்.  சமஸின் கேள்விகளுக்கு அவர் சொல்லியிருந்த பதில்களெல்லாம் உச்சக்கட்ட உளறல்.  அவரைப் போல் எனக்கு பைக் ஓட்டத் தெரியாது.  சொல்லப் போனால் எனக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.  ஒற்றுமைதான் செம ஆச்சரியம்.  அவர் பொதுவாழ்வில் முப்பது ஆண்டுகளாக இருக்கிறாராம்.  இந்த முப்பது ஆண்டுகளில் ஒருமுறை கூட அவர் உடம்பு சுகமில்லை என்று சொல்லித் தன் நிகழ்ச்சிகளை ரத்து செய்ததில்லையாம்.  இத்தனைக்கும் தினமும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அல்லது பயணத்தில் கலந்து கொள்பவர்.  அவருக்கு முப்பது ஆண்டுகள் என்றால் எனக்கு நாற்பது.  இதை சென்ற வாரம் என் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.  மறுநாளே ஜலதோஷமும் உடம்பு வலியும் வந்து விட்டது.  நான் ரிஷப ராசி.  வந்தால் விடாது.  பத்து நாளாவது ஆகும்.  மறுநாளே ஹைதராபாத் கிளம்ப வேண்டும்.  ஹைதராபாதிலிருந்து ஹம்ப்பி போய் ஹம்ப்பியில் ஒரு நாள் தங்கி விட்டு கோவாவுக்கு காரிலேயே செல்ல வேண்டும்.

கிளம்புகிற அன்றுதான் ஜலதோஷம் உடம்பு வலி எல்லாம்.  கொக்கரக்கோவுக்கு ஃபோன் செய்து நான் வரவில்லை என்று சொல்லி விடலாமா என்று சொல்லத் தூண்டியது காலையில் எழுந்த போது இருந்த உடம்பு வலி.  ஆனாலும் இந்த ஜலதோஷத்தோடும் உடம்பு வலியோடும் வீட்டில் இருந்தால் வீட்டில் இருக்கும் பத்து பூனைகளுக்கும் வேலை செய்வதிலேயே உடம்புக்கு இன்னும் அதிகமாகி விடும்.  அதை விட கோவாவில் போயே படுத்துக் கிடக்கலாம்.  மேலும், கடந்த நாற்பது ஆண்டுகளில் சொல்லாத ஒரு காரணத்தை இந்த எழுபது வயதில் சொல்லி ஜகா வாங்கவும் தயக்கமாக இருந்தது.  அப்படியெல்லாம் தோல்வியை எளிதில் ஏற்றுக் கொள்கின்ற ஆள் இல்லை நான்.

ஹைதராபாதில் எங்களோடு இணைந்து கொள்ளும் நண்பர் கணபதியிடம் இந்துகாந்தம் கஷாயத்தை வாங்கி வரும்படி சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன்.

ஆனால் உடம்புக்கு வந்ததற்கு என் கண்ணே பட்டிருக்கும் என்பதோடு இன்னொரு காரணமும் சேர்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.  இந்த வினித் ராஸ்கல்தான் வாயை வைத்துத் தொலைத்தான். 

அதன் பூர்வீகம் என்னவென்றால், கோவா சாலைவழிப் பயணத்தில் கலந்து கொள்ள நான்கு நண்பர்கள் பெயர் கொடுத்திருந்தார்கள்.  பெயர் கொடுத்ததோடு சரி.  பணம் கொடுக்கவில்லை.  பணமெல்லாம் கடைசியில்தான் கொடுப்பது வழக்கம்.  அந்த நான்கு பேருமே கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார்கள்.  இதில் சந்தோஷ் என்ற அன்பரின் கதை தனியாக எழுத வேண்டிய ஒன்று.  சந்தோஷின் மனைவி கள்ளக் காதலில் இருந்திருக்கிறார்.  அதைத் தட்டிக் கேட்ட சந்தோஷை மனைவி அடியாள்களை வைத்து அடித்து இப்போது சந்தோஷ் மருத்துவமனையில் கிடக்கிறார்.    இந்த நிலையிலும் மனைவி மீதான காதல் குறையவில்லை என்பதுதான் கதையில் ட்விஸ்ட்.  கோவா சாலைவழிப் பயணத்துக்கு வர முடியாமல் போனதுக்காகக் கிடைத்த காரணங்களிலேயே இதுதான் மிகவும் ருசிகரமானது.

இன்னொருவருக்கு அலுவலகத்தில் திடீர் வேலை வந்து விட்டது.  ஏண்டா சுன்னி, உனக்கு என்ன வேலை வேண்டுமானாலும் வரலாம்.  உன்னை நம்பித்தானே பணம் கொடுத்து அறையெல்லாம் பார்த்து வைத்தோம்.  இப்போது எங்கள் ஆள் வரவில்லை, பணத்தைத் திருப்பிக் கொடு என்றா கேட்க முடியும்?  மேலும், நாங்கள் ஆறேழு பேருக்கும் சேர்த்து ஒரு புராதன பங்களாவை வாடகைக்கு எடுத்திருந்தோம்.  சுற்றி வர பலா மரங்களோடு கூடிய பங்களா. இடது பக்கம் பத்து நிமிடம் நடந்தால் வகதூர் கடல்கரை.  வலது பக்கம் பத்து நிமிடம் நடந்தால் ஹில் டாப் பப்.  மற்ற இரண்டு நண்பர்களுக்கும் இது போல் ஏதோ ஒரு சாக்கு.  மச்சினிக்குக் கல்யாணம்.  மாமாவுக்குப் புடுக்கு வலி.  ஆனால் கணபதி மட்டும் மிக நியாயமாக நடந்து கொண்டார்.  என்னால் வர முடியவில்லை.  ஆனால் என் காரைத் தருகிறேன்.  அதுவும் சாலைவழிப் பயணத்துக்கு மட்டும்தான் வர முடியவில்லை.  மற்றபடி நீங்கள் கோவாவில் இருக்கும்போது நானும் இருப்பேன்.  சொன்னது போலவே விமானத்தில் வந்து சேர்ந்து விட்டார். 

கணபதியிடம் பாராட்ட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், காரின் பெட்ரோல் டேங்கை முழுசாக நிரப்பி அனுப்பினார்.  எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது.  ஒரு நண்பர் கார் கொடுத்தார்.  டாங்க் காலி என்பது வழியில் தெரிந்தது.  என்னிடம் பைசா இல்லை.  எங்கோ ஒரு ஏடிஎம்மில் காசு எடுத்துப் பெட்ரோல் போட்டேன்.  போட்ட காசுக்கு நான் வாடகைக் காரிலேயே சென்றிருக்க முடியும்.  திரும்பிய பிறகு நண்பரிடம் சொன்னேன்.  ஐயோ, நான் டிரைவரிடம் பணம் கொடுத்திருந்தேனே என்றார்.  டிரைவர் சொல்லவில்லையே என்றேன்.  சொல்லாததோடு மட்டுமல்ல, ஏடிஎம்மை வேறு தேடு தேடு என்று தேடினோம்.  சரி, விஷயம் அதோடு முடிந்து விட்டது.  வாக்கு சுத்தம் உள்ள மனிதர் என்ன செய்திருக்க வேண்டும்?  டிரைவரிடம் கொடுத்த பணத்தை வாங்கி என்னிடம் கொடுத்திருக்க வேண்டுமா?  அப்படி எதுவும் நடக்கவில்லை. 

இப்படி ஒருவர் ஒருவராகக் கழன்று கொண்டிருந்த நிலையில்தான் வினித் எனக்கு ஃபோன் செய்து நக்கலான குரலில், “உங்களுக்கும் வர முடியாதபடி ஏதேனும் காரணம் இருக்கிறதா?” என்று கேட்டான்.

அவன் வைத்த வாய் அப்படியே பலித்தது. 

ஹம்ப்பியில் தங்கியிருந்த அன்று இரவு ஒரு விவாதத்தில் சொன்னேன், காற்றில் அலையும் தேவதைகள் நாம் ஏதாவது சொன்னால், ததாஸ்த்து என்று சொல்வார்களாம், நீ அப்படிச் சொன்னதும் தேவதைகள் ததாஸ்த்து சொல்லி விட்டன.

ஒரு பின்நவீனத்துவ்வாதியா இப்படிப் பேசுவது? இது வினித்.

உடனே நான் சஸூரிலிருந்து தொடங்கி பின்னோக்கிய திசையில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பயணம் செய்து பாணினி வரை செல்ல வேண்டியிருந்த்து. 

தொல்காப்பியத்தில் மனிதரே போல்வர் அரக்கரும் தேவரும் என்று சூத்திரம் வேறு இருக்கிறதே?

இத்தனையும் எதற்குச் சொன்னேன் என்றால், திருஷ்டி என்ற ஒன்று இருக்கிறது என்பதை நிரூபிக்கத்தான்.  ஆனானப்பட்ட கொக்கரக்கோவுக்கே என்னால் திருஷ்டி பட்டு விட்டது.  அவனுமே கிட்டத்தட்ட வீட்டுக்கே வழி தெரியாதவனாக மாறிக் கொண்டிருக்கிறான். 

இரண்டு உதாரணங்களைச் சொல்ல விரும்புகிறேன்.  ஒன்று:

என்னைப் பற்றி கொக்கரக்கோ ஒரு ஆவணப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறான்.  அதற்குத் தேவையான கேமராவும் லென்ஸ்களும் வாங்கிக் கொடுத்தேன்.  ஆறு லட்சம்.  அதை அவனுடைய அலுவலகத்தின் ஸ்டோர் ரூமில் வைத்திருந்தான்.  ஏன் அவன் அலுவலகத்தில் இருந்தது என்றால், அங்கே இருந்தால்தான் தேவைப்படும் போதெல்லாம் எடுத்துக் கொள்ள வசதி.  மற்ற நண்பர்களின் வீடுகள் தூரத்தில் இருந்தன.  என் வீட்டில் வைத்துக் கொண்டால் அது ஆறு லட்சத்தையும் வங்காள விரிகுடாவில் தூக்கிப் போட்டதற்குச் சமம்.  ஏனென்றால், என் மனைவி வைதேகி ஆவணப் பட வேலை முடிந்து விட்டால் கேமராவையும் லென்ஸ்களையும் விற்று விடலாம், மதன் விற்றுத் தருவான் என்றாள்.  மதன் என் மகன்.  விற்பான்.  ஆனால் பணம் வராது.  ஏற்கனவே அவன் எனக்கு மூன்று லட்சம் தர வேண்டும்.  அது வாங்கி சில ஆண்டுகள் ஆகி விட்டன. ஆறு மாதத்தில் தருகிறேன் என்றான்.  ஆறு ஆண்டுகள் ஆனாலும் வராது என்று தெரிந்து விட்டது.  ஏமாற்றுப் பேர்வழியெல்லாம் இல்லை.  ஆனாலும் என்ன காரணத்தினால் கொடுக்கவில்லை என்று என்னால் யூகிக்க முடியவில்லை.  அப்பா என்று உரிமை எடுத்துக் கொண்டிருக்கலாம். (அப்படி உரிமை எடுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்காது). 

பண விவகாரங்களில் எனக்கும் வைதேகிக்கும் எக்கச்சக்கமான கருத்து வேறுபாடுகள் உண்டு.  வைதேகியிடம் பணம் இருந்தால் அது ஏழை எளியவர்களுக்குப் போகும்.  மதனிடம் பணம் இருந்தால் பூனை நாய்களுக்குப் போகும்.  என்னிடம் பணம் இருந்தால் அது பயண நூல்களாக மாறும்.  இந்த மூன்றில் எனக்கு மூன்றாவதே முக்கியமானதாகத் தெரிகிறது.  எனக்கு வைதேகியும் மதனும் பணம் தர வேண்டாம்.  நான் சமூகத்திலிருந்து யாசித்துச் சேர்ப்பதை என்னிடமிருந்து பிடுங்காமல் இருந்தால் போதும். 

மேற்கூறிய காரணத்தினால் நான் கேமராவையும் லென்ஸ்களையும் கொக்கரக்கோவின் பொறுப்பிலேயே விட்டு விட்டேன்.  ஆனால் இந்த உண்மையை நான் வைதேகியிடம் சொல்லவில்லை.  கேமராமேனிடம் இருக்கிறது என்று சொல்லி விட்டேன்.  அவளுக்குக் கொக்கரக்கோ என்றால் ஆகாது.  ”கேமராமேனிடமா இருக்கிறது?  அவர் பத்திரமாக வைத்துக் கொள்வாரா?  திருடு போய் விட்டால் என்ன செய்வது?”  என்று கேட்டாள் வைதேகி.  (ததாஸ்த்து, ததாஸ்த்து!)

“மயிரே போச்சுடி, மயிரு” என்றுதான் பதில் சொல்ல நினைத்தேன்.  ஆனால் என் குடும்பத்தில் நான் மனதில் நினைக்கும் எந்த விஷயத்தையும் வாய் விட்டு வெளியே சொல்வதில்லை என்பதால், “திருடு போய் விட்டால் ஆறு லட்சத்தையும் அவரே எனக்குக் கொடுத்து விடுவார்” என்று முரட்டுத்தனமாக பதில் சொன்னேன்.

காற்றில் அலையும் தேவதைகள் ததாஸ்த்து சொன்ன பிரகாரம் கொக்கரக்கோவின் அலுவலகத்தில் வைத்திருந்த கேமராவும் லென்ஸ்களும் ஒரு திருநாளில் திருடு போய் விட்டன.  ஃபெப்ருவரி பதினொன்றாம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஸ்டோர் ரூமில் வைத்தது.  மார்ச் இருபதாம் தேதி கோவா சாலைவழிப் பயணத்துக்காக எடுக்கப் போகும்போது பொருட்களைக் காணோம். 

அது சம்பந்தமான போலீஸ் விவகாரங்களையெல்லாம் இங்கே நான் எழுதப் போவதில்லை.  அது வேறு கதை.  ஆனால் இந்தக் கேமரா திருட்டு இருக்கிறதே, இதை வைத்துத்தான் கொக்கரக்கோ ஒரு எழுத்தாளனாக நிலை பெற்று விட்டான் என்ற முடிவுக்கு வந்தேன்.  கொஞ்சம் நஷ்டப்பட்டுத் தெரிந்து கொண்ட உண்மைதான்.  ஆனால் உண்மைக்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறதே?  அதனால்தானே உண்மை என்றால் பலருக்கும் கசக்கிறது? 

சரி, எப்படி அந்த முடிவுக்கு வந்தேன்?  பொதுவாக கொக்கரக்கோ வைதேகியை விட கில்லாடி.  எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் முதலில் எதிர்மறையாகத்தான் யோசிப்பான்.  ஸ்டோர் ரூமில் வைக்கிறோமே, இதை எவனாவது லவட்டி விட்டால்?  இப்படித்தான் அவன் யோசனையே போகும்.  இப்போது போகவில்லை.  இல்லையா?  அவன் எழுத்தாளனாகி விட்டான் என்பதற்கு இதை விட வேறு என்ன ருஜு தேவை?

ஆனால் இதை விட ’ஸ்ட்ராங்’ சம்பவம் ஒன்று கோவா பயணத்தின்போது நடந்தது.  மற்ற மாநிலங்களில் கிடைப்பதை விட கோவாவில் மதுபானத்தின் விலை பாதிதான்.  அதாவது, கோவாவில் தயாரிக்கப்படும் மதுபானங்கள்.  தரத்திலோ ஐரோப்பா அளவுக்கு இருந்தன.  ஐந்து லிட்டர் வரை விமானத்தில் எடுத்துப் போக கோவா அரசு அனுமதி அளித்திருக்கிறது.  இதை எந்த மாநில அரசும் தடுப்பதற்கு வழிவகை இல்லை.  ஏனென்றால், விமான நிலையங்கள் மத்திய அரசின் கீழ் வருகின்றன.  அதனால், பாண்டிச்சேரியிலிருந்து ’சரக்கு’ எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தால் மரக்காணத்திலேயே பிடித்து ஏதோ கஞ்ஜா கடத்தியது போன்ற வீரியத்துடன் வழக்குப் பதிவு செய்யும் போலீஸால் இந்த விமானம் மூலமான மதுபான இடமாற்றத்தில் ஒன்றும் புடுங்க முடியவில்லை.  கோவா அரசின் இந்தத் திட்டத்தினால் கோவாவுக்குப் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.  இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்த உலகத்திலேயே படு மட்டரகமான மதுபானத்தை விற்கும் தமிழ்நாடு அரசுதான் இந்த உலகத்திலேயே எங்கேயும் காண முடியாதபடி “இந்த சரக்கைக் குடித்தால் உயிருக்குக் கேடு, வீட்டுக்குக் கேடு, நாட்டுக்கும் கேடு” என்று சொல்லி விற்கிறது.  நாட்டுக்கு என்னய்யா கேடு?  மது விற்பனையிலிருந்து வரும் கோடிக்கணக்கான ரூபாயிலிருந்துதானே நிர்வாகமே நடக்கிறது?  அது போக, எந்த வியாபாரியாவது ‘என் சரக்கைக் குடித்தால் உன் உயிருக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு’ என்று சொல்லி விற்பானா?  தமிழ்நாட்டில் அது நடக்கிறது.  என்ன ஒரு விசேஷமான நிலம் இது!

அதை விடுங்கள் சனியன், எவன் எப்படிப் போனால் நமக்கென்ன?  கொக்கரக்கோவின் திட்டம் என்னவென்றால், ஒவ்வொருவரும் ஐந்து ஐந்து லிட்டர் மதுவை சென்னைக்குக் கொண்டு போனால் ஒவ்வொரு லிட்டருக்கும் ஆயிரம் ரூபாய் லாபம்.  அஞ்சு லிட்டருக்கு அஞ்சாயிரம்.  ஆக, கோவா பயணத்துக்கான டிக்கட் செலவு மிச்சம். 

திரும்பும்போது எல்லோருடனும் கிளம்பியிருந்தால் எனக்குப் பிரச்சினை இருந்திருக்காது.  வைதேகி என்னை ஒருநாள் முன்னதாகவே வரச் சொல்லி விட்டாள்.  அவள் சொல்லுக்கு மறுசொல் கிடையாது.  ஒருநாள் முன்னதாகவே டிக்கட் போட்டு – அதிலேயே ஒரு அஞ்சாயிரம் ரூபாய் காலி – கிளம்பினேன்.  கொக்கரக்கோ இப்போது எழுத்தாளனாகிக் கொண்டிருந்தாலும் இன்னமும் கொஞ்சம் சூதனமாகத்தான் இருந்தான்.  சென்னை விமான நிலையத்தில் முத்துக்குமார் என்று ஒரு நண்பர் வந்து என்னிடமுள்ள போத்தல்களைப் பெற்றுக் கொள்வார்.  அதுதான் ஏற்பாடு.  வேறு யாராவதாக இருந்தால் இப்படிச் சொல்லி அதோடு விட்டு விடுவார்கள்.  அந்த முத்துக்குமார் அந்த ஐந்து போத்தல்களையும் எதில் போட்டு எடுத்துக் கொண்டு போவார்?  அதற்காக கொக்கரக்கோ என் சூட்கேஸில் ஒரு பெரிய பையையும் வைத்தான். 

கோவாவின் டபோலிம் விமான நிலையத்தில் வந்து இறங்கி என் சூட் கேஸை இழுத்தால் பிணம் கனம் கனத்தது.  என்னடா இது சோதனை என்று நினைத்துக் கொண்டு பிணத்தை இழுத்தேன்.  இண்டிகோ நிறுவனம்தான் எடுத்த எடுப்பில் தென்பட்டது.  நான் போக வேண்டியது ஸ்பைஸ்ஜெட்.  ரொம்பவெல்லாம் வளர்த்திக் கொண்டு போக விரும்பவில்லை.  எல்லோருக்குமே தனக்கு வந்தால்தான் அதன் வலி தெரியும்.  யாரைக் கேட்டாலும் அதோ அதோ என்று காட்டிக் கொண்டே இருந்தார்கள்.  நானும் பெட்டியை இழுக்க முடியாமல் இழுத்தபடி போய்க் கொண்டே இருந்தேன்.  அதோ அதோ என்று ஒன்றரை கிலோமீட்டர் தூரம் நடந்த பிறகுதான் ஸ்பைஸ்ஜெட் கௌண்ட்டர் கண்ணில் பட்டது.  பெட்டியைப் பார்த்து விட்டு, ”உள்ளே மதுபானம் இல்லைதானே?” என்று கேட்டார் ஸ்பைஸ்ஜெட் கிளார்க்.  அவருக்கு என்னைப் பார்த்தால் குடிக்காத ஆள் என்று தெரிந்தது போலும்.  இருக்கிறது என்று சொன்னதும் எத்தனை போத்தல் என்று கேட்டார்.  நான்கு போத்தல் என்றேன்.  உள்ளே இருந்தது ஐந்து.  என்னவோ அங்கே ஒன்றைக் குறைத்துத்தான் சொல்ல வந்தது.  ஒரு வைன் கோப்பை படம் போட்ட பெரிய ஸ்டிக்கரை எடுத்து சூட்கேஸின் மேல் ஒட்டினார்.  கொடி சைஸுக்கு இருந்த அந்த ஸ்டிக்கரை சென்னை சேர்ந்ததும் மறக்காமல் எடுத்து விட வேண்டும் என்று உறுதி செய்து கொண்டேன்.  பிறகு, நான்கு மது போத்தல்கள் என் பெட்டியில் இருக்கின்றன என்று எழுதிய காகிதத்தில் என் கையொப்பத்தையும் வாங்கிக் கொண்டார் கிளார்க்.   ஒன்றரை கிலோ மீட்டர் பிணத்தை இழுத்ததால் நெஞ்சு வலிக்க ஆரம்பித்திருந்தது. 

இரண்டு விஷயங்களை உடனடியாகப் பின்பற்ற ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.   நம் இருதயத்தில் ஐம்பது சதவிகித அடைப்பு இருக்கிறது, மீதி ஐம்பதின் மூலம்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்.  இரண்டாவது, என்னால் இனிமேல் தனியாகப் பயணம் செய்வது சாத்தியம் இல்லை, அதனால் கண்டபடியெல்லாம் பயணத்தேதியை மாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதைத் தீர்மானமாக வைதேகியிடம் சொல்லி விட வேண்டும்.  தலைவலி வந்தால் உயிர் போகாது, நெஞ்சு வலி வந்தால் உயிர் போக வாய்ப்பு உண்டு என்பதை அவளிடம் வலுவாகச் சொல்ல வேண்டும்.  அதற்கு அவள் என்ன பதில் சொல்லுவாள் என்று தெரியும்.  ஆனாலும் அதைக் கண்டு கொள்ளக் கூடாது.  (”உனக்கெல்லாம் இப்போது ஒன்றும் ஆகாது பெருமாள்.  நீ நூறு வயசு வரைக்கும் இருப்பாய்!”  இந்த பிஸ்க்கா பேச்செல்லாம் வேண்டாம்.  செத்த பிறகு ஆவியாக வந்தா “நீ சொன்னதுபோல் நடக்கவில்லையே, இப்போது என்ன சொல்கிறாய்?” என்று சட்டையைப் பிடிக்க முடியும்?)    

சென்னை விமான நிலையத்தில் நண்பர் முத்துக்குமார் வந்து போத்தல்களை வாங்கிக் கொள்வார் என்ற திட்டத்தில் ஒரு சிறிய மாற்றம்.  நண்பர் பார்த்திபனின் நண்பர் தன் காரை எடுத்துக் கொண்டு வருவார், அவரிடமே போத்தல்களைக் கொடுத்து விட வேண்டியது, அவரே என்னைக் கொண்டு போய் வீட்டில் விட்டு விடுவார். 

கோவாவில் ஒன்றரை கிலோமீட்டரா, சென்னையில் அதற்கும் கொஞ்சம் மேலே.  அதிலும் மோசமான கரடு முரடான சாலையில் பெட்டியை இழுக்க வேண்டி வந்தது.  பார்த்திபன் ஃபோன் செய்து “விமான நிலையத்தின் உள்ளே காரை விட மாட்டேன் என்கிறார்கள், நான் தேசியக் கொடி அருகே நிற்கிறேன், அங்கே வாருங்கள்” என்றார்.

தேசியக் கொடி பக்கத்தில் வேறு ஏதாவது அடையாளம் இருக்கிறதா?  

தேசியக் கொடியின் கம்பம் ரொம்பப் பெருசு சார்.  அதை நீங்கள் மிஸ் பண்ணவே முடியாது சார். 

இல்லிங்க, தேசியக் கொடியையே என்னால் பார்க்க முடியவில்லை.  அதற்குப் பக்கத்தில் வேறு ஏதாவது லேண்ட்மார்க் இருக்கிறதா?

ஓ, இருக்கிறது சார்.  தேசியக் கொடியின் அருகில்தான் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. 

ஓ, அவர் என்னை ரோட்டுக்கே வரச் சொல்கிறார்.  அந்தக் காலத்து மாடுகள் தள்ளுவண்டியை இழுப்பது போல் இழுத்துக் கொண்டு போனேன்.  மீண்டும் நெஞ்சு வலி.

காரைக் கண்டு பிடித்து பெட்டியை உள்ளே போட்டுத் திறந்து போத்தல்களையெல்லாம் எடுத்தேன்.  பெட்டிக்குள் இருந்த ஆடைகள் எல்லாம் ஈரமாக இருந்தன.  ஆஹா, போத்தல் திறந்து மது வழிந்திருக்கிறது.  இந்தக் கொலைகாரப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்ற கவலையிலேயே முன் இருக்கையில் போய் அமர்ந்தேன்.  எப்படியும் வீட்டுக்குப் போன உடனேயே பெட்டியைத் திறக்கப் போவதில்லை.  எல்லாம் உயர்ரக மது என்பதால் கொலைநாற்றம் நாறவில்லை என்றாலும் வைதேகி படு பயங்கரமான புத்திசாலி என்பதால் இவ்விவகாரத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.  மது அருந்துபவர்களையெல்லாம் பிடித்துத் தூக்கில் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தாலிபான் அவள்.  ஒன்று செய்யலாம்.  காலையில் எழுந்ததும் மது வழிந்த ஆடைகளையெல்லாம் தண்ணீரில் முக்கி எடுத்து விட்டு, கோவா கடலில் குளித்த போது நனைந்து விட்டது என்று சொல்லி விடலாம்.  அதைத் தவிர வேறு எந்த வழியும் எனக்குப் புலப்படவில்லை. 

வரும் வழியில் பார்த்திபனின் நண்பர் “உங்களை ரொம்ப தூரம் வெய்ட் தூக்க வைக்க வேண்டாம் என்று பார்த்திபன் சார் சொல்லியிருந்தார் சார், ஆனால் ப்ரைவேட் டாக்ஸிகளை உள்ளே விட மறுக்கிறார்கள்.  அதனால்தான் உள்ளே வர முடியவில்லை” என்றார். 

அவர் தனிப்பட்ட முறையில் வாடகைக் கார் ஓட்டுகிறாராம்.  பார்த்திபனின் எதிர்வீடாம்.  வீடு வரும் வரை அவருடைய கோவா அனுபவங்களை சொல்லிக் கொண்டே வந்தார்.  ஆரம்பத்திலேயே நான் கோவாவிலிருந்து திரும்புகிறேன் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.  இன்னும் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டார்.  முக்கியமாக, பார்த்திபன் எனக்கு உறவினரா, நண்பரா?  கோவாவில் மதுபானங்கள் ரொம்ப விலை ஆயிற்றே?  இல்லையா, குறைந்து விட்டதா? எவ்வளவு குறைந்திருக்கிறது?  இத்யாதி.   

பெட்டிக்குள் கசிந்து விட்ட மதுபானத்தினால் அடைந்த மன உளைச்சலில் வீடு வந்து சேர்ந்த பிறகுதான் கவனித்தேன், பெட்டியின் பிடியில் இன்னமும் அந்த வைன் கிண்ணம் போட்ட லேபிள் அப்படியே கொடி போல் வீசிப் பறந்து கொண்டிருந்தது.  ஐயோ, வாழ்க்கையே போச்சு என்ற அச்சத்துடன் அதை அப்படியே கிழித்து பார்த்திபனின் நண்பரிடம் கொடுத்து அவர் காதுகளில் “இதைக் குப்பைத்தொட்டியில் போட்டு விடுங்கள், ப்ளீஸ்” என்றேன்.

வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் என் மனதில் பொறி தட்டியது.  கொக்கரக்கோ ஒரு பூரணமான எழுத்தாளனாகி விட்டான். 

பின்குறிப்பு: நேற்றைய தினம் என்னுடைய மருமகளையும் எட்டு மாதக் குழந்தையான என் பேரனையும் அழைத்து வருவதற்காக விமான நிலையம் சென்றிருந்தேன்.  ஒருவரை வரவேற்பதற்காக விமான நிலையம் செல்வது அதுதான் முதல் முறை.  பயணியாக இல்லாமல் ஒரு சராசரியாக நின்று கொண்டிருந்தேன்.  அப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் நான் ஒரு விஞ்ஞானியாக மாறிய அற்புதம் நிகழ்ந்தது.   எத்தனையோ வயசாளிகள், கர்ப்பிணிகள் எல்லாம் மூன்று நான்கு பெட்டிகளை ஒரு தள்ளுவண்டியில் போட்டு அநாயாசமாகத் தள்ளிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.  அப்போது நான் கண்டறிந்த விஞ்ஞான உண்மைதான், கனத்தை முன்னே தள்ளுவது சுலபம்; பின்னாலிருந்து இழுப்பது கடினம்!  

***

ஒரு சின்ன விஷயம்

முன்பெல்லாம் எனக்கு நன்கொடை மற்றும் சந்தா அனுப்புபவர்கள் என் வங்கிக் கணக்குக்கே அனுப்புவார்கள்.  ஆனால் அதில் சில சிக்கல்கள் இருந்தன.  அதன் காரணமாக, நண்பர்கள் உதவியுடன் ரேஸர் பே என்ற சாதனம் வழியாக அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தேன்.  ரேஸர் பே மூலம் அனுப்புவதற்கு எந்தச் சிரமமும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.  ஒரு பட்டனை அமுக்கி, தொகை எத்தனை என்பதைத் தெரியப்படுத்தினால் தொகை சம்பந்தப்பட்ட நபருக்குச் சேர்ந்து விடும். 

ஆனால் பாருங்கள், வங்கிக் கணக்கு மூலம் அனுப்பிக் கொண்டிருந்த காலத்தை விட பாதிதான் இப்போது ரேஸர்பே மூலம் வருகிறது.  வரும் தொகையை விட இரண்டு மடங்கு செலவு ஆகிக் கொண்டிருக்கிறது.  காரணம், தொடர்ந்து பெரிய தொகை அனுப்பிக் கொண்டிருந்த சில நண்பர்களை விமர்சித்து எழுதி அவர்களைப் பகைத்துக் கொண்டு விட்டேன். 

பூனைகள் இல்லாவிடில் எனக்குப் பணமே தேவையில்லை.   பூனை உணவுக்காகத்தான் பெரும் பணம் செலவாகிக் கொண்டிருக்கிறது.  எவ்வளவு என்றால் உங்களால் நம்ப முடியாது.  வாழ்க்கை மிகவும் அபத்தமானது.  என் அபத்தம், எழுபது வயதில் என்னிடம் உள்ள பத்து பூனைகளின் உணவுக்காக என் வாசகர்களிடம் யாசிப்பது அல்லது சந்தா கேட்பது.  ஆனால் எந்த நிலையுமே என் மன இயல்பை, மனோ லயத்தை பாதித்தது கிடையாது. 

சமீபத்தில் ஒரு சிநேகிதி என்னிடம் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னாள்.  நான் ரோபோவின் குரலில் அப்படியா என்றேன்.  நொந்து போய் விட்டாள்.  அதனால் போயும் போயும் பண விஷயமெல்லாம் என் இயல்பைப் பாதித்து விடாது.  இருந்தாலும் என்னுடைய வாழ்க்கை எந்த ரகசியங்களும் இல்லாத திறந்த புத்தகம் என்பதால் இதையும் எழுத நேர்ந்தது.

ஆரோவில்லில் உள்ள எங்களுடைய வன இல்லத்துக்கு என்னுடைய மூன்று மாதப் பங்களிப்பு ரூ.10000.  அதை அனுப்பச் சொல்லி நேற்று வினித் மெஸேஜ் அனுப்பியிருந்தார்.  நாளை அனுப்புகிறேன் என்று பதில் அனுப்பினேன்.  ஆனால் அனுப்ப இயலவில்லை.  போன மாதம் வரவை விட செலவு இரண்டு மடங்கு.  இப்படியே போனால் சீலே போக முடியாது.  என்னிடம் வரும் பணம் அத்தனையும் பயணத்துக்கானதுதான்.  இப்போதைய கோவா பயணத்தில் ஒரு சிறுகதையும் ஒரு பயணக் கட்டுரையும் லாபம்.  இதற்கு செலவு ஒரு இருபதாயிரம் இருக்கும்.  எனவே பணம் அனுப்ப விரும்பும் நண்பர்கள் ரேஸர்பே மூலம் அனுப்பலாம்.  அல்லது, என் வங்கிக் கணக்கின் மூலம்.

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai