சர்ப்பயா என்ற கே.கே. பற்றி…

இலங்கைக்கு ரொம்பவும் எதேச்சையாகத்தான் சென்றேன்.  மிக மிகத் தற்செயலாக நிகழ்ந்த சம்பவம்.  றியாஸ் குரானா அழைத்திருக்காவிட்டால் என் ஆயுள் முழுவதுமே நான் இலங்கை செல்வதற்கான வாய்ப்பே இல்லை.  ஏனென்றால், இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமிருந்து கலாச்சார ரீதியாக வேறுபட்டவர்கள் அல்ல.  இரு சாராருமே தமிழ் சினிமா என்ற அசிங்கத்தின் ரசிகக் குஞ்சாமணிகள்.  இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களோ புலம் பெயர்ந்து வசிக்கிறார்கள்.  உள்ளூரில் எழுதுபவர்களெல்லாம் மு.வ. காலத்து ஆட்கள்.  அவர்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.  அதற்கெல்லாம் மு.வ. காலத்திலேயே இன்றும் வசிக்கும் மார்க்சீயவாதிகளே லாயக்கு.  அதனால் இலங்கை செல்வதில் நான் ஆர்வமில்லாதவனாகவே இருந்தேன்.  இளையராஜாவின் ரசிகர்களைக் காண்பதற்கு ஏன் இலங்கை போக வேண்டும்?  இங்கேயே லட்சக்கணக்கில் இருக்கிறார்களே? 

கேகே

ஆனால் ஒரு காலத்தில் தமிழில் சிறுபத்திரிகைகள் என்ற இயக்கம் எப்படித் தீவிரமாக இருந்ததோ அதே அளவுக்குத் தீவிரமான அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது சிங்கள இலக்கிய உலகம் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் யாருடனும் எனக்குத் தொடர்பு இல்லை.  இலக்கியத்திற்கு வெளியே இருக்கும் என் தமிழ் நண்பர்களுக்கும் அவர்கள் யாரையும் தெரியாது.  பொதுவாகவே இலங்கையில் சிங்களத்துக்கும் தமிழுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.  என்னுடைய ஒரே சிங்கள நண்பர் இயக்குனர் ப்ரஸன்னா விதானகே இந்தியாவில் இருந்தார்.  ஆனாலும் அவர் மூலமாக ஒரு தொடர்பு கிடைத்தது. 

இந்த நிலையில் நயநதினி மூலமாக சர்ப்பயா என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் கே.கே.யின் அறிமுகம் கிடைத்தது.  கே.கே.யும் உன்னைப் போல் எழுதுபவர்தான், இருவருக்கும் நிறைய ஒற்றுமைகளைக் காண்கிறேன் என்று சொல்லி கே.கே. எழுதிய சில ஆங்கிலக் கவிதைகளையும் அனுப்பி வைத்தாள் நயநதினி.  கே.கே.யின் முழுப் பெயர் கங்கானம் கபுகே சமன்குமார.  ஆனால் நான் இலங்கையில் இருந்த போது கே.கே.யை சந்திக்க முடியவில்லை.  ஃபோன் மூலமாகத்தான் உரையாடல் நடக்கிறது.  கே.கே.யின் கவிதைகளைப் படித்து விட்டு மிரண்டு போனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.  ப்யூகோவ்ஸ்கியையெல்லாம் எங்கேயோ தள்ளி விடக் கூடிய கவிதைகள். 

பெட்டியோ நாவலை சர்ப்பயா என்ற கே.கே.வுக்கும் ராஜினி திராணகமவுக்கும்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். 

இந்த நிலையில் சிங்கள இலக்கியத்திலிருந்து சில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் நண்பர் ரிஷான் ஷெரீஃபைத் தொடர்பு கொண்டேன்.  கே.கே.யை அவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறாரா என்று கேட்டேன்.  ஆர்வமுண்டு, ஆனால் அவர் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றார் ரிஷான் ஷெரீஃப்.  இதற்கிடையில் ரிஷான் ஷெரீஃப் சிங்களத்திலிருந்து மொழிபெயர்த்திருந்த மூன்று நூல்களை இன்று காலையிலிருந்து பனுவல், டிஸ்கவரி மற்றும் பல ஆன்லைன் நிறுவனங்கள் என்று சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம்.  கிடைக்கவில்லை.  இனிமேல் எழுத்தாளர்கள் வேறு ஏதாவது முறையில் தங்கள் நூல்களை விற்க முயற்சிக்கலாம் என்று தோன்றுகிறது.  ஒரு நூலைத் தேடி ஐந்து மணி நேரம் செலவு செய்தும் கிடைக்கவில்லையானால் அப்புறம் என்ன செய்வது?

நானும் செல்வாவும் தேடிய ரிஷான் ஷெரீஃபின் மொழிபெயர்ப்பு நூல்கள்:

1.தடை செய்யப்பட்ட கதைகள் : சிங்களச் சிறுகதைகள்.

2. பீடி – தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி

3. திருமதி பெரேரோ

ரிஷான் ஷெரீஃப் கே.கே. சமன்குமார பற்றி எனக்கு எழுதியிருந்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.  இந்த விஷயங்கள் எல்லாம் கே.கே. தனது நேர்காணல்களில் சொன்னதுதான் என்பதால் இதை வெளியிடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. 

கே.கே. பற்றி ரிஷான் ஷெரீஃப்:

கே.கே. சமன்குமார (கங்கானம் கபுகே சமன்குமார) இலங்கையின் புகழ்பெற்ற சிங்களக் கவிஞர், எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். சிங்கள நண்பர்கள் அவரை சர்ப்பயா (சர்ப்பம்) என்ற செல்லப்பெயரில்தான் அழைக்கிறார்கள். இந்த சர்ப்பத்தை சிங்கள இலக்கிய உலகில் தவிர்க்க முடியாது.
மிகக் குரூரமான பால்ய காலத்தை அனுபவித்தவர் அவர். அவரது தாய் உளச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்ததால், தாயால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தாயின் கொடுமைகளைத் தாங்கியவாறு குழந்தைப்பருவம் தொட்டு அவரோடு வளர்ந்தவர். எப்போதும் தனது குழந்தையைத் திட்டியவாறும், அதன் மீது எச்சில் துப்பியவாறும், கடுஞ்சொற்களால் ஏசியவாறும், துன்புருத்தியவாறும் இருக்கும் ஒரு தாயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவ்வாறானதொரு கொடூரமான பால்ய காலத்தை அனுபவித்தவர் அவர்.

தந்தையோ மிகவும் அமைதியானவர். தாயின் மனநோய் பற்றித் தெரியாமல் அவரைத் திருமணம் முடித்ததால் தந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறார். 

கேகேயின் தாய் அவரது பன்னிரண்டு வயதில் கீரிப்பிள்ளை கடித்துச் செத்துப் போகிறார். ஊரார் ஒன்றுசேர்ந்து அன்று அந்தக் கீரிப்பிள்ளையைப் பிடித்துக் கறி சமைத்து உண்டதாக கேகே கூறுகிறார். தாய் இறந்த அன்று தனக்கு அதற்காக கவலையே தோன்றவில்லை என்று கூறும் அவர், அன்றைய தினம் தனக்கு சிறுவர் பத்திரிகைகளை வாங்க தனது தந்தையிடம் பணம் கேட்க முடியாமல் போனதற்காக வருந்திக் கவலைப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். 

பிறகு அவரது தந்தை மறுமணம் செய்கிறார். வீட்டுக்கு வரும் சித்தியோ தாயை விட மிகவும் மோசமானவளாக இருக்கிறாள். அதுவரை அவருக்கு சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் கொண்டு வந்து தரும் தந்தை, அவரை சிங்கள, தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க தியேட்டருக்குக் கூட்டிச் செல்லும் அந்தத் தந்தையும் கூட அதன் பிறகு சித்தியின் பேச்சைக் கேட்டு படிப்படியாக மாறுகிறார். அதனால் மேலும் புறக்கணிக்கப்படும் அவர் ஊரில் அவ்வாறாக ஒதுக்கப்படும் ஆட்களோடு கூட்டு சேர்கிறார். மேடை நாடகங்களில் நடிக்கிறார். நன்றாகப் படிக்கவும் செய்கிறார். பாடசாலையில் எட்டாம் வகுப்பிலிருந்து சிங்கள இலக்கியப் படைப்புகளை எழுதத் தொடங்குகிறார்.

பின்னாட்களில் தனது இருபத்தேழாவது வயதில் திருமணம் முடிக்கிறார். அந்தத் திருமண வாழ்க்கை நீடிக்காமல் போனதால், மறுமணம் செய்கிறார். அதுவும் நிலைக்காமல் போயிருக்கிறது.
இவ்வாறான ஒரு மோசமான கடந்த காலத்தைக் கொண்டவர் கேகே. கவிதைகள், சிறுகதைகள் என பல நல்ல நூல்களை சிங்களத்தில் எழுதியிருக்கிறார். ஒரு குரூரமான கடந்த காலத்திலிருந்து மீண்டு சுய முயற்சியால் அவர் எவ்வாறு ஒரு சிறந்த இலக்கியவாதியாக ஆகியிருக்கிறார் என்பதை எடுத்துக் கூறவே நான் அவரது கடந்த கால வாழ்க்கை குறித்து இவ்வளவு விபரமாகக் கூறினேன். அவருக்கு நீங்கள் தயங்காமல் சமர்ப்பணம் செய்யலாம். அவர் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழக் கூடியவர். ராஜினி திரணகமவும் அவ்வாறான ஒருவர்தான்.

***

கே.கே.யைச் சந்திப்பதற்காக செப்டம்பரில் இலங்கை செல்கிறேன்.  இலங்கையில் செப்டம்பர் இலக்கியவாதிகளின் காலம் என்று ரிஷான் ஷெரீஃப் சொல்கிறார்.  இந்த முறை என் நெருங்கிய நண்பர்களுக்கும், சிங்கள எழுத்தாளர்களுக்கும்தான் என் நேரம்.  கொழும்புவில் நிற்கும்போது Patio மதுபான நடன விடுதியில் என்னை தினமும் சந்திக்கலாம். 

எத்தனையோ நாடுகளுக்குச் சென்றிருந்தாலும் இலங்கைக்குச் சென்றது எனக்கு இலக்கிய ரீதியில் மிகப் பெரிய நன்மையைச் செய்திருக்கிறது.  ஒரு நாவலை எழுதி முடித்திருக்கிறேன்.  மொழியில் பெரும் பாய்ச்சலைச் செய்திருக்கிறேன்.

என்னுடைய சிறுகதை ப்ளாக் நம்பர் 27: திர்லோக்புரி சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  மொழிபெயர்த்தவர் இனோகா பள்ளியகுரு.  இனோகா ஃபேஸ்புக்கில் இல்லை.  ஏன் என்று கேட்டேன்.  ஃபேஸ்புக்கில் இருப்பவர்களெல்லாம் போலியான மனிதர்கள் என்றார். எனவே அந்த அழகியை ஃபேஸ்புக்கில் தேட வேண்டாம்.  இனோகா பள்ளியகுரு தத்துவம் படிக்கும் மாணவி.