புத்தக விழாவுக்குச் சென்று வந்த அனுபவம்…

நேற்று ராயப்பேட்டையில் நடக்கும் புத்தக விழாவுக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.  நிறைய புத்தகங்கள் தேவைப்பட்டன.  கையில் காசு இல்லை.  வங்கியிலும் வெறும் 8000 ரூ. தான் இருந்தது.  எனக்குத் தேவைப்பட்ட நூல்களை வாங்க நிச்சயம் 20000 ரூ. வேண்டியிருக்கும்.  ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் வாங்கிக் கொண்டு பேசாமல் வந்து விட்டேன்.   இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது.  புத்தகங்கள் வாங்குவதற்குக் கூட  பணம் இல்லாத அளவுக்கா இருக்கிறது ஒரு தமிழ் எழுத்தாளனின் நிலை?  தோப்பில் முகமது மீரானின் இரண்டு நாவல்களைத் தேடிக் கொண்டிருந்தேன்.  ஒரு நண்பரைத் தொலைபேசியில் அழைத்து அவரைப் பல புத்தக விற்பனை நிலையங்களிலும் விசாரிக்கச் சொல்லி கடைசியில் டிஸ்கவரி புக் பேலஸில் தோப்பிலின் இரண்டு நாவல்களும் இருப்பதாகச் சொன்னார் நண்பர்.  இரண்டு தினங்களுக்கு முன்பு வாங்கியும் விட்டார்.  என்னிடம் கொடுக்க அவருக்கு நேரம் இல்லை.  காலையில் போனால் இரவு ஒன்பது பத்து ஆகி விடுகிறது வேலை முடிய.   ஆனால் நேற்று என் கண் முன்னே காலச்சுவடு அரங்கில் தோப்பிலின் குறிப்பிட்ட இரண்டு நாவல்களும் இருந்தன.  வாங்கக் காசு இல்லை.  அந்த நூல்களை வாங்கி வந்திருந்தால் தோப்பில் முகமது மீரான் பற்றிய கட்டுரையை எழுதியிருக்கலாம்.

புத்தகங்கள் அதிகம் விற்றால் இந்தப் பிரச்சினை இல்லை.  ஆண்டுக்குக் குறைந்த பட்சம் பத்து லட்சம் ராயல்டி கிடைக்க வேண்டும்.  ஆனால் கிடைப்பதோ ஆயிரங்களில்.  அதை வைத்து என்ன செய்ய?  28-ஆம் தேதி ஐரோப்பியப் பயணம்.  இரண்டு நண்பர்கள் மட்டுமே பணம் அனுப்பினார்கள்.  மாதச் சம்பளக்காரர்கள்.  இதெல்லாம் உண்மையில் பத்திரிகைகள் செய்ய வேண்டிய காரியங்கள்.   உலகத்தில் எந்த எழுத்தாளனும் தன்னுடைய செலவில் பயணம் செய்து பத்திரிகைகளுக்கு எழுதியதில்லை.  இங்கே அதை நான் செய்ய வேண்டியிருக்கிறது.  மணியன் மட்டுமே தனியாக நிற்கிறார்.  அவருடைய பயணக் கட்டுரைகளைப் பலரும் கிண்டல் செய்வதுண்டு.  நானும் செய்திருக்கிறேன்.  எங்கோ ஒரு ஆஃப்ரிக்க நாட்டுக்குப் போய் அங்கே ஒரு தமிழரைச் சந்தித்து அவர் வீட்டில் இட்லி சாப்பிட்டது பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்.  ஆனாலும் மணியன் முக்கியமானவர்.  ஏனென்றால், பெரூவில் அவரைத் தவிர வேறு ஒரு தமிழ் எழுத்தாளன் கூட கால் பதித்ததில்லை.  இன்று வரை.  பெரூவில் தமிழர்கள் இருக்கலாம்.  ஆனால் மணியனுக்கு முன்னும் சரி, பின்னும் சரி, பெரூவை எந்தத் தமிழ் எழுத்தாளனும் இதுவரை பார்த்து எழுதியதில்லை.  (சினிமாக்காரர்கள் போய் வந்து விட்டார்கள்.  அவர்கள் போகாத இடம் ஏது?)

எஸ். ராமகிருஷ்ணன் போன்ற நண்பர்கள் மேற்கொள்ளும் பயணங்களை என்னால் அங்கீகரிக்க முடியவில்லை.  ராமகிருஷ்ணனுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியும்.  பயணம் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.  என் நண்பரும் பிரபல மலையாள எழுத்தாளருமான ஸக்கரியா ஆஃப்ரிக்காக் கண்டத்தின் தென்முனையிலிலிருந்து வட முனை வரை தரை வழியாக ஆறு மாதம் பயணம் செய்தார்.  இடையில் ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது.  அதன் வழியாகப் போக முடியாது என்று ராணுவம் தடுத்திருக்கிறது.  பிறகு இவர் தன் பயணத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார்.  அதைக் கேட்டு ராணுவமே அவரை அடுத்த நாடு வரை தங்கள் வாகனத்தில் பாதுகாப்போடு அழைத்துச் சென்றிருக்கிறது.  அந்தப் பயணம் பற்றி மணிக்கணக்கில் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார் ஸக்கரியா.  அந்த ஆறு மாதப் பயணத்தையும் ஏற்பாடு செய்தது மாத்ருபூமி.  அதில்தான் அந்தப் பயணத்தைப் பற்றித் தொடர் கட்டுரை எழுதினார் ஸக்கரியா.  மொத்த செலவு 20 லட்சம் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.  அதிகமாகவும் ஆகியிருக்கலாம்.  இதன் பெயர் தான் பயணம்.  எழுத்தாளர்கள் பயணம் செய்து எழுத இந்த அளவுக்குச் செலவு செய்வதற்கு இங்கே ஒரு பத்திரிகை கூட இல்லை.  எல்லாம் பாலசுப்ரமணியன், சாவியோடு முடிந்து விட்டது.  பத்திரிகை ஆசிரியர் என்ற பதவி எப்போது MD என்று மாறியதோ அன்றே பத்திரிகையின் குணாம்சங்கள் அனைத்தும் தொலைந்து போயிற்று.  எனக்குப் பல பத்திரிகை ஆசிரியர் நண்பர்கள் இருக்கின்றனர்.  ஆனால் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாது.  காரணம், முன்னால் இருந்த பத்திரிகை ஆசிரியர்கள் அந்தந்தப் பத்திரிகையின் முதலாளிகளாகவும் இருந்தார்கள்.  ஆனால் இப்போது இருக்கும் ஆசிரியர்கள் அப்படி அல்ல.   அவர்களிடம் எந்த அதிகாரமும் இல்லை.

வரும் 28-ஆம் தேதி ஐரோப்பா கிளம்புகிறேன்.  ஒரு நண்பர் தன் மனைவியின் நகைகளை அடகு வைத்துப் பணம் அனுப்புவதாக எழுதியிருந்தார்.  படித்து என் கண்கள் கலங்கி விட்டன.  எழுதுவதற்கு எவ்வளவு எதிர்மறையான சூழலை சமூகமும் பத்திரிகைகளும் உருவாக்கியிருந்தாலும் இம்மாதிரி வாசகர்களே என்னை வெறி பிடித்தவனைப் போல் எழுதத் தூண்டுகிறார்கள்.  நானாவது குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து எழுதுகிறேன்.  உ.வே.சா. எந்தச் சூழ்நிலையில் அவ்வளவு ஆயிரக் கணக்கான ஓலைச் சுவடிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தார் என்பது அவ்வப்போது என் ஞாபகத்தில் நிழலாடத் தவறுவதில்லை.  முடிந்தவர்கள் பயணத்துக்குப் பணம் அனுப்பி உதவுங்கள்.

என் வங்கிக் கணக்கு விபரங்கள்:

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI A/c No. 602601 505045

Branch: T. Nagar, Chennai

A/c holder’s  Name: K. ARIVAZHAGAN

IFSC code ICIC0006026

MICR Code: 600229010

 

 

Comments are closed.