புத்தகத் திருவிழா

வரும் இருபத்தேழாம் தேதியிலிருந்து சென்னை புத்தகத் திருவிழா தொடங்க இருக்கிறது. முதல் நாள் வெள்ளிக்கிழமை அரசியல்வாதிகளின் நாள் என்பதால் அன்று செல்வதில் அர்த்தமில்லை. அரங்குகளிலும் கூட்டம் இருக்காது. எனவே இருபத்தெட்டாம் தேதி மாலை நான்கு மணி அளவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் இருப்பேன். அரங்கு எண்: 540 & 541. சென்ற ஆண்டைப் போல கழிப்பறை அருகில் இருக்கிறதா அல்லது நல்ல இடமா என்று எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை. நான்கு மணியிலிருந்து அரங்குகள் மூடும் வரை இருக்கலாம் என்று திட்டம்.

இந்த ஆண்டு என் புதிய புத்தகங்கள் ஏதும் இல்லை. ஒரு நாலைந்து நூல்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இப்போதைக்கு புதிதாக வர வேண்டிய புத்தகங்கள் இருபத்தைந்து இருக்கின்றன. எல்லாவற்றையும் ஶ்ரீராம் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். நான் ஒவ்வொன்றாக வாசித்து செப்பனிட்டுக்கொண்டிருக்கிறேன். இரண்டு மாதங்கள் எடுக்கும். அநேகமாக மார்ச்சில் இருபத்தைந்து புத்தகங்களையும் கொண்டு வந்து விடலாம். இதில் மூன்று நூல்கள் சிறுகதைத் தொகுப்புகள். எல்லாமே புதிய புத்தகங்கள். பழைய நூல்களின் மறுபதிப்பு இல்லை.

டிசம்பர் முழுவதும் பயணங்களிலும் புத்தக விழாக்களிலுமே போய் விட்டது. வீட்டில் இருந்த காலம் குறைவு. விரிவாக எழுத வேண்டும். நாளையிலிருந்து வீட்டில் தனியாக இருப்பேன். அவந்திகா துபய் போகிறாள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் தனியாகத்தான். காரணம், என்னுடைய பூனைகள். பத்து பூனைகள். எட்டு மணி நேரம்தான் அவைகளைத் தனியாக விட முடியும். அதற்கு மேல் உணவைத் தேடும். பூனைகள் இல்லாதிருந்தால் கோவாவிலேயே இன்னும் சில தினங்கள் இருந்து விட்டு நண்பர்களுடனேயே பெங்களூர் சென்றிருப்பேன். இத்தனை நண்பர்களை ஒருசேரப் பார்ப்பது அபூர்வத்திலும் அபூர்வம். அதிலும் ஒரு சேடிஸ்ட் நண்பன் தாங்கள் கோவாவில் சொர்க்கம் போன்ற இடத்தில் இருப்பதாக ஃபோன் போட்டு சொன்னான். புருஷன் நாவல் வெளியிடப்பட்ட ஓஷன் பேர்ல் விடுதி இருந்த இடமுமே சொர்க்கம்தான். கல்லெறி தூரத்தில் கடல்.

புருஷன் வெளியீட்டு விழாவில் நான் நினைத்ததை விட அதிக நேரம் பேசினேன். ஒன்றரை மணி நேரம். விரைவில் யூட்யூபில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.