அடியேனைப் பற்றி அவந்திகா

ட்ராகுலா படம் பார்த்திருப்பீர்கள்.  ட்ராகுலா யாரையாவது கடித்தால் அவர்களும் ட்ராகுலாவாக ஆகி விடுவார்கள்.  என்னுடைய 15 வயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  என்னோடு கூட இருப்பவர்களும் என்னைப் போலவே எழுத்தாளர்களாகி விடுகிறார்கள்.  2005-இல் எனக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை நடந்த போது கலா கௌமுதி, மாத்ரு பூமி, மாத்யமம் என்ற மூன்று மலையாள வாரப் பத்திரிகைகளில் தொடர் எழுதிக் கொண்டிருந்தேன்.  அறுவை சிகிச்சையின் காரணமாக மூன்று பத்திரிகைகளிலும் இடைவெளி வருவதை நான் விரும்பாததால் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்ததுமே அவந்திகாவிடம் விஷயங்களை டிக்டேட் செய்து எழுதச் சொன்னேன்.  அப்போது என்னிடம் மடிக் கணினி கிடையாது.  அவளும் எழுதினாள்.  ஒரு பத்தி மட்டும் டிக்டேட் செய்து விட்டு வாங்கிப் பார்த்தால் ஒரே பிழை.  ஒவ்வொரு வாக்கியத்திலும் பிழை.  சரி, இது வேலைக்கு ஆகாது என்று நண்பர்களை வரவழைத்து டிக்டேட் செய்தேன்.  அதன் பிறகு அவள் எப்போது நல்ல தமிழ் எழுதக் கற்றுக் கொண்டாள் என்று எனக்குத் தெரியவில்லை.  அவளுக்கு இலக்கியப் பரிச்சயமும் துளியும் கிடையாது.  குமுதம், விகடன் கூடப் படிக்க மாட்டாள்.  பெண்கள் பத்திரிகை துளியும் பிடிக்காது.  ஆனால் எக்கச்சக்கமாக ஆன்மீக நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பாள்.  பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக பல ஆன்மீக நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கத் துவங்கினாள்.  அவளாகச் செய்யவில்லை.  வேறு யாரும் கிடைக்காததால் Eck அமைப்பினர் அவளிடம் கேட்டதன் பேரில் அதைச் செய்து வந்தாள்.

நான் ஒரு எழுதும் மிருகம் என்று என் நண்பர்கள் சொல்வார்கள்.  நானும் அப்படியே நினைக்கிறேன்.  பசியோடு வேட்டைக்கு அலையும் மிருகத்தின் வேகத்தில் எழுதுவேன்.  என்னைத் தவிர, அ்தே போல் இன்னும் ஒரே ஒருவரைத்தான் பார்த்திருக்கிறேன்.  ஜெயமோகன்.  சுமார் ஏழு ஆண்டுகளாக இதே வேகத்துடன் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டு வருகிறாள் அவந்திகா.  ஆங்கிலத்திலிருந்து தமிழில்.  எப்போதாவது வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்பாள்.  வாக்கிய அமைப்பு பற்றிக் கேட்பாள்.  சொல்லுவேன்.  மற்றபடி எதிலும் தலையிடுவதில்லை.  அதற்கு எனக்கு நேரமும் இல்லை.  ஆனால் நள்ளிரவில் கழிப்பறைக்குச் செல்லும் போதெல்லாம் அடுத்த அறையில் அவள் ஏதேனும் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்ப்பேன்.  உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே என்று சொல்லத் தோன்றும்.  ஆனால் என் வாழ்க்கையில் யாருக்கும் நான் அறிவுரை சொல்வதில்லை என்ற விரதம் எடுத்திருப்பதால் வாயை மூடிக் கொண்டு வந்து படுத்து விடுவேன். (அந்த அளவுக்கு பிறர் எனக்கு அறிவுரை சொல்லிச் சொல்லி அறிவுரை என்றாலே எனக்கு அலர்ஜி; தினமும் குறைந்த பட்சம் ஆறு அறிவுரையாவது அவந்திகாவிடமிருந்து கிடைக்கும்.  இதைத் தட்டச்சு செய்யும் போது கூட ஒரு அறிவுரை கிடைத்தது.  ”இனிமேல் ரொம்பக் காரம் சாப்பிடாதே சாரு!”) ஆனால் அடிக்கடி அவந்திகா என்னிடம் சொல்லும் விஷயம் என்னவென்றால், “எனக்கு மட்டும் நீ எதிர் பார்க்கும் அளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் நீ மொழிபெயர்ப்புக்காக ஒருத்தரையும் எதிர்பார்க்க வேண்டாம்” என்பதுதான்.  என் நண்பரும் மருத்துவருமான ஸ்ரீராம் மேல் படிப்புக்காக தினமும் பனிரண்டு மணி நேரம் படிக்கிறார்.  ஒரே ஒரு நாள் மருத்துவமனை வேலை.  அந்த ஊதியத்தில் மற்ற நாட்களில் படிப்பு.  இந்த அளவுக்குப் பேய் மாதிரி மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபட்டு வருகிறாள் அவந்திகா.

சென்ற வாரம் மங்கையர் மலரில் அவந்திகாவிடம் என்னைப் பற்றி பத்து கேள்விகள் கேட்டார்கள்.  பொதுவாக எனக்கு வரும் கடிதங்களைக் கூட அதில் உள்ள இலக்கணப் பிழை, ஒற்றுப் பிழை போன்றவற்றைத் திருத்திய பிறகுதான் வெளியிடுவேன்.  ஆனால் அவந்திகா எழுதிக் கொடுக்கும் போது அதில் ஒரு எழுத்துப் பிழையைக் கூட மாற்றக் கூடாது என்ற உறுதி எடுத்துக் கொண்டேன்.  ஆனால் அவள் கொடுத்த பிரதியைப் படித்து அதிர்ந்து போனேன்.  தமிழ் அவ்வளவு நன்றாக இருந்தது.  ஆனால் காரணம் புரிந்தது.  அவள் செய்யும் மொழிபெயர்ப்புதான் அவளுடைய மொழியைச் செப்பனிட்டிருக்கிறது.

இந்த இதழ் மங்கையர் மலரைப் பாருங்கள்.  அதில் அந்தப் பேட்டி இருக்கும்.  இருந்தாலும் அந்தப் பேட்டியில் இடப் பற்றாக்குறையின் காரணமாக, சில வாக்கியங்கள் சில பத்திகள் விடுபட்டிருப்பதால் அவந்திகா தன்னுடைய பேட்டி முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்று விரும்புவதால் அந்தப் பேட்டியின் முழு வடிவத்தை இங்கே தருகிறேன்.

1. உங்கள் கணவரின் பிஸி ஷெட்யூலுக்கு இடையில் குடும்பத்துக்காகப் போதுமான நேரத்தை ஒதுக்குகிறாரா? இன்னும் கூடுதலாக எப்படி கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறீகள்?

சாரு மனித நேயம் மிகுந்தவர்.  அதோடு எழுத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதே அளவு முக்கியத்துவத்தை உறவுகளுக்கும் கொடுப்பார்.  இதை விட கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தால் நான் பேராசைக்காரி தான்.

2. சில சமயம் உங்களவர் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? அப்போது அவற்றின் பிரதிபலிப்பு வீட்டில் எப்படி எதிரொலிக்கும்?

ஒரு விஷயத்தை சர்ச்சை என்று எடுத்துக் கொள்வதோ அல்லது அந்த சர்ச்சையை எப்படி எதிர் கொள்வது என்பதோ ஒவ்வொருவரின் மனோபாவத்தைப் பொறுத்தது.  உண்மையையும் நேர்மையையும் மட்டுமே தன் வாழ்வாதாரமாகக் கொண்டு செயல்படும் ஒருவரைப் பற்றிய சர்ச்சை அவர் இருக்கும் போது மட்டும் அல்ல, காலம் உள்ளளவும் இருந்து கொண்டே தான் இருக்கும்.  அப்படி இருக்கும் போது அதன் பிரதிபலிப்பு எப்படி என்னை பாதிக்கும்?  அப்படி ஒரு பிரதிபலிப்பு இருப்பதாகவே நான் கருதவில்லை.

3.  எதற்காக அவருக்கு அதிகமாகக் கோபம் வரும்?  கோபம் வந்தால் அவரது மற்றும் உங்களது ரியாக்‌ஷன் என்ன?

சாருவின் கோபம் எப்போதும் தார்மீகம் சார்ந்ததாகவே இருக்கும். அதுவும் கூட வந்த வேகத்தில் மறைந்து விடும். மேலும், எழுத்தில் தெரியும் அவர் கோபத்துக்கும் எங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  என்னை யாராவது துன்புறுத்தும் போது மட்டும் அவர் கோபம் கொண்டு பார்த்திருக்கிறேன்.

4. எழுத்தாளராக இல்லாமல் வேறு பணியில் இருப்பவராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?

எழுத்தாளர் என்ற காரணத்தினால்தான் நான் சாருவை மணந்தேன்.  ஏன் என்றால், எழுத்தாளர் இறைவனுக்குச் சமமானவர் என்று நான் நினைக்கிறேன்.  படைப்பின் ரகசியங்களை நன்கு உணரக் கூடிய ஒரு ஆன்மாவாக இருப்பவரே படைப்பாளி.  அது சந்தோஷமோ அவலமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் எந்தவித சாயமும் பூசாமல் எடுத்துக் கொண்டு அதை எழுத்தாக மாற்றி சக மனிதர்களிடம் சமர்ப்பிக்கும் ஒரு உன்னத ஆத்மாவைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் பெருமைப்படுகிறேனே ஒழிய நீங்கள் கூறுவது போல் இல்லை.

நான் என் வாழ்வில் மிகத் தாமதமாகவே சாருவை சந்தித்து விட்டேன்.  இல்லையென்றால் அந்த அற்புதமான உலகத்தில் மற்ற படைப்பாளிகளுடனும் சேர்ந்து பயணிக்கும் ஒரு அருமையான வாய்ப்பை நான் இழந்திருக்க மாட்டேன். ஏனென்றால் சாருவே அதைச் செய்திருப்பார்.

(நான் எழுதியிருப்பதைப் படித்து விட்டு சாரு மேலே கண்டுள்ள பத்தியில் நான் சொல்லியிருப்பது புரியவில்லை என்றார். அதற்கு என் பதில்: நானும் ஒரு எழுத்தாளராகவோ அல்லது கலைத்துறையின் வேறோர் அங்கமாகவோ மாறி, வாழ்வின் உச்சத்தை அடைந்திருப்பேன்.)

5. உங்களது உறவினர்களை நன்கு உபசரிப்பாரா? எப்போதாவது உங்களவருக்கும் உங்கள் உறவினர்களுக்கும் ஏதாவது உரசல் வந்திருக்கிறதா?  அதைப் பற்றிச் சொல்ல முடியுமா?

சாருவைப் பொறுத்தவரை உறவினர், அசலார் என்ற பாகுபாடே கிடையாது.  அவருக்கு எல்லோரும் ஒன்றுதான்.  எப்படி என்றால், தினமும் அவர் எங்கள் பப்புவை வாக்கிங் அழைத்துக் கொண்டு போவார். அப்போது ஒரு வீட்டின் முன்னால் அது அசுத்தம் செய்து விட்டது.  அந்த வீட்டின் உரிமையாளர் சாருவை கண்டபடி திட்டி விட்டார்.  சாரு அவரிடம் மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாமல் தன் சட்டையைக் கழற்றி அதைச் சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு வந்தார்.  இது ஒரு முறை இரண்டு முறை நடந்ததல்ல; பலமுறை பல இடங்களில் நடந்திருக்கிறது.  நான் தான் அவர்களிடம் சென்று வாதிட்டிருக்கிறேனே ஒழிய சாரு இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதே கிடையாது.  எனக்கும் சரி, அவருக்கும் சரி, அனைவருமே எங்கள் உறவுக்காரர்கள்தான்.

6. கடைசியாக அவர் உங்களுக்கு என்ன பரிசு கொடுத்தார்? எப்போது?

இந்த வாழ்க்கையே கடவுளின் பரிசு தான்.  அப்படியிருக்கும் போது சாருவும் எனக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய பரிசாகத்தான் கருதுகிறேன்.  நான் எதையும் இங்கே மிகைப்படுத்திக் கூறவில்லை.  அவர் எனக்குக் கற்பித்தவற்றுள் மிகப் பெரிய ஒன்று, பணிவு.  அதையே எனக்கு இந்த வாழ்வில் கிடைத்த மிகப் பெரிய பரிசாகக் கருதுகிறேன்.  இருந்தாலும் உங்கள் கேள்விக்கான நேரடி பதில் இதோ:  நான் கேட்காமலேயே ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் கல்யாண நாளின் போதும் தீபாவளி அன்றும் புடவைகளையும் எனக்குப் பிடித்த மற்ற விஷயங்களையும் பரிசாகக் கொடுத்து அவரது அன்பை என் மீது பொழிந்து தள்ளுவார்.

7. வீட்டு நிர்வாகத்தில் அவரது பங்கு என்ன?

வீட்டு நிர்வாகம் என்பது எங்கள் வீட்டைப் பொறுத்தவரை தனித்தனியான விஷயமாகவே இருந்ததில்லை.  சமையலுக்குக் காய் நறுக்கித் தருவது, துணி மடிப்பது, சில சமயம் முழு சமையலும் செய்வது போன்ற அனைத்து விஷயங்களிலும் அவர் இருந்து கொண்டிருப்பார்.  சுருக்கமாகச் சொன்னால், சாரு என் கணவர் என்பதை விட எனக்குத் தாயும் ஆனவர் என்றே சொல்வேன்.  இல்லை; அதுவும் போதவில்லை.  அவரே என் friend, philosopher and guide.

8.  உங்களவருக்கு நாய் வளர்ப்பில் ஆர்வம் இருப்பது தெரியும்.  நாய்ப் பராமரிப்பில் நீங்களும் ஈடுபடுவீர்களா?

சாரு மட்டும் அல்ல; நானும் என் மகன் கார்த்திக்கும் நாய் மட்டும் அல்ல; செல்லப் பிராணிகள் அனைத்தையும் எங்கள் குழந்தைகளாகவே நினைக்கிறோம்.  அதனால், என் உலகில்  ஒவ்வொரு நொடியும் சந்தோஷத்தைக் கொண்டு வரும் ஜீவன்கள் அவை.  நம்முடைய சக ஜீவிகளுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பை நான் கேட்காமலேயே உருவாக்கித் தரும் பிராணிகள் எல்லாவற்றையும் நாங்கள் நேசிக்கிறோம்.

9. அவரது படைப்புகள் அனைத்தையும் படித்திருக்கிறீர்களா?

சாரு வேறு, அவருடைய எழுத்து வேறு அல்ல.  அப்படிப்பட்ட நிலையில் அவருடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அந்தப் படைப்புகளைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.  மேலும், அவரது படைப்புகளின் ஆதார சரடே நான் தான். அவரது படைப்புகளினூடே தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

10. ஜெயமோகன் பற்றி வீட்டில் பேசுவது உண்டா?

ஜெயமோகன் மட்டுமல்ல; வேறு யாரைப் பற்றியுமே எங்கள் வீட்டில் பேசுவதில்லை. ஏனென்றால், அது அன்பு என்னும் நியதிக்குப் புறம்பானது.  அதோடு சாரு என் அருகே இருக்கும் போது அதை விட்டு விட்டு வேறு ஒருவரைப் பற்றிப் பேசுவதோ அல்லது விவாதிப்பதோ எந்த விதத்தில் பயன் அளிக்கும்?

Comments are closed.