உறங்கச் செல்லும் முன் முகநூலை ஓரிரு நிமிடங்கள் பீராயலாம் என்று பார்த்தால் இப்படி ஒரு அற்புதமான சிறுகதை. எழுதியவர் அராத்து. சும்மா பிரித்து மேய்கிறார். படித்துப் பாருங்கள்…
சயனைட் குறுங்கதைகள் – காதல் சதுரங்கம்.
பேர் ஊரா முக்கியம் ? கதைதானே முக்கியம் . அவன் விமானத்தில் வந்து கொண்டு இருந்தான்.
அவள் கடும் உழைப்பாளி . இந்த வாக்கியம் இதுவரை தமிழ் இலக்கியத்திலோ , பல்ப் ஃபிக்ஷனிலோ அல்லது செக்ஸ் கதைகளிலோ கூட வந்திருக்காது.
அவளுக்கு முதல் நாள் பகல் ஷிஃப்ட் . இவனுடன் விடுமுறையை கொண்டாட வேண்டும் என்பதால் இரவு ஷிஃப்டையும் தொடர்ந்தாள்.மறுநாளும் அரைநாள் வேலை பார்த்தாள்.
வேலையை முடித்து விட்டு இவனைப் பார்க்க விமான நிலையத்திற்கு 6 மணி நேரம் காரை ஓட்டிக்கொண்டு வர வேண்டும். அங்கேயிருந்து ஒரு சொர்க்கத் தீவிற்கு இருவரும் செல்ல வேண்டும்.
இவனுக்கு உள்ளுணர்வு ஜாஸ்தி, மனதாலும் உடலாலும்.
இவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்து கார் ஓட்டி வந்தால் விபத்து நடக்க வாய்ப்புள்ளது என்பது உள்ளுணர்வு இல்லாதவர்க்கே சுலபமாக புரியும் அல்லவா? உள்ளுணர்வு வேறு இவனுக்கு அதிகமாக புடுங்கிக்கொண்டு அடிக்க , மை டியர் , உனக்கு டயர்டா இருக்கும் , வழியில நிறுத்தி டீ சாப்பிடு என்ற அரிய அன்பான காதலான அறிவுரையை கொடுத்தான். அவள் டீ சாப்பிட மாட்டாள் என்பதும் ஐயாவுக்குத் தெரியும்.
உள்ளுணர்வு சரியாகத்தான் சொன்னது , விபத்து நடக்கும் என்று. டாக்ஸி பிடித்து வரச்சொல்லியிருக்க வேண்டும். சொன்னாலும் கேட்க மாட்டாள் என்பதும் தெரியும்.சொல்லவும் இல்லை. கடுமையாக சொல்லியிருக்கலாம், மிரட்டியிருக்கலாம். வில்லை.
ப்ரோக்ராமையே தள்ளிப்போட்டு இருக்கலாம். கேட்க மாட்டாள்தான்.
இவை அனைத்தும் தெரிந்தும் புரிந்தும் , நமக்கு எதுக்கு வீண் ரெஸ்பான்ஸிபிளிட்டி , அவ எப்படியாவது வந்துடுவா …என சுயநல அலட்சியத்தோடு கண்டுகொள்ளாமல் இருந்திருப்பான் போல.
இவனது விமானம் தரை இறங்கியது. போன் செய்தால் எடுக்க மாட்டாள் என உள்ளுணர்வு சொல்லச் சொல்ல போன் செய்தான். எடுக்கவில்லை.
1 ..2 .. 3 முறை முயற்சி செய்து கொண்டேயிருந்தான்.
ஐந்தாவது முறை எடுத்து விட்டாள். நான்காவது முறை ? இவன் நான்காவது முறை போன் செய்யவில்லை.
டிபேச்சரில் இருக்கேன் சீக்கிரம் வா என்றாள். ஓடினான். கொஞ்சினார்கள் , குலவினார்கள்.தீவுக்குச் சென்றார்கள். காதலால் கசிந்துருகினார்கள்.
விடுமுறை முடிவுக்கு வரும் நாளன்று சொன்னாள்.சாரி , உன் ஹாலிடேவை கெடுக்க வேணாம்னுதான் இவ்ளோ நேரம் சொல்லலை, இப்ப சொல்றேன் , ஆனா இதைப்பத்தி இனிமே பேசக்கூடாது , பிராமிஸ் என்றாள்.
பிராமிஸ் என்றான்.
நான் உன்னைப் பாக்க வந்த போது என் கார் ஆக்ஸிடெண்ட் ஆயிடிச்சி என்று கூறியபடியே , அந்த போட்டோவைக் காட்டினாள்.
கார் சுக்கு நூறாக உடைந்து கிடக்க , ரத்த வெள்ளத்தில் பிணமாக அவள்.
உறைந்து விட்டான். அப்ப இவ்ளோ நேரம் பொய் சொல்லி நடிச்சிட்டு இருந்தியா என கேட்டபடி கேவிக் கேவிப் பார்த்தான், அழுகை வரவில்லை.
இருவரும் கட்டிக்கொண்டனர்.
இவன் வந்த விமானம் விபத்துக்குள்ளானது பற்றி இவன் ஏதும் கடைசி வரை சொல்ல வில்லை.
இன்று வரை தற்கொலை செய்து கொண்டதாக சொன்ன பொய்யை மெயிண்டெயின் செய்து கொண்டு காதலித்துக்கொண்டு இருக்கிறான் அவளை.
Comments are closed.