அமிர்தம் சூர்யாவின் கடிதமும் பதிலும்…

ஜி வணக்கம்…இது ஜெயமோகன் என்னை பற்றி எழுதியது..உங்களுக்கு பிடிக்காமல் போகும் ஆயினும் என்னை உங்களிடம் ஒப்பு கொடுக்க வேண்டும் அல்லவா..அந்த புரிதல் தான் நட்பை வளர்க்கும்..எனக்கு உங்கள் நட்பு வேண்டும்…
அமிர்தம் சூர்யா
அன்புள்ள சூர்யா,
dear surya

interstellar படம் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.  அதில் வரும் நாயகன் விண்வெளியில் சில மாதங்கள் (அல்லது வருடங்களா, ஞாபகம் இல்லை) இருந்து விட்டு பூமிக்குத் திரும்பும் போது அவனுடைய எட்டு வயது மகள் எண்பது வயதுக் கிழவியாக பேரன் பேத்திகளுடன் இருப்பாள்.  அப்படித்தான் என்னுடைய அஞ்ஞாதவாசம் எனக்கு ஒரு பிரமிப்பைக் கொடுத்தது.  தவறாக நினைக்க வேண்டாம்.
ஜெயமோகன் உங்களைப் பற்றி எழுதியதைப் படித்தால் அது ஏன் எனக்குப் பிடிக்காமல் போக வேண்டும்?  ஜெயமோகன் எனக்கு என்ன எதிரியா?  ஜனங்களிடம் உள்ள பொதுவான நம்பிக்கைக்கு நீங்களும் பலியானது ஆச்சரியமும் வருத்தமும்.  பொதுவான ரசனை விஷயங்களில் அவர் வட துருவம் நான் தென் துருவம்.  ஆனால் தமிழ் இலக்கியவாதிகளை அணுகும் போது இ.பா., தி.ஜா., தி.ஜ.ர., ஆதவன், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், ப. சிங்காரம், மௌனி, நகுலன், கு.ப.ரா., அசோகமித்த்ரன் என்று எல்லோர் மீதான மதிப்பும் மரியாதையும் அவர்களுடைய பங்களிப்பு பற்றிய தெளிவும் அவருக்கு எப்படியோ அப்படியே தான் எனக்கும்.  சு.ரா., புதுமைப் பித்தன், ஜி.நாகராஜன் ஆகிய மூவர் மட்டுமே எனக்குள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று எழுதியிருக்கிறேன்.  மிக விரிவாக விமர்சித்திருக்கிறேன்.   அடிக்கடி அவர் ஜெயகாந்தனை ஆசான் என்று எழுதுவதும் எனக்குப் பிடிக்காது.  அதற்கு என்ன செய்ய முடியும்?  என்னுடைய தமிழாசிரியர் சீனி. சண்முகம் சார் கூடத்தான் எனக்கு ஆசான்.
எனவே ஜெயமோகனுக்குப் பிடித்ததெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று நீங்கள் முடிவுக்கு வர எந்த அவசியமும் இல்லை.
வரும் ஆறு மாதங்களில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு சமகாலத்திய தமிழ்ப் படைப்பாளிகளைப் படிக்க இருக்கிறேன்.  இதுவரை படிக்காததற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்.
இளங்கோவின் புத்தக வெளியீட்டில் நீங்கள் பேசியதைப் பார்த்து பிரமித்துப் போனேன்.  அற்புதம்…
அன்புடன்,
சாரு