1
நேற்றைய துப்புரவுத் தொழிலாளி
விதியின் விளையாட்டில்
ராக்ஸ்டார் அல்லது சூப்பர் ஸ்டார்
ஏதோ ஒன்று ஆனார்
புகழ் பந்தை
சாப்ளினின் காலால் உதைக்கிறார்
பந்து செல்லும் இடம் தெரியவில்லை
வெளியே சென்றால்
கூட்டம் மொய்க்கிறது
காவலரின் அரணின்றி
தலை காட்ட முடியவில்லை
செய்வதறியாமல்
குடியை நாடினார்
குடி இனிய தோழன்
முதலில் நலமாயிருந்தது
பிறகு இரவும் பகலும்
குடியை நாடியது
உடலும் மனமும்.
குடி கொஞ்சம் குரூரமானது
இனிமை தந்தாலும்
உயிரை உறிஞ்சி விடும்
2
நானும் ஒரு காலத்தில்
துப்புரவுத் தொழிலாளி போலவே
யாருக்கும் தெரியாமல்
வாழ்ந்திருந்தேன்
அவ்வப்போது
மனதில் தோன்றியவை
காகிதத்தில் விழுந்தன
ஒரு சமயம் –
ஒரே ஒரு சமயம் –
மன உளைச்சல் போக்க
துக்கம் தீர்க்க
கவிதையில் விழுந்தேன்.
கவிதை
மதுவைப் போல
என்னை
இழுத்துச்சென்றது
இலக்கணம் தெரியாது
உருவகம் தெரியாது
படிமம் தெரியாது
உருவகமும் படிமமும் ஒன்றா
தெரியாது
கவிதை
என் உடலை அழிக்கவில்லை
அது ஒரு அட்டை போல்
என் மீது ஒட்டிக்கொண்டது
துக்கத்தில் எழுதியவன்
இன்பத்தை எழுதுகிறேன்
எதை எடுத்தாலும் கவிதை
காஃபி என்று காதில் விழுந்தால்
காஃபி பற்றி ஒரு கவிதை
கனவு கவிதையாகிறது
நனவு கவிதையாகிறது
இந்தப் பித்திலிருந்து வெளியே வா
என்கிறாய்.
எப்படியென்று கேட்டால்
பதிலில்லை
நானும் தேடுகிறேன்
ஒருவேளை
கவிதையிலேயே கிடைக்கலாம்
கிடைக்காமலும் போகலாம்.