பெரும் சங்கீத ரசிகனான என் இளம் நண்பன் அவனுடைய வழக்கமான ‘சினிக்கல்’ தன்மையுடன் என்னிடம் இன்று மாலை சொன்னான்:
“நீங்கள் தியாகராஜா நாவலை இத்தனைக் காலம் இழுத்துக்கொண்டிருப்பதன் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டேன்.”
”என்ன காரணம்?”
”ஔரங்ஸேப் பற்றி எக்கச்சக்கமான நூல்கள் உள்ளன. ஆனால் தியாகராஜாவின் வாழ்க்கை பற்றி ஒரு குறிப்பும் இல்லை. அதனால்தான் உங்களால் எழுத முடியவில்லை.”
”எழுத்தில் என்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை. மட்டுமல்லாமல் தியாகராஜாவும் என்னைப் போல் ஒரு ஆட்டோஃபிக்ஷன் எழுத்தாளர்தான். அவருடைய கீர்த்தனைகளிலிருந்து அவரைப் பற்றி நூறு பேர் நூறு நாவல்கள் எழுத முடியும். நான் என்ன அவருடைய வாழ்க்கை வரலாற்றையா எழுதிக்கொண்டிருக்கிறேன்? நான் எழுதுவது நாவல். நாவலில் நான் கடவுள்.”
இன்னும் நிறைய சொன்னேன். அதெல்லாம் வேண்டாம். அந்த நண்பன் அப்படிச் சொன்னது நல்லதுக்குத்தான். இதையே ஒரு தூண்டுதலாக எடுத்துக்கொண்டு இந்தக் கணமே தியாகராஜாவை மீண்டும் தொடங்குகிறேன்.
மார்ச்சுக்குள் முடித்து ஏப்ரலில் உங்களுக்கு வாசிக்கத் தருகிறேன். ஏற்கனவே தியாகராஜா நாவலின் அறுபது சதவிகிதத்தை எழுதி முடித்து விட்டேன். மீதியை எழுதுவது பெரிய காரியம் அல்ல. இறையருள் எனக்கு அதற்கான சக்தியைத் தரும். விரைவில் தியாகராஜாவுடன் சந்திக்கிறேன்.
***
நாளை 31ஆம் தேதி புத்தகத் திருவிழாவுக்கு வருவேன். மாலை நாலரை மணியிலிருந்து எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன்.