Suck my tongue…

தலாய்லாமாவின் ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்து, கூடவே தன் நாக்கையும் நீட்டி, suck my tongue என்று சொல்லும் காணொலியை இதற்குள் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.  இந்தச் சம்பவம் முழுமையும் ஒரு பொதுவெளியில் நடந்திருக்கிறது.  பலரும் இதை ஆர்வத்துடன் தங்கள் கைபேசியால் விடியோ எடுக்கிறார்கள்.  யாருக்கும் இந்தச் சம்பவத்தின் விளைவுகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை. 

நூறு ஆண்டுகளுக்கு முன்னே திபெத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது வேறு விஷயம்.  ஆனால் இன்று தலாய்லாமா உலகப் பிரசித்தி பெற்றவர்.  உலகம் பூராவும் பயணம் செய்து கொண்டிருப்பவர்.  அவருக்கு அவர் செய்த காரியத்தின் விளைவுகள் பற்றித் தெரியாதா?  ஒரு சிறுவனின் வாயில் முத்தமிட்டு, தன் நாக்கை நீட்டி என் நாக்கை சப்பு என்று சொல்வது என்ன விளையாட்டா?  பொதுவில் மன்னிப்புக் கேட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடுமா?

திபெத்துக்கு சீனா பெரும் அநீதி இழைத்திருக்கிறது.  திபெத் என்ற மாபெரும் தேசத்தைத் தன் வசம் வளைத்துப் போட்டு வைத்திருக்கிறது சீனா.  திபெத்துக்கும் சீனாவுக்கும் கலாச்சார ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை.  இரு தேசங்களுக்கும் இடையில் மொழி வேறு, கலாச்சாரம் வேறு, மதமும் வேறு.  ஆனாலும் திபெத் இப்போது சீனாவின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.  இந்தக் கபளீகரத்தை சீனா நடத்த முடிந்ததன் காரணம், திபெத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் சிறுவர்கள் மடத்தில் சேர்க்கப்பட்டார்கள். அதைத் திபெத்தியர்கள் தங்கள் மதக் கடமையாக நினைத்தார்கள்.  மற்றொரு காரணம், கொடூரமான வறுமை.  அப்படி மடத்தில் சேர்ந்த சிறுவர்கள் பெரும்பான்மையான மதகுருமார்களால் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டார்கள். இதுதான் திபெத்தை கம்யூனிஸ சீனா கபளீகரம் செய்து விழுங்கியதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.   சீனாவின் அத்துமீறலுக்கு ஒரு தார்மீக பலத்தை அளித்தது.    

இப்படி ஒரு வரலாற்றுப் பின்னணியில் தலாய்லாமா இன்று இப்படிச் செய்திருப்பதன் விளைவு, சீனாவுக்குத்தான் சாதகமாகப் போகும். தன்னுடைய முட்டாள்தனமான செயலின் மூலம் சீனாவுக்குப் பெரும் தார்மீக பலத்தை அளித்து விட்டார் தலாய்லாமா.  காணொலியைப் பார்த்தபோது தலாய் லாமாவுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்று கூட நினைத்தேன்.  அதிகாரம் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் சீரழிவுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு இந்தக் காணொலி ஒரு உதாரணம். 

அதர்மம் வெல்வதற்கு தர்மமே வேலை செய்கிறது!    

https://twitter.com/NiSiv4/status/1644666033720942592?t=nfYL-AFRSOIpVMnmHOJkhg&s=08