என் புத்தகங்கள் பிரசுரமானது எப்படி என்ற புராணம்…

எனக்கு ஆரம்ப காலத்தில் பதிப்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லை.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், லத்தீன் அமெரிக்க சினிமா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள், ஜே.ஜே. சில குறிப்புகள் – ஒரு விமர்சனம், மற்றும் பலவிதமான சினிமா விமர்சனங்கள் எல்லாமே நான் பிரசுரம் செய்தவைதான்.  நண்பர்களிடம் பணம் கேட்கலாம் என்றால் நண்பர்கள் யாரும் இல்லை.  இருந்த நண்பர்களோ என்னை விட ஏழைகள்.  என் புத்தகங்கள் வெளிவந்தது எல்லாமே என் பணத்தில்தான். அதாவது, அவந்திகாவின் பணம்.  இன்று அவள் என் எழுத்துக்குப் பலவிதமான தொல்லைகளை என் மேல் இழுத்து விட்டாலும் (இருபது பூனைகள்) ஆரம்பத்தில் என் புத்தகங்கள் வெளிவருவதற்குத் தேவையான பணத்துக்காக அவள்தான் தன் நகைகள் ஒவ்வொன்றையும் கழற்றிக் கழற்றிக் கொடுத்தாள்.   

கோணல் பக்கங்களுக்கு மட்டும்தான் வாசகர்கள் பணம் கொடுத்தார்கள்.  கிழக்கு, காலச்சுவடு போன்ற எல்லா பதிப்பகங்களும் என் நூல்களை வெளியிட மறுத்து விட்டன.  என் மீதும் தவறு இருக்கிறது.  நான் அந்தந்தப் பதிப்பகங்களின் ஊழியர்களிடம்தான் கேட்டேனே ஒழிய அதை நட்த்துபவர்களிடம் கேட்கவில்லை.  காலச்சுவடு என்றால் அரவிந்தன் என்ற நண்பரிடம் கேட்டேன்.  அதனால்தான் நானே என் நூல்களைப் பதிப்பிக்க வேண்டியதாயிற்று.  என்னால் விற்க முடியுமா?  எல்லாமே இலவசம்தான்.  உதாரணமாக, எக்ஸ் என் நெருங்கிய நண்பர்.  அவரிடம் ஸீரோ டிகிரியைக் கொடுத்து விட்டு, நூறு ரூபாய் தாருங்கள் என்றா கேட்க முடியும்?  அவரே கொடுத்தாலும் நான் கூச்சப்பட்டு மறுத்து விடுவேன்.  ஆக, எல்லாமே இலவசம்தான்.

உயிர்மையை ஆரம்பித்தார் மனுஷ்ய புத்திரன்.  பத்திரிகையும், பதிப்பகமும்.  நானும், எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் உயிர்மை பத்திரிகையில் ஓஹோ என்று எழுதிக் கொண்டிருந்தோம்.  அது ஒரு பொற்காலம்.  எஸ்.ரா.வின் புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்தில் வர ஆரம்பித்தன.  ஜெயமோகனின் புத்தகங்களும் வந்தன என்று நினைக்கிறேன்.  என் புத்தகங்கள் மட்டும் உயிர்மையில் வரவில்லை.  நானும் கேட்கவில்லை.  நான் எப்படிக் கேட்பேன்?  உயிர்மை அலுவலகமும் மனுஷின் வீடும் என் வீடு மாதிரி.  என் வீட்டு உறுப்பினர்களிடம் என் புத்தகம் போடுவீர்களா என்று கேட்க முடியுமா?  அந்நியர்களிடம்தான் கேட்க முடியும்.  உயிர்மை பதிப்பகம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன.  (இந்த ஆண்டுக் கணக்கில் தவறு இருக்கலாம்.  எனக்கு ஞாபக சக்தி கம்மி.)  நான் போகும் ஊர்களிலெல்லாம், கலந்து கொள்ளும் கூட்டங்களிலெல்லாம் உயிர்மையில் உங்கள் புத்தகங்கள் வராதா என்றே கேட்பார்கள்.  வராது என்றே சொல்லி என்னால் முடிந்த அளவுக்கு மனுஷை டேமேஜ் செய்து கொண்டிருந்தேன். 

கடைசியில் கோணல் பக்கங்கள் மூன்றாம் தொகுதிக்கு மனுஷை அணுகினேன்.  பிரசுரிக்கச் சொல்லி அல்ல.  என் பொருட்டு அச்சடித்து, வடிவமைத்துக் கொடுங்கள் என்று.  எவ்வளவு ஆகும் என்றேன்.  60,000 என்றார்.  சரி, மாதம் ஐயாயிரம் தருகிறேன். பன்னிரண்டு மாதம் முடிந்ததும் செய்து கொடுங்கள் என்றேன். பன்னிரண்டு மாதமும் என் வாசகர்கள் மாதம் 5000 ரூ. கொடுத்தார்கள்.  புத்தகம் வந்தது.  வெளியீட்டு விழாவில் மனுஷ் நாத்தழுதழுக்க இந்தக் கதையை எல்லோருக்கும் விவரித்துச் சொன்னார்.  இனிமேல் சாரு எழுதிக் கொண்டிருக்கும் வரை அவர் நூல்களை உயிர்மை வெளியிடும் என்று அந்த வெளியீட்டு விழா மேடையில் அறிவித்தார். 

அதேபோல் நடந்தது.  பிறகு நடந்ததும் உங்களுக்குத் தெரியும்.  சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் யார் எந்த எழுத்தாளரின் நூல்களைப் பிரசுரித்தாலும், வெளியிட்டாலும், விற்பனையாகும் நூல்களின் எண்ணிக்கை 200 இலிருந்து 500 வரைதான்.  அதிலும் சூப்பர் ஸ்டார் எழுத்தாளராக இருந்தால்தான் 500.  சோழர் வரலாறு, பொன்னியின் செல்வன் எல்லாம் அஞ்சு லட்சம் விற்றது, குஞ்சு லட்சம் விற்றது என்றெல்லாம் தூக்கிக் கொண்டு வரக் கூடாது.  நான் பேசுவது எல்லாமே இலக்கிய நூல்கள் பற்றி. 

இந்த நிலையில்தான் அராத்து இந்தியாவிலேயே முதல் முறையாக தன் குறுநாவலை என்.எஃப்.டி.யில் விற்றார்.  ஐந்து லட்சம் ரூபாய்க்கு விற்றது.  உடனே நான் சும்மா இருப்பேனா?  60 புத்தகங்களுக்கான வருடாந்திர ராயல்டியே எனக்கு ஒண்ணே முக்கால் லட்சம்தான்.  பொடிசுகள் எல்லாம் என்.எஃப்.டி.யில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கும்போது நீ ஏன்டா சும்மா இருக்கிறாய் என்று என் மனசாட்சி கேட்டது.  அதனால்தான் பெட்டியோ… நாவலை என்.எஃப்.டி.யில் விட முடிவு செய்திருக்கிறேன். 

என்.எஃப்.டி. என்பது தங்கத்தை விலைக்கு வாங்குவது போல.  ஒரு புத்தகத்தை நீங்கள் விலைக்கு வாங்கினால் அதற்கு மறுவிற்பனை மதிப்பு இல்லை.  பழைய பேப்பர் கடையில் அஞ்சு பைசாவுக்குத்தான் எடுத்துக் கொள்வான்.  ஆனால் என்.எஃப்.டி. என்பது உங்கள் சொத்து.  நீங்கள் அதை வாங்கிய விலைக்கோ அதை விட அதிகமாகவோ விற்கலாம்.  க்ரிப்டோ கரன்ஸியைப் போன்றது என்.எஃப்.டி.

ஆனால் 40000 ரூ. மாத ஊதியம் வாங்கும் என் இலங்கை நண்பர்கள் பெட்டியோ…வை என்.எஃப்.டி.யில் எப்படி வாங்க முடியும் என்பது பற்றியே யோசித்துக் கொண்டிருக்கிறேன்.  இலங்கையின் 40000 ரூபாய் இந்தியப் பணத்தில் 10,000 ரூ.  இதுதான் இலங்கையில் ஒரு அரசு ஊழியரின் சம்பளம். 

இரண்டு தினங்களுக்கு முன்பு மீன் வாங்கப் போனேன்.  நாலு துண்டு வஞ்சிரமும் ஒரு காலா மீனும் வாங்கினேன்.  1800 ரூ. ஆயிற்று.

எனவே இலங்கை நண்பர்களுக்கு என் வேண்டுகோள் இதுதான்: 

பணம் கொடுத்து என்.எஃப்.டி.யில் வாங்க முடியாதவர்கள் எந்தப் பணத்தையாவது போட்டு புத்தகத்தை வாங்கிப் படித்து விட்டு விற்று விடலாம்.  அல்லது, வாங்கக் கூடியவர்கள் நண்பர்கள் வாங்குவதற்கு ஸ்பான்ஸர் செய்யலாம். 

இதற்கெல்லாம் ஒரே காரணம்தான், தமிழில் புத்தகங்கள் 200 பிரதிகள்தான் விற்கின்றன.  அதனால்தான் இப்படி என்.எஃப்.டி. அது இது என்று போக வேண்டியிருக்கிறது.  புத்தகம் வாங்கப் பணம் இல்லை என்றால், யாழ்ப்பாணத்தில் தெருவுக்கு நாலு கோயில் கட்ட மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது?  கடவுள் அனுப்புகிறாரா?  ஒரு புத்தகம் வெளிவந்தால் ஒரு லட்சம் பிரதி விற்கிறது என்றால் நான் என்.எஃப்.டி. பக்கமே போக மாட்டேன். 

அது மட்டும் அல்லாமல், சினிமா ஆட்களைப் பார்ப்பதற்கு மட்டும் நட்சத்திர இரவு எழவு இரவு என்று சொல்லி, 50000 ரூ. கொடுத்துப் பார்ப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது?

இப்படி பல கேள்விகள் எழுகின்றன.  எனவே, முன்கூட்டியே சொல்லி விட்டேன்.  பெட்டியோ… நாவலை என்.எஃப்.டி.யில் வாங்குவதற்குத் தயாராகுங்கள். 

பின்குறிப்பு 1:

உண்மையில் பார்த்தால் இலங்கையில் எனக்கு உதவி செய்த ஒரு நாற்பது நண்பர்களுக்கும் நான் பெட்டியோ… நாவலை என் பரிசாக இலவசமாகத்தான் கொடுக்க வேண்டும்.  ஆனால் ஒரு புத்தகத்தை என்.எஃப்.டி.யில் வெளியிட்டு விட்டால் அது மற்ற வடிவங்களில் கிடைக்கவே கூடாது.  அதுதான் என்.எஃப்.டி.யின் மதிப்பு.  அதாவது, வான்கோவின் ஒரிஜினல் ஓவியம் மாதிரி.

2. பெட்டியோ… விற்பனை மூலம் எனக்குக் கிடைக்கும் பணம் என் சீலே பயணத்துக்குத்தான் உதவும். எனவே எனக்கென்று தனியாக எந்தச் செலவும் இல்லை.