வைரமுத்துவுக்கு நோபல் பரிசு!

கிணற்றுத் தவளைகளாக வாழ்வதில் தமிழ் எழுத்தாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது மிகத் தெளிவாகத் தெரிந்த விஷயம்.  சில எழுத்தாளர்கள் கிணற்றில் வாழும் ராஜ நாகத்தையே விழுங்கி ஏப்பம் விடும் அரக்கத் தவளைகளாக இருக்கிறார்கள்.  சிலரோ கிணற்றில் வாழும் எட்டு கோடி குஞ்சுத் தவளைகளும் அறிந்திருக்கக் கூடிய அளவுக்குப் பிரபலமாக இருக்கிறார்கள்.  ஆனால் எந்தத் தவளைக்குமே இந்தக் கிணற்றுக்கு வெளியே தெரியப்பட வேண்டும் என்பது பற்றிக் கவலையே இல்லை.  கிணற்றை விட்டு வெளியேறி வெளிநாட்டுக் கிணறுகளுக்கெல்லாம் சென்று வரக் கூடிய திறமை இருக்கும் தவளைகளும் தங்களுடைய தமிழ்க் கிணற்றுக்குள்ளேயே அமுங்கிக் கிடப்பதுதான் துயரம் தருவதாக உள்ளது.  பாரதியிலிருந்து அசோகமித்திரன் வரை எல்லாத் தவளைகளும் இப்படித்தான் நினைக்கின்றன.

சாரு நிவேதிதா என்ற ஒரே ஒரு தவளை மட்டும் இந்தக் கிணற்றுக்கு வெளியேயும் நாமெல்லாம் தெரிய வர வேண்டும் என்று ரொம்ப நாளாகத் தையாத் தக்கா என்று குதித்துக் கொண்டிருக்கிறது.  என்ன பயன்?  எல்லாம் வெட்டி வேலை.

சமீபத்தில் வெளிவந்துள்ள Granta இதழின் 130-ஆவது இதழின் மென்பிரதியை இணையத்தில் காண நேர்ந்தது.  அதன் இணைப்பு இதோ:

http://granta.com/issues/granta-130-india/

இந்திய எழுத்தை அறிமுகப்படுத்தும் அந்த இதழில் உபமன்யு சட்டர்ஜி, சாமந்த் சுப்ரமணியன், அமித் சௌத்ரி, ஷர்மிஷ்தா மொஹந்தி என்று முக்கியமான பல இந்திய எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.  இதில் தமிழைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுத்தாளர் யார் தெரியுமா?  அசோகமித்திரனோ, இந்திரா பார்த்தசாரதியோ, ஜெயமோகனோ, எஸ். ராமகிருஷ்ணனோ, சாரு நிவேதிதோவோ இல்லை.  பத்து ரூபாய் க்ரைம் நாவல் எழுதும் சுபா.  இது பற்றித் தமிழ் எழுத்தாளர்கள் க்ராண்டா பத்திரிகைக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டாமா என்று நண்பர் ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்.  அவரிடமிருந்து வந்த பதில் இது:

மதிப்புக்குரிய சாரு அவர்களுக்கு,

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் துபாயிலிருந்து கல்ஃப் ஏர்வேஸ் மூலம் இந்தியா வந்து சேர்ந்தேன்.  விமானத்திலும் இந்தியா வந்த பிறகும் மோகன் லாலிடம் ஐந்தாறு கதைகளை சொல்ல வேண்டியிருந்தது.  கொஞ்ச நேரம் முன்புதான் லால் திருவனந்தபுரம் கிளம்பினார்.  நான் இதோ நாகர்கோவில் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.   என்ன செய்வது, இந்த லௌகீக காரியங்களையும் கவனிக்கத்தானே வேண்டியிருக்கிறது?

உங்கள் கடிதம் பார்த்தேன்.  சரியாக 25 வருடங்களுக்கு முன்பு நித்யாவின் குடிலத்தில் க்ராண்டா ஆசிரியர் அயான் ஜேக்கை சந்தித்திருக்கிறேன்.  க்ராண்டா இதழ்களை வைத்து நித்யாவும் ஜேக்கும் பேசி கொண்டிருக்கும் போது க்ராண்டாவை புரட்டி பார்த்தேன்.    கலை என்பது கொஞ்சமும் இல்லாத அசட்டு முயற்சி என்பது எடுத்த எடுப்பில் தெரிந்து கொண்டேன்.  அந்த இதழ் கொடுத்த மனக்கசப்பு நீங்க நான்கு முழு நாட்கள் தேவைப்பட்டன.  சர்வ தேச அளவிலேயே இது போன்ற சராசரி இதழ்களும் இவை முன்னிறுத்தும் வணிக நோக்கங்களும்தான் இலக்கிய ஈடுபாடுகளாக நம்பப்படுகின்றன என்பதை நான் அப்போதே தெரிந்து கொண்டேன்.    நோபல், புக்கர் போன்ற எல்லா மேலை நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.   இது பற்றி மேலும் இதழில் 13 கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.

கிழக்கு பதிப்பகம் வெளியீடான ஜெயமோகன் கட்டுரைகள் என்ற தொகுப்பில் தொகுதி எண் 89-இல் அந்தக் கட்டுரைகள் வந்திருக்கின்றன.

அன்புடன்,

ஜெ.

16.4.2015. நள்ளிரவு மணி 2.32

இந்த விவகாரம் பற்றிய என் கோபாவேசமான கடிதத்துக்கு நண்பர் எஸ். ராமகிருஷ்ணனின் பதில்:

அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய சாரு,

எப்படி இருக்கிறீர்கள்?   நான் இப்போது ஹொங்ஙனஹள்ளி என்று சிறுகிராமத்தில் அலைந்து கொண்டிருக்கிறேன்.   துங்கை நதிக்கரையில் அமைந்திருக்கும் கிராமம் இது.  ஊரில் வீடுகளே இல்லை.  வீடுகளே இல்லாத ஊரையும் கிராமம் என்று அழைக்கும் பண்பு நம்முடையது அல்லவா?  நதிக்கரையில் கருத்த நிற பாறைகள் கிடக்கின்றன.  அதில் ஒரு கிழவன் அமர்ந்திருக்கிறான்.  அருகே இன்னொரு பாறையில் ஒரு சிறுமி.  இருவரும் பேசி கொள்ளவில்லை என்பதை நான் கவனிக்கிறேன்.  நதியின் சலசலப்பையும் பட்சிகளின் சங்கீதத்தையும் தவிர அங்கே வேறு எந்த சப்தமும் இல்லை.  இந்த கிழவனும் சிறுமியும் இதற்கு முன்னும் இங்கே அமர்ந்திருப்பார்களோ?  இன்னும் எத்தனை காலம் இப்படியே அமர்ந்திருப்பார்கள்?  ஏன் இங்கே இவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்?  இவனுடைய மூதாதையரும் இப்படித்தானே ஒரு சிறுமியுடன் அமர்ந்திருக்க வேண்டும்?  எத்தனை நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது நதிக்கும் இந்த கிழவர்களுக்குமான உறவு கொடி?  இந்த கொடியின் வேர் எங்கே என்று தேடுவதுதான் எழுத்தின் அடிப்படையோ?

அன்புக்குரிய சாரு, உங்களுடைய ராஸ லீலா ஆங்கில மொழிபெயர்ப்புக்கு புக்கர் பரிசு கிடைத்து விட்டது போல் நேற்று ஒரு கனா வந்தது.  நிச்சயம் கிடைக்கும்.  வாழ்த்துகள்.

பிரியத்துடன்,

எஸ்.ரா.

ம்ஹும்…  போகிற போக்கைப் பார்த்தால் வைரமுத்துவுக்கு நோபல் பரிசு கிடைத்து விடும் போலிருக்கிறது.  இது சம்பந்தமாக என் ஆங்கில இணைய தளத்தில் ஒரு சிறிய குறிப்பை எழுதியிருக்கிறேன்.

http://charunivedita.com/

 

 

 

Comments are closed.