பேரன்பின் தரிசனம்

 

லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள கானகன் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  சமீப காலத்தில் இப்படி ஒரு அற்புதமான நாவலைப் படித்ததில்லை.  சர்வதேசத் தரம் வாய்ந்த நாவல்.  ஓநாய் குலச்சின்னம் எங்கே தோற்றதோ அந்த இடத்தில் வென்றிருக்கிறது கானகன்.  சிலுவை என்ற கொலைக்கருவி பேரன்பின் குறியீடாக மாறியதைப் போன்ற ஒரு மேஜிக் அது.  இந்த நாவலுக்குச் சம்பந்தமே இல்லாத, கொஞ்சமும் இலக்கிய சுரணை உணர்வு அற்ற ஒரு முன்னுரை உள்ளது.  இவ்வளவு பிரமாதமான ஒரு நாவலுக்கு அதை திருஷ்டிக் கழிப்பாக வைத்துக் கொள்ளலாம்.

கானகன் எனக்கு ஒரு சாதாரண நாவலாகத் தெரியவில்லை.  கஸான்ஸாகிஸ் போன்ற மேதைகள் காண்பித்த பேரன்பின் தரிசனத்தை இந்த நாவலில் கண்டேன்.  லக்‌ஷ்மி சரவணகுமாருக்கு என் மகன் வயது இருக்கலாம்.  ஆனால் இந்த நாவலைப் படிக்கும் போது என்னுடைய குரு ஒருவருடன் உரையாடிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.  மகத்தான அனுபவம்.

இங்கே இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மணல் வீடு பத்திரிகையில் லக்‌ஷ்மி சரவணகுமார் ஒரு சிறுகதை எழுதியிருந்தார்.  இருள், மூத்திரம் மற்றும் கடவுளின் பட்டு கௌபீனத் துணி என்பது அந்தக் கதையின் பெயர்.  படித்து விட்டு சாருஆன்லைனில் வெகுவாகப் பாராட்டி எழுதியிருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குமா என்று தெரியவில்லை.  அதற்குப் பிறகு லக்‌ஷ்மி சரவணகுமாரின் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று யோசிப்பேன்.  லக்‌ஷ்மி சரவணகுமாரை முதல் முதலில் பாராட்டி எழுதியவன் என்ற முறையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.  ஏனென்றால், அடிப்படையில் நான் ஒரு தேர்ந்த வாசகன்.

Comments are closed.