உணவென்னும் காவியம்


1
உனக்காக உயிரையும் தருவேனெ
ன நீங்கள் யாரிடமாவது சொல்லியிருக்கலாம்
சொல்லியிருந்தால் நீங்கள்
அதிர்ஷ்டசாலி
நான் உணவுக்காக உயிரையும் கொடுப்பவன்
உணவு வெறியன்
எத்தனையோ காரணங்களால் காதல்
முறிந்திருக்கிறது
ஆனால் ஃபுல்க்கா சென்னாவுக்காக ஒரு
காதல் முறிந்ததை நீங்கள்
கேள்விப்பட்டிருக்க முடியாது

2
அதிர்ஷ்டவசமாக என் மனையாள்
உலகத் தரமாக சமைக்கக் கூடியவள்
அதனாலேயே நான் வெளியூர் சென்றால்
பாதியாக இளைத்து வருவேன்

சைவ உணவுக்காரியென்றாலும்
எனக்காக எதையும் சமைப்பாள்
எனக்கு மீன் பிடிக்கும்
தப்பு

மீன் எனக்கு உயிர்
கொரோனா காலத்தில் மீன் சந்தையை
மூடி விட்டார்கள்
என் மனையாள் ஒரு நண்பருக்கு
ஃபோன் போட்டு போரூர் ஏரியிலிருந்து
நண்டு வரவழைத்தாள்
உயிர் நண்டு
அதை அடித்துக் கொல்வதெனக்குத்
தெரியவில்லை
மனையாள் கட்டையைக் கையிலெ
டுத்தாள் அந்த நண்டிடம்
கை கூப்பி
’செல்லக்குட்டி, என் கணவனுக்காக
உன்னைக் கொல்கிறேன் என்னை
மன்னித்து விடு’ என்று சொல்லி
கொன்றாள்
அன்றிலிருந்து உயிரோடு
இருக்கும் எதையும் உண்பதில்லை
என்ற முடிவெடுத்தேன்

3
அப்படிப்பட்ட மனையாள்
‘என்னிடம் ஃபுல்க்கா சென்னா மட்டும்
கேட்காதே அதை எனக்கு சமைக்கத்
தெரியாது’ என்று இயம்பி விட்டாள்

4
என் காதலியொருத்தி ஃபுல்க்கா சென்னா
சமைப்பதில் கில்லாடி
கேட்டேன்

’என் வீட்டிலொரு விசேஷம்
அதற்காக அலைந்து கொண்டிருக்கிறேன்’
என்றாள்
பெண்களோடு பழகுவதைப் போன்றதொரு
சிரமமான காரியம் வேறெதுவுமில்லை
என்றறிந்தவன் நானென்பதால்
அந்தப் பேச்சை விட்டுவிட்டேன்
சில காலம் சென்று மீண்டும் கேட்டேன்
மீண்டும் ஏதோவொரு காரணம்
சொன்னாள்

நான் தஞ்சாவூர்க்காரனென்பதால்
கொஞ்சம் தந்திரமுண்டு
கறுப்புக் கொண்டைக்கடலைக் கறி
எப்படிச் செய்வது என்று ஒருநாள்
கேட்டுப் பார்த்தேன்
அசடு போல் செய்முறையும் சொன்னாள்
அவள் ஊர் அப்படி
அதை விடுங்கள்
ஒரு சமயம் என்னிடம் ஒரு
உதவி கேட்டாள்

ஆஹா அடித்தது அதிர்ஷ்டமென்று
இந்த உதவிக்கொரு விலை உண்டெ
ன்றேன்
என்ன என்றாள்
ஃபுல்க்கா சென்னா என்றேன்
சரியென்றாள்
உதவியைச் செய்து முடித்தேன்
ஃபுல்க்கா சென்னா வரவில்லை

நான் பெண்களிடம் வெட்கம் மானம்
ரோஷம் சூடு சொரணை யெதையும்
பார்ப்பதில்லையென்பதால் அவளிடம்
ஃபுல்க்கா சென்னா என்றேன்
இன்று ஒரு முக்கிய வேலையென்றாள்
அதற்குப் பிறகு ஃபுல்க்கா சென்னா பற்றி
அவளும் பேசவில்லை நானும் பேச
வில்லை காதலை முறித்துக் கொண்டேன்
அவள் எண்ணை தொலைபேசியிலிருந்து
நீக்கினேன்
மின்னஞ்சல் மூலமாகப் பேசலாமா என்று
மின்னஞ்சல் வந்தது
சரி என்று பதில் போட்டேன்
அதற்குப் பிறகு வந்த ஒன்றிரண்டு
மின்னஞ்சலுக்கு
என் நண்பன் மூலமாக பதில்
அனுப்பினேன்
அதனால்தான் சொன்னேன்
நானொரு உணவு வெறியனென்று

5
செவிச்சே கேள்விப்பட்டிருக்கிறீர்களா
மனித வாழ்வின் அற்புதங்களிலொன்று
செவிச்சே
பெரூவின் தேசிய உணவு
செவிச்சே சாப்பிடுவதற்காகவே
பெரூ சென்றேன்
பெரூ போய்விட்டு மாச்சு பிச்சு
பார்க்காமலிருக்க முடியுமா
அதிலும் ரஜினியும் ஐஸ்வர்யா
ராயும் நடனமாடிய இடம்
பார்த்துவிட்டு குஸ்க்கோ என்ற
ஊரில் தங்கினேன்
ரொம்ப உயரம்
பிராணவாயு இல்லை
அலுமினியப் பெட்டியில்தான்
திரும்புவோமென்று தோன்றியது
பேச்செல்லாம் ழ ழ என்றே வந்தது
என்ன பேசினாலும் ழ தான்
பிராணவாயு நிரப்பிய
சிலிண்டர் கொடுத்தார்கள்
அடுத்த நாளே விமானம் பிடித்து
சாந்த்தியாகோ போய் விட்டேன்

6
இப்போது இரண்டு தினங்களாக
மோகினிக்குட்டி பேசவில்லை
பேச்செல்லாம் ழ என்றே வருகிறது