விரல்களின் வழியே வழிந்தோடும் இசை…

இன்று பெட்டியோ… நாவலின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை எழுதி முடித்தேன்.  வாழ்வே முடிந்து விட்டது போல் தோன்றியது.  கூடவே Ludovico Einaudiயின் இசையைக் கேட்டுக் கொண்டே எழுதினேன்.  போலிஷ் இயக்குனர் Andrzej Wajda இயக்கிய தெ கண்டக்டர் (1980) என்ற படத்தில் ஒரு காட்சி வரும்.  எண்பது வயது இசைக் கலைஞன் ஒருவனுக்கும் முப்பது வயது பெண்ணுக்குமான காதல் பற்றிய கதை.  இசைக் குழுவை தன் கரங்களால் இயக்கிச் செல்லும்போது அந்த இசைக் கலைஞனின் விரல்களின் வழியே இசை வழிந்தோடுகிறது என்று கூறுவாள் அப்படத்தின் நாயகி.  அவ்வாறே இன்று நான் எழுதிய வார்த்தைகளின் வழியே இசை வழிந்தோடுவதை நீங்கள் நாவலை வாசிக்கும்போது உணரலாம்.  எப்போதாவது அந்த நாவல் உங்கள் கரங்களில் கிடைத்தால், மௌனம் சூன்யம் கலவி மரணம் என்று தொடங்கும் அந்த அத்தியாயத்தைக் கடக்கும்போது இந்த வார்த்தைகளை நினைவு கூருங்கள்.  அந்த அத்தியாயம் ஜூன் ஆறாம் தேதியான இன்று மாலை உருவானது.