1
எல்லாமே திட்டமிட்டபடிதான்
நடப்பதாகச் சொல்கிறார்கள்
யோகானந்த பரமஹம்ஸர்
ஒரு குறிப்பிட்ட தேதியில்
தன் உடலை விட்டுப் பிரிவதாக
அறிவித்தார்
‘என் உடலை இருபது நாட்கள் வைத்திருங்கள், ஒன்றும் ஆகாது’
என்றார்
உடல் சிதையவில்லை
பிணவறை அதிகாரி
வியந்து சான்றளித்தார்
தியாகராஜரும்
ஒரு வாரத்துக்கு முன்பே
நாத தனு மனிஷம் பாடி
சீடர்களிடம் விடைபெற்றார்
ஞானிகளை விடுங்கள்
அஞ்ஞானியான என்னிடமே
நாலு சோதிடர் நாலு
வெவ்வேறு காலத்தில்
நாலு வெவ்வேறு இடங்களில்
வைத்து
என் மரண காலத்தை
ஒன்றே போல் குறித்தனர்
2
நானொரு பேரரசன்
எனக்கொரு
அந்தப்புரம் இருந்தது
அரசர்கள் அந்தப்புரத்தில் குடியிருப்பார்களா?
நானோ அங்கேயே
அடிமையானேன்
மதில்களும் அகழிகளுமில்லாத
பின்நவீனத்துவ அந்தப்புரம்
அழகிகள் எங்குவேண்டுமானாலும்
செல்லலாம்
யாருடன் வேண்டுமானாலும்
கூடலாம் எந்த வரைமுறையுமில்லை
வெளியிலிருந்த சிநேகிதிகள்
பயமுறுத்தினார்கள்
மீட்டூவில் மாட்டிவிடுவாயென
இல்லை, நான்தான் அந்த அழகிகளை மாட்டிவிட வேண்டுமென்றேன்
கதையைக் கேளுங்கள்,
பேரரசனெனினும்
அந்தப்புரத்தில் நான் மட்டும்
ஆடையணியக் கூடாது
ஒருத்தி என் புட்டத்திலே
காலால் போடுவாள்
நான் எட்டத்திலே போய்
விழுவேன்
விழுந்தெழுந்து
பேரின்பம் பேரின்பமென
ஆர்ப்பரிப்பேன்
போதையில் மட்டும்
இரு காலில் வலம் வரலாம்
ஒருநாள் இருபத்தோரு வயது
அழகியொருத்தி என் தொடையில்
கால் போட்டு எனக்கெதையோ
போதித்துக்கொண்டிருக்கிறாள்
நான் நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன்
எனக்கு போதமா ஏறும்
அவள் முலைகள்
என் வாயைத் தட்டிக்கொண்டிருந்தன
ஒருநாள் பாருங்கள்
இன்னொரு அழகி
ஹாட் டாக் சாப்பிட்டுக்கொண்டே
இது என்ன தெரியுமா தலைவா
உன் ஆண்குறியென்றாள்
ஐயோ எனக் கீழே நோக்கினால்
ஆண்குறியைக் காணோம்
ஹஹ்ஹா என சிரித்தபடி
Game of Thrones பார்த்தேனா
உன்னை Theon Greyjoy ஆகவும்
என்னை ராம்ஸேயாகவும்
கற்பிதம் செய்து கொண்டேனென்றாள்
பிறகு நான் சித்த வைத்தியத்தின்
மூலமாக வேறொன்
றடைந்தேன்
அந்தப்புரம் இப்படி
மாறியதற்கு காரணம் நானல்ல
சதிகாரன் ஃபூக்கோதான்
அவன்தான் அதிகாரம் கூடாதென்றான்
அதை நான் அந்தப்புரத்தில்
அறிவித்தேனா
ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய்
அடிமையாய்க் கிடந்தவர்கள்
அதிகாரத்தை
யெடுத்துக்கொண்டார்கள்
***
3
ஒருநாள்,
மோகினியொருத்தி
என்னை வேறோரிடத்துக்கு
அழைத்துச் சென்றாள்
அங்கே நாங்கள் மட்டுமே
இருந்தோம்
அவளென்னைச் சீராட்டினாள்
பாராட்டினாள்
என் தேகமெங்கும் தன் முலைகளாலும்
யோனியினாலும் ஒத்தடமிட்டாள்
எனக்குக் காலணி மாட்டுவித்தாள்
பெட்டி படுக்கையெல்லாம்
அடுக்கிக் கொடுத்தாள்
தாகமென்றால் நீரூட்டி
பசியென்றால் சோறூட்டினாள்
தாயாகவும் தாரமாகவுமிருந்தாள்
கேட்டதெல்லாம் கிடைத்தது
நம்ப முடியவில்லை
ஒருநாள் விடைபெற்றாள்
சந்திப்போமெனத் திரும்பினேனென் அந்தப்புரம்
புற்களும்
நாணல்களுமாய் மண்டிக்கிடந்தது
அந்தப்புரம்
சேறும் சகதியுமாயிருந்த அந்த
இடத்தில் தவளைகளைப் பிடித்து
பாம்புகள் பசியாறிக்கொண்டிருந்தன
எங்கேயென் அழகிகளென
பாம்பின் வாயில் தத்தளித்துக்கொண்டிருந்தவொரு
தவளையிடம் கேட்டேன்
நாங்கள்தானென்று
அழுதது
நானென்ன செய்ய முடியும்
எல்லாம் திட்டமிட்டபடியேதான்
நடக்கிறதென்றார்
யோகானந்த பரமஹம்ஸர்