வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேருரை

பொதுவாக என்னுடைய மேடைப் பேச்சு யாரையும் கவர்வதில்லை. சிறப்பாகப் பேசும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறுவதே இல்லை. அது பற்றி எனக்குப் புகாரும் இல்லை. ஏனென்றால், நான் என்னை ஒரு மிகச் சிறந்த பேச்சாளனாகவே கருதி வருகிறேன். மேடைப் பேச்சுக்குரிய அலங்காரங்கள் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு யாரிடமும் காண இயலாத அற்புதங்களை ஒரு நுண்ணிய வாசகர் என் பேச்சில் கண்டு கொள்ள இயலும். உதாரணமாக, அராத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசிய பேச்சு. எதிர் கவிதை என்றால் என்ன என்பதற்கான ஓர் ஆவணம் அது. இத்தனைக்கும் அந்தப் பேச்சுக்கு நான் எந்தக் குறிப்புகளையும் எடுத்துக் கொள்ளவில்லை. சொல்லப் போனால், பேசுவதற்கு முன் தினம் வரை அராத்துவுக்கும் எனக்குமான நட்பு பற்றியே பொதுவாகப் பேசி விடலாம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் விழாவுக்கு முன் தினம் அராத்துவின் கவிதைகளில் ஒன்றுமே இல்லை, இது கவிதையே இல்லை என்று என் நண்பர் ஒருவர் சொன்னது என்னை முடுக்கி விட்டது, என் பேச்சுக்கான உந்துதலைக் கொடுத்தது. எதிர்கவிதை பற்றி அன்று நான் பேசியது எதிர்கவிதை பற்றிய ஓர் ஆவணம்.

அதேபோல் புருஷன் நாவல் பற்றி சனிக்கிழமை கோவாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உரையை நிகழ்த்த இருக்கிறேன். புருஷன் நாவல் பற்றி என்பதை விட அந்நாவலை முன்வைத்து உலக இலக்கியத்தின் உரைநடையில் – குறிப்பாக நாவலில் என்ன விதமான நெரேட்டிவ் சாதனைகள்/புரட்சிகள் நடந்துள்ளன என்பதை விளக்கலாம் என்று இருக்கிறேன். அதிலிருந்து தொடர்ந்து தமிழில் நடந்திருப்பது என்ன என்ற இடத்துக்குச் செல்ல இருக்கிறேன். பேச்சைத் தவற விடாதீர்கள். ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் எல்லாம் இருக்காது. அரை மணி நேரம் முக்கால் மணி நேரம் இருக்கலாம். எவ்வளவு நேரம் போகும் என்பதை என்னால் இப்போது அனுமானிக்க இயலவில்லை.

புருஷன் நாவலை வாங்க விரும்புவோருக்குப் பின்காணும் இணைப்பில் விவரம் உள்ளது.

https://www.autonarrative.com/checkout-2/?PID=4356