நயநதினியின் வாட்ஸப் மெஸேஜ்

நண்பர் ரிஷான் ஷெரிஃப் ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருக்கிறார்:

அன்பு Charu Nivedita

’நயந்தினி’ என்றொரு பெயர் சிங்களத்தில் இல்லை. அவரது பெயர் நயனி, நயனா அல்லது நந்தினியாக இருக்கக் கூடும். ஏன் சொல்கிறேன் என்றால் சிங்களவர்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது பிறந்த நேரத்தின் அடிப்படையில் மிகவும் நல்ல அர்த்தத்துடன் கூடிய பெயரையே சூட்டுவார்கள். அவர்களுக்கு தந்தை வழிப் பெயரொன்றும், தாய்வழிப் பெயரொன்றும் குடும்பப் பெயரொன்றும் சேர்ந்து மிக நீண்ட பெயரொன்று வைக்கப்படும். அரசாங்க அடையாள அட்டைகளிலும், பரீட்சைத் தாள்களிலும் அவர்களது முழுப் பெயரை எழுதக் கூட இடமிருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நயந்தினி என்ற பெயர் அழகானதுதான். ஒருவேளை அந்தப் பெண் உங்களிடம் பொய்யாக ஒரு பெயரைக் கூறியிருக்கவும் கூடும். ஆனால் உங்கள் நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படும்போது இந்தப் போலிப் பெயர்கள் குறித்து சிங்கள வாசகர்கள் மத்தியில் உங்களுக்கெதிராக சர்ச்சைகள் உருவாகக் கூடும். எனவே யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள்.

நன்றி ரிஷான் ஷெரிஃப். இது பற்றி மிகவும் கவனமாகவே இருப்பேன். ப்ரஸன்னா விதானகே, சினிமா விமர்சகர் பூபதி போன்றவர்கள் என் நண்பர்களே. பூபதியும் சிங்களவர்தான். (அவர் முழுப் பெயரும் மிக நீளமானதே.) இவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே தமிழில் இந்த நாவல் வெளிவரும். நயநதினி என்பது புனைப்பெயர். மேலும், இந்த நாவல் சிங்களவரால் மட்டும் அல்ல, சிங்களவர் தமிழர் இரு சாராராலும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகும் என்று நினைக்கிறேன்.

நாவலிலிருந்து ஒரு பத்தி:

என் பெயர் நயந்தினி என்று சொன்னேன். மதுக்கூடத்தின் இரைச்சலில் நான் சொன்னது உன் காதில் விழவில்லையா? ஏன் என்னை நயநதினி என்றே அழைத்துக் கொண்டிருக்கிறாய்?

நீ நயந்தினி என்று சொன்னது என் காதில் நயநதினி என்றே விழுந்தது. நயந்தினியை விட நயநதினியில்தான் லயம் இருக்கிறது. உனக்கு நயநதினிதான் பொருத்தமான பெயர்.

இதுதான் நயந்தினி என்ற பெயர் நயநதினியாக மாறிய கதை.

கொக்கரக்கோ, பெருமாள், தினேஸ், குமரன் நால்வரும் இலங்கையின் வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நயநதினியும் பெருமாளும் பரிமாறிக் கொண்ட பல நூறு வாட்ஸப் மெஸேஜ்களைத் தொகுத்துத்தான் பெட்டியோ… என்ற நாவலை என்னிடம் எழுதச் சொன்னான் பெருமாள்.

நயநதினி பெருமாளுக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய மெஸேஜ்களில் இரண்டைத் தமிழில் மொழிபெயர்த்து கீழே கொடுத்திருக்கிறேன்.

நயநதினியின் ஆங்கிலம் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்தது என்பது என்னுடைய முதல் அவதானம். அந்த ஆங்கிலத்தை இப்போதைய நவீன கவிகள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். குறிப்பாகச் சொன்னால், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியின் மொழிக்கு நேர் எதிர்.

பல நண்பர்கள் நயநதினியின் பெயர் விளக்கம் கேட்டதால் இதை எழுத நேர்ந்தது.

”நான் உன்னிடம் சொன்னது, உனக்கு எழுதியது என்று எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள், என் புகைப்படத்தை மட்டும் வெளியிட வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறாள் நயநதினி.

இனி நயநதினி:

அன்பே மானுட வாழ்வின் அர்த்தமெனச் சொன்ன புத்தனின் சீடர்கள் வெறுப்பையும் துவேஷத்தையும் தங்கள் அடையாளமாக வரித்துக் கொண்ட காலகட்டத்தில் பிறந்தவள் நான்.  குடும்பத்தின் அச்சு வெறுப்பின் தீச்சுவாலைகளுக்குப் பலியாகி விட்டது.  அதன் விளைவாக துவேஷத்தின் விஷ நாவுகளில் மாட்டிக் கொண்டு விடாமல் இளம் வயதிலிருந்தே நான் கவனமாக இருந்தேன்.

என் காலத்தில் துவேஷம் பாசி படர்வதைப் போல் படர்ந்து கொண்டிருந்தது. காலை வெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் பூமிப்பந்தில் விழுந்து நிறைவதைப் போல் நிறைந்து கொண்டிருந்தது வெறுப்பு. அதுவரை அன்பின் நிழலில் பாடிக் கொண்டிருந்தவர்கள் வெறுப்பின் வெம்மையில் கருகிக் கொண்டிருந்தார்கள்.  திடீரென்று இந்த நிலத்தின் நிறம் சிவப்பாக மாறியது. திடீரென்று தாமரை இலைகள் மனித உடல்களைத் தின்னத் தொடங்கின. 

குழந்தைகள் அதுவரை விளையாடிக் கொண்டிருந்த பொம்மைகளைத் தூக்கிப் போட்டு விட்டு துப்பாக்கிகளை ஏந்தியபடி போர்ப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்கள்.  அப்பாடல்களில் தெரிந்த பெருமிதத்தையும் துக்கத்தையும் வன்மத்தையும் கண்டு தாமரை இலைகள் நடுங்கின.   

என்னிடமிருந்த சிசுமை பறிக்கப்பட்டதைக் கூட அறியாமல், அலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தேன் நான்.

தேசத்தை இருள் சூழ்ந்தது.  அந்த இருளில் குடும்பமும் மூழ்கிக் கிடந்தது. 

அம்மி எழுத்தைப் பற்றிக் கொண்டாள்.  நான் அம்மியைப் பற்றிக் கொண்டு எழ முயற்சித்தேன்.

***

என் இளமைக் காலம்:

எங்கள் வீட்டின் எதிரே ஒரு பெரிய மைதானம் இருந்தது.  அதிலே ஒரு நா மரம்* இருந்தது. அதன் பெயர் சுபூதி.  ஆம், ஆச்சியால் வளர்க்கப்பட்ட அந்த மரத்துக்கு அவர்கள் வைத்த பெயர் சுபூதி.  மரத்துக்கெல்லாமா பெயர் வைப்பார்கள் என்று சிறுவயதில் ஆச்சியைக் கேட்டிருக்கிறேன். மற்றவர்கள் வைக்காவிட்டால் என்ன, நாம் வைப்போமே என்றார்கள் ஆச்சி.  சுபூதி புத்தர் பெருமானின் பன்னிரு சீடர்களில் ஒருவரெனத் தெரியும், ஆனால் அந்தப் பெயரை இந்த நா மரத்துக்கு வைத்ததற்கு என்ன காரணம் என்றேன்.

சுபூதி என்றால் சூன்யம், சுபூதி என்றால் தனிமை என்றார்கள் ஆச்சி. 

சதுர வடிவில் இருந்த அந்த மைதானத்தில் வேறு எந்த மரமுமே இல்லாமல் அந்த நா மரம் மட்டும் விசேஷமாகத் தனித்திருந்தது. அப்படியானால் பொருத்தமான பெயர்தான்.  ஆனால் சூனியத்துக்கு அந்த வயதில் எனக்கு அர்த்தம் தெரிந்ததில்லை. 

ஆச்சிக்குப் பிறகு சுபூதியை என் அம்மி வளர்த்தார்கள்.  தினந்தோறும் நீரூற்றிப் பாராட்டி வளர்த்திருக்கிறார்கள்.  எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான அந்த மைதானம் சிறுவர்கள் விளையாடப் பயன்பட்டதால் அப்படியே விட்டு விட்டதாக அம்மி சொல்லிக் கேட்டிருக்கிறேன்.   

சுபூதியின் இளஞ்சிவப்பு இலைகளைப் பார்ப்பதற்கு எனக்குப் பெரும் விருப்பம் என்பதால் அடிக்கடி அங்கே போய் அமர்ந்து கொள்வேன். 

இப்படியாக அந்த சுபூதி மூன்று தலைமுறைகளைப் பார்த்திருக்கிறது.

என் காலத்தில் அந்த மைதானம் ராணுவப் பயிற்சியின் பயன்பாட்டுக்கு வந்தது.  உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வருவதற்கு சில காலம் முன்பு அந்த மைதானத்தில் நடந்த கொட்டிகளின்* தாக்குதலில் சுபூதி தீயில் கருகியது.  தீயில் கருகிய நிலையிலேயே இப்போதும் சுபூதி அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறது. 

இப்போது ஆச்சி சொன்ன இன்னொரு வார்த்தையின் அர்த்தமும் புரிந்து விட்டது.   

*தமிழில் நாக மரம்.  நாவல் மரம் வேறு, நாகலிங்க மரம் வேறு. 

*கொட்டி – புலி

இனிமேல் பெட்டியோ… நாவல் பற்றிய தகவல் ஏதும் தர வேண்டாம் என நினைக்கிறேன். இது போதும். நாவல் பற்றி விசாரித்துப் பல மின்னஞ்சல்கள் வந்தன. நாவல் பணியில்தான் இருக்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் முடித்து விடுவேன். நாவல் என்.எஃப்.டி. மூலம் வெளிவரும். என்.எஃப்.டி. என்றால் என்ன என்று பல விசாரிப்புகள். கார்ட் நம்பர் கொடுத்தால் ஏமாற்று வேலை நடக்குமே என்ற சந்தேகம். என்.எஃப்.டி.யில் இந்தப் பிரச்சினை எதுவும் இல்லை. நாவலை முடித்து விட்டு அது பற்றி விளக்கமாக எழுதுவேன்.