ப்ரஸன்னா விதானகே : தஸ்தயேவ்ஸ்கியைத் தாண்டிய கலைஞன்

தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவலான A Gentle Creature-ஐ With You, Without You என்ற திரைப்படமாக எடுத்துள்ள ப்ரஸன்னா விதானகே தனது படைப்பில் தஸ்தயேவ்ஸ்கியையும் தாண்டி விட்டார் என்பது என் கருத்து.  மொக்கைப் படங்களைப் பற்றி முழ நீளத்துக்கு விமர்சனம் எழுதித் தங்கள் நேரத்தை வீணாக்கிக் கொள்ளும் என் வாசக நண்பர்கள் யாருமே நேற்று இந்தத் திரையிடலுக்கு வராதது எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

தமிழில் நல்ல படங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே வியாபார – ஜனரஞ்சக ஃபார்முலாவுக்குள் அடங்கியவையே.  மணி ரத்னத்தின் படங்களையும் சேர்த்தே இதைச் சொல்கிறேன்.  வீடு, சந்தியா ராகம், ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்களைத் தவிர தமிழில் சர்வதேசத் தரத்தில் ஒரு படத்தையும் சொல்ல முடியாது.  சர்வதேசத் தரம் என்றால் என்ன என்பதற்கு With You, Without You ஒரு உதாரணம்.  சுமார் பத்து சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றுள்ளது இந்தப் படம்.  இது பற்றித் தமிழில் எழுதுவது போன்ற அறிவுகெட்ட காரியம் வேறு எதுவும் இல்லை என்று தோன்றுவதால் இந்திய அளவில் வெளிவரும் ஒரு ஆங்கில இதழில் எழுதலாம் என்று இருக்கிறேன்.  தஸ்தயேவ்ஸ்கியின் குறுநாவலையும் படித்து விட்டுத்தான் நேற்று படம் பார்த்தேன்.  (அதற்கு முன் அந்தக் குறுநாவலை நான் படித்ததில்லை.)  இந்தக் குறுநாவலை Robert Bresson மற்றும் நம் மணி கௌல் இருவரும் திரைப்படமாக்கி இருக்கிறார்கள் என்று அறிந்தேன்.  அவர்களின் படங்களையும் சிறிது நேரத்தில் பார்க்க இருக்கிறேன்.  பார்த்து விட்டு எழுதுவேன்.  ப்ரஸோனின் படத்தை விட ப்ரஸன்னாவின் படம் நன்றாக இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.  மணி கௌல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.  இந்தப் படம் பற்றி நிச்சயம் தமிழில் எழுத மாட்டேன்.  நீங்கள் உங்களுடைய ”சொர்க்கத்தில்” சிறப்பாக வாழுங்கள்.

Comments are closed.