மீனா கந்தசாமிக்கு இலக்கியம் மற்றும் அமைதிக்கான இரட்டை நோபல்!!!

Dear Charu,

I wanted to fulminate in my mother tongue. I’m not in the habit of using the phoenetic keyboard, so pls excuse the errors.

க்ராண்டா சம்பந்தமான‌ உங்கள் பதிவைப் பார்த்தேன். உங்களுக்குத் தெரியாததல்ல‌ இந்த‌ காமெடி.  பட்டியலை கவனமாகப்‌ பாருங்க‌ள். அதில் உள்ள மக்கள் மூன்று வகை. சிலரின் தோல் உங்களைப் போன்று மாநிறம்.  இருந்தாலும் பாஸ்போர்ட் அட்டையின் நிறம் வேறு.

இரன்டு, இந்திய எழுத்தின் அந்த‌ ஆந்தாலஜியில் பாதிக்கும் மேற்பட்டவர்கள அயல்நாட்டவர்.

மூன்று, பட்டியலில் இந்திய‌ப் பெயர் மற்றும் குடியுரிமை கொண்டவர்கள் அடிப்படையாக‌ மேற்குலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாக‌ நினைக்கும் இந்திய‌ ஆர்வலர்கள்.

கிட்டத்தட்ட‌, இந்தப் பட்டியலில் இருக்கும் அனைத்து எழுத்தளர்களும் பார்த்து வரும் ஜோலி மேல்நாட்டவர்களுக்காக‌, அவர்கள் விரும்பும் வண்ணத்தில் இந்தியாவின் பெருவிளக்கச்‌ சித்திரத்தை வரைவது.

அவர்களுக்குள் நடக்கும் இந்த‌க் கொடுக்கல் வாங்கலில்125 கோடி இந்திய‌ கழுவாப்பிண்டங்க‌ள் தோட்டா தரணி போடும் சினிமா செட்டில் இருக்கும் மேஜை‍ நாற்காலி போன்றவை மட்டுமே.

அடுத்து உங்கள் ராகேஷ் கன்னா புலம்பல் சமாச்சாரத்துக்கு வருவோம். அய்யா, எந்தப்‌ பதிப்பகம் இன்றையத் தேதியில் எழுத்தின் வலிமையை நம்பி களத்தில் இருக்கு?  கன்னா உங்கள் நண்பர், உங்களுடைய ஒரு நாவலை மொழிபெயர்த்தார். ரைட்டு.  ஆனால் ஸீரோ டிக்ரி அவருக்கு சோறு போடுமா? Blaft பதிப்பகத்தின் அடையாளம் என்ன, வணிக‌ முறை என்ன‌? அது அகில‌ இந்தியச் சந்தையில் தமிழ் மற்றும் இதர‌ vernacular சூழல், சமூகம் பற்றி அறியாதவர்களிடம்  பிளாட்ஃபாரக் குப்பையை அள்ளி, அதற்கு மெருகேற்றி, noir, சபால்டர்ன் என்றெல்லாம் பெயர் சூட்டி, இதுதான் அந்த‌ச் சுழலின் ஆகச் சிறந்த‌ படைப்புகள் என்று விற்பது.

வட இந்தியர் ரஜினிப் படங்கள்தான் தமிழ்க் கலாச்சாரத்தின் உச்சம் என்று நம்புகிறார்கள். அந்த‌ வண்ணக் கோலம் பொன்ற‌ ஸ்டிரியோடைப்பை ஏன் கலைப்பானேன்? பழைய‌ டெக்னிகலர் சினிமா போஸ்டர்களைப் போல் தோற்றமுள்ள‌ ரெட்ரொ‍ ஷிக் வரைப்படங்களுடன் கூடிய‌ சிறுகதைத் தொகுப்புகளை மார்கெட்டில் இறக்கிவிட வேண்டியதுதானே?

சரி, அதுவும் போகட்டும் கழுத‌.

உங்களைப் போன்ற எழுத்தாளனை பேக்கேஜ் சேய்வதும் சுலபம் இல்லியே? உங்களுக்கு ஃப்யூஷன் நடனம் ஆட‌த் தெரியுமா? உங்கள் தந்தை வேல்ஸ் நாட்டைச் சேந்தவரா? என்ன, வேலூரா… செல்லாது. செல்லாது… வயசு வேற அம்பதத் தாண்டிடுத்து. லத்தின் அமெரிக்க‌ சினிமாவப் பத்தியும் ஸ்ட்ராவின்ஸ்கியின் இசையைப் பத்தியும் வளச்சு வளச்சு எழுதரீங்க‌ ரைட்டு. ஆனா இப்ப அதெல்லாம் 18 வயது அறிவுஜீவிங்க‌ செய்யர‌ மேட்டர்.

லண்டன் கார்டியன் பத்திரிகையின் இலக்கிய‌ ஆசிரியருடன் பழக்கம் உன்டா?  மார்க்கேஸ், பாமுக் எல்லாம் படிக்கிறீங்களே தவற ட்ரெண்டு எதுவும் தெரியாத‌ ஆளா இருக்கங்க‌.

இந்தியத் துணைக் கண்டத்துல‌ சுமார் 150 இலக்கிய‌ விழாக்கள் நடக்குது. பலரின் முழு நேர வேலையே காபூல் முதல் வங்கக்கடல் தீவான காக்ஸ் பஸாரில் நடக்கும் விழா ஒன்று விடாமல் நிர்வாகிகள் செலவில் சென்று வருவதுதான். ஒரு வருடத்தில் கிட்டதட்ட‌ 300 நாட்கள் நோகாமல் நொங்கடித்துத் தின்பவர் எராளம். நீங்கள் நாகேஸ்வர‌ ராவ் பார்க்கில் எட்டு போட்டுக் கொண்டிருந்தால் சாருஆன்லைனில் ஆக்ஸிஸ் பேங்க் அக்கவுன்ட் நம்பரைக் கொடுத்து யாச‌கம் தான் கேட்க‌ நேரும். வேறு வழியில்லை.

அய்யா… இப்பல்லாம் நாய் வளர்ப்பது கூட‌ அவுட் ஆஃப் ஃபேஷன்.  அகில‌ இந்திய‌ இலக்கிய‌ வட்டாரத்தில் இப்ப பூனைக்குத்தான் மவுசு. ஆக மொத்தம் எந்தக்‌ கோணத்துல‌ பார்த்தாலும் நீங்க‌ அன்செலெக்டட்தான்

வைரமுத்துவுக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போகலாம். ஆனால், மீனா கந்தசாமிக்கு இலக்கியம் மற்றும் உலக‌ அமைதிக்கான‌ நோபல் இரண்டுமே கிடைக்க‌ செம்மையான‌ வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியுது.

ஜெய் ஹிந்த்!

***

மேலே உள்ள கடிதத்தை எழுதியவர் என்னுடைய நெருங்கிய நண்பர்.  தாய்மொழி தமிழ்.  வட இந்தியாவில் வசிப்பவர்.   நீண்ட காலத்துக்குப் பிறகு அவர் தமிழில் எழுதிய கடிதம் இது.  நான் அவரிடம் கேட்டேன்: ”உங்களிடம் செமையான கிண்டல் இருக்கிறது.  ஏன் நீங்கள் சாமந்த் சுப்ரமணியனைப் போலவோ பங்கஜ் மிஷ்ராவைப் போலவோ ஒரு எழுத்தாளராகக் கூடாது?  ஏற்கனவே உங்கள் நண்பன் காது கேளாதோரின் உலகில் நாற்பது ஆண்டுகளாக வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறான்.  நீங்களும் ஏன் அந்தக் கூட்டத்தில் சேர விரும்புகிறீர்கள்?  நீங்கள் ஒரு சுரணையுள்ள தமிழனாக இருந்தால் உங்களுக்குத் தாய் மொழி கிடையாது.”

அவர் உடனே, “Not to be published or anything.  Just to be able to write for myself in my mother tongue” என்று குறுஞ்செய்தி அனுப்பினார்.  அதற்கு நான் அனுப்பிய பதில்:  ”நான் தமிழில் எழுதுவதன் காரணம், எனக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் சரளமாக எழுத முடியவில்லை.  இன்றைய காலகட்டத்தில் தமிழில் எழுதுவது அர்த்தமற்றது, நீங்கள் டயரியில் எழுதினால் கூட.”

நண்பரின் பதில்: I love all languages.  But mother tongue is part my identity.  Unlike Tishani Doshis of the world, I don’t yet think of myself as a rootless, compolite citizen of the world!

நான் உடனே “நேரில் பேசுவோம்” என்று சொல்லி ஜகா வாங்கி விட்டேன்.

என்னைப் பொறுத்தவரை, தமிழில் எழுத்தாளனுக்கு எந்தவித அடையாளமும் கிடையாது.  என் வாழ்நாளில் ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் போன்ற ஒரு நாவலைப் படித்ததே இல்லை.  உலகின் எந்த ஒரு மகத்தான நாவலுக்கும் இணையான படைப்பு இது.  தமிழின் ஆகச் சிறந்த படைப்பு புயலிலே ஒரு தோணி என்று எண்ணியிருந்தேன்.  ஆனால் மண்ணில் தெரியுது வானம் அதையும் தாண்டி விட்டது.  இதன் பிரதி கிடைக்காமல் சிதம்பர சுப்ரமணியனின் மகனிடம் இருந்த ஸெராக்ஸ் தாள்களை வாங்கிப் படித்தேன்.  எப்பேர்ப்பட்ட சூழல்!

 

 

 

Comments are closed.