புதிய எக்ஸைல் : நேசமித்ரன் வாழ்த்து

முகநூலில் எழுதுபவர்களின் தமிழைப் பார்க்கும் போதெல்லாம்  நான் துக்கம் கொள்வதுண்டு.  தமிழ் இனி செத்துப் போகும் என்று நண்பர்களிடம் புலம்புவதுண்டு.  ஆனாலும் பாரதியும், மௌனியும், நகுலனும், தர்மு சிவராமுவும் கொடுத்த பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமகாலத் தமிழ் எழுத்தை நான் அதிகம் வாசிப்பதில்லை.  வாசிக்க விரும்புவதும் இல்லை.  நான் தமிழில் எழுதினாலும் இந்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு மத்தியில் சென்று விடவே விரும்புகிறேன்.  ஓரளவு அந்த முயற்சியில் வெற்றியும் கிட்டி விட்டது.  ராஸ லீலா அல்லது எக்ஸைல் ஆங்கிலத்தில் வெளிவந்து விட்டால் அது முழுமை அடைந்து விடும்.  ஆனால் அதற்காக நான் இந்திய ஆங்கில இலக்கியத்தில் எக்கச்சக்கமாக வாசிக்க வேண்டியிருக்கிறது.  Allen Sealy எழுதிய The Trotter Nama மாபெரும் தலையணை சைஸில் உள்ளது.  எம்ஜியாரை மையமாக வைத்து ஹீரோ என்ற நாவலை எழுதியிருக்கிறார்.  அமிதாவ் கோஷின் கல்கத்தா க்ரோமஸோம் படித்தேன்.  நாலு பக்கம் தாண்ட முடியவில்லை.  அரவிந்த் அடிகா.  படு சுவாரசியம்.  ஆனால் இலக்கியம் கம்மி.  இப்படி எக்கச்சக்கமான நாவல்கள் கிடக்கின்றன.

இந்த நிலையில் மதுரை அருணாச்சலம் அவ்வப்போது சில எழுத்தாளர்களை எனக்கு அறிமுகப்படுத்துவார்.  அவருடைய அறிமுகம் என்றுமே சோடை போனதில்லை.  அவர் சொல்லித்தான் எனக்கு குமரகுருபரனைத் தெரியும்.  கணேச குமாரன், நேசமித்ரன் மற்றும் பலரையும் தெரியும்.  சமீபத்தில் நேசமித்ரனுக்கு புதிய எக்ஸைல் பற்றி ஒரு கடிதம் எழுதினேன்.  அதற்கு நேசமித்ரன் எழுதியிருந்த பதில் கண்டதும் – அவருடைய பாராட்டுதலான வார்த்தைகளைப் படித்ததும் – லேசாக என் கண்கள் கலங்கி விட்டன.  ஏனென்றால், அந்த அளவுக்கு இதுகாறும் நான் சக எழுத்தாளர்களாலும் சமூகத்தாலும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.  ஒரு நடிகர் நானும் விகடனும் என்று விகடனில் எழுதினார்.  அதில் அவர் தேவன், கல்கி, மணியன் என்று துவங்கி நம் காலத்து வண்ணதாசன், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ரா. என்று அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இவர்கள் விகடன் எழுதியதைப் படித்து நிறைய கற்றுக் கொண்டதாக எழுதினார்.  அந்தப் பட்டியலில் தமிழில் எழுதும் அத்தனை பேரின் பெயரும் இருந்தன.  என் பெயர் மட்டும் இல்லை.  ஒரு நண்பர் தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் என ஒரு பட்டியல் போட்டார்.  அ. மார்க்ஸ், கோ. கேசவனிலிருந்து ஆரம்பித்து ஆத்மார்த்தி வரை இருந்த அந்தப் பட்டியலில் என் பெயரை மட்டும் காணோம்.  போகட்டும்.  தப்புத் தாளங்கள் என்று ஒரு புத்தகம்.  நான் மாத்யமம் என்ற மலையாளப் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.  அந்தத் தொகுப்பு என் வாழ்நாள் முழுதுமான வாசிப்பின் சாரம்.  சிறிய புத்தகம்தான்.  அந்தப் புத்தகம் பற்றி இதுவரை தமிழ்நாட்டில் ஒரு ஆத்மா கூட என்னிடம் வாய் திறந்து பேசியதில்லை.  நானும் வெட்கத்தை விட்டு நானாகவே போய் அந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்பதுண்டு.  எதிர்மறையான பதிலே வரும்.  நேசமித்ரன் அந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.

நேசமித்ரனின் இயக்கி என்ற கதையைப் படித்தேன்.  கல்குதிரையில் வெளிவந்தது.  என்னைப் பாராட்டினால் பதிலுக்கு நன்றிக் கடனாக ஒருவரைப் பாராட்டுவது என் பழக்கத்திலேயே இல்லை.  பொதுவாக என் பாராட்டுக்குரியவர்கள் என்னை அசிங்கமாகத் திட்டுவதே வழக்கம்.  உதாரணம், அசோகமித்திரன், சுஜாதா.  விதிவிலக்கு தருண் தேஜ்பால்.  எனவே நேசமித்ரன் என்னைப் பாராட்டுகிறார் என்பதற்காக நான் பாராட்டினால் அது என்னையே நான் அவமானப்படுத்திக் கொள்வதாகும்.  இதையெல்லாம் தமிழ்ச் சூழலில் சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது.    பாரதியும் மௌனியும் நகுலனும் சிவராமுவும் கொடுத்த பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல சிலர் இருக்கிறார்கள் என்று மேலே குறிப்பிட்டேன் அல்லவா?  அதில் ஒருவர் தான் நேசமித்ரன்.  இயக்கியில் இவர் சிருஷ்டித்திருக்கும் தமிழைப் பார்க்கும் போது எனக்கு எதிர்காலத் தமிழ் பற்றி நம்பிக்கை வந்து விட்டது.  தமிழ் சாகாது.  இன்னும் பன்னெடுங்காலத்துக்கு பல நூறு நேசமித்ரன்கள் தோன்றி தமிழைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள்.

இனி நானும் நேசமித்ரனும் எழுதிக் கொண்ட கடிதங்கள்:\

அன்புள்ள சாரு,

வணக்கம். மிகப் பெரும் நாவல் பணி நன்னிறைவு அடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்! இந்த மெயில் மிகவும் உற்சாகமாய் இருக்கிறது. மிகப் பெரிய உழைப்பையும் மேதமையையும் கோரி உருவெடுத்திருக்கும் எக்ஸைல் தமிழின் மகத்தான சாதனைகளில் ஒன்றாய் இருக்கும் என்று நம்புகிறேன்.  இந்தியாவில் இருக்கும் சாத்தியங்கள் அமைந்து வந்தால்  நிச்சயம் கலந்து கொள்வேன் .

செய்தியை நண்பர்களிடம் எடுத்துச் செல்கிறேன் . உங்களின் எல்லாப் புத்தகங்களையும் போல இதுவும் உங்கள் பெயருள்ள என் அலமாரியின் வரிசையில் இடம் பெறும். முன்பதிவு செய்து விடுகிறேன்

மிக்க அன்புடன்,

நேசமித்ரன்.

இதற்கு நான் எழுதிய பதில்:

அன்புள்ள நேசமித்ரன்,

சில விஷயங்கள் எனக்குக் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.  அதில் ஒன்று. உங்களையும் கணேச குமாரனையும் கார்த்திகைப் பாண்டியனையும் குமரகுருபரனையும் படிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.  இனிமேல் முடியும்.  ஆறு மாத காலம் நாவல் எழுதுவதை ஒத்திப் போட்டு விட்டு வெறுமனே படிக்க மட்டும் செய்யப் போகிறேன்.  கணேச குமாரனின் ஒரு சிறுகதைத் தொகுதியை சமீபத்தில் படித்தேன்.  பைத்திய ருசி. பாராட்ட வார்த்தைகளே இல்லை.   பைத்தியம் என்று மற்றவர்களால் சொல்லப்படும் ஒருத்தனின் கதையை வெறும் நாலு பக்கங்களில் எழுதியிருக்கிறார்.  கார்ஸியா மார்க்கேஸின் கதையைப் படிப்பது போல் இருந்தது.  இதையெல்லாம் ஏன் லட்சக் கணக்கில் படிக்காமல் இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.  ஒரு ரிக்‌ஷாக்காரருக்குக் கூட புரிகிறாற்போன்ற நடை.  இரண்டு நூற்றாண்டுகள் தமிழர்கள் பின்னே இருக்கிறார்கள்.

சாரு

நேசமித்ரனின் பதில்:

நீங்கள் வாசிக்கும் அளவிற்கு எழுத நான் இன்னும் உழைக்க வேண்டும் சாரு. கணேசகுமாரனின் கதைகள் பைத்திய நிலையை அதன் வலியை  கொண்டாடும் உலகத்தில் இருந்து எழுதப் படுகிறது.  ஆனால் அவனை (என் நண்பன் ) மிகக் கொடூரமாக விமர்சிப்பவர்களில் நானும் ஒருவன்.கொஞ்சம் ஸ்லிப் ஆனால் கழிவிரக்கமாக மாறி விடக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ள எழுத்து.

என்ன செய்வது சாரு, நாங்கள் உங்களை வாசித்து வளர்ந்த தலைமுறை. எந்த புதிய கதைக்களனை புதிய கருவை புதிய சொல்முறையைப் பார்த்தாலும் அதன் உச்சங்களை நீங்கள் அநாயாசமாக முன்னமே சொல்லிக் கடந்திருப்பது நினைவுக்கு வருகிறது .

தப்புத்தாளங்கள் தொகுப்பில் ஸான்ஹீனஸின் The Clandestine Nation படத்தின் நாயகன் பற்றி எழுதும் போது Jacha Tata Danzante  நடனம் குறித்து சொல்லி இருப்பீர்கள். கிராம மக்கள் பசியால் வாடும் போது  கடவுளைத் திருப்திப்படுத்த உயிர்பலி கொடுக்கப்படும் நபர் உயிர் போகும்வரை ஆடும் புராதன நடனம்.

எத்தகையை உன்னதமான பித்து நிலை அது. வலியைக் கொண்டாடுதல். அற்புதம்.

ஸீரோ டிகிரியில் இதையும் கடக்கும் தருணங்கள் எத்தனை?!

இளையவர்கள் இன்னும் எழுதிக் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

உங்களின் பெருந்தன்மையும் தொடர்ந்து அப்டேட் செய்து  கொள்ளும் வேட்கையும் எங்களைப் போன்றவர்களுக்கு பரிசு.

மிக்க மகிழ்ச்சி சாரு, உங்களுக்கு வாசிக்க நேரம் கிடைக்கட்டும்.

இருக்கும் போது ஒருவேளை உணவிடாதவர்கள் இறந்த பிறகு  16 வகை பதார்த்தங்களுடன்  படையலிடுவார்கள். தமிழ் வாசகர்களைச் சொல்கிறேன்.

ஆனால் தலைமுறை மாறிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன் சாரு.

மிக்க அன்புடன்

நேசமித்ரன்.

நேசமித்ரனின் இயக்கி என்ற அற்புதமான சிறுகதையைப் படிக்க:

http://nesamithran.blogspot.in/2014/08/blog-post.html