ஓ காதல் கண்மணி (3)

கேள்வி: கணபதி-பவானி காட்சிகளை பற்றி கூறாமல் விட்டுவிட்டீர்களே சாரு?

கருணாநிதி

பதில்: அந்தக் காட்சிகள் என்னை அதிகம் பாதிக்கவில்லை.  ஒரு அன்பான கணவன் மனைவியிடம் மிகச் சாதாரணமாக எதிர்பார்க்கக் கூடியதே அதெல்லாம்.  என்னிடம் பலரும் ”ரொம்ப எளிமையாக இருக்கிறீர்களே” என்று ஆச்சரியப்படுவார்கள்.  உண்மை பேசுவதும் அலட்டாமல் இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய, ஆச்சரியப்பட  வேண்டிய விஷயமாக இருப்பதே  எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. உயிருள்ள ஒரு மனிதன் சுவாசிப்பதும், வாய் விட்டுச் சிரிப்பதும், அவனுக்குப் பசி எடுப்பதும் ஆச்சரியப்படத்தக்க விஷயங்களா?  நட்சத்திர ஓட்டல்களில் போய் பசிக்கிறது; சீக்கிரம் கொண்டு வாருங்கள் என்றால் ஆச்சரியத்தில் அவர்களின் விழிகள் பிதுங்கி விடுகின்றன.  நம் இந்திய வாழ்க்கையில் எளிமையையும், அன்பையும், வாத்ஸல்யத்தையும், கருணையையும் முற்றிலுமாக இழந்து விட்டோம் என்பதையே கணபதி – பவானி காட்சிகளைப் பார்த்துக் கண்ணீர் விடுபவர்களிடமிருந்து அறிந்து கொள்கிறேன்.  எனக்கு அவந்திகாவும் அவந்திகாவுக்கு நானும் கணபதி பவானியைப் போல்தான் இருக்கிறோம்.  எங்கள் விஷயத்தில் நான் தான் பவானி.  இதில் எனக்கு எந்த ஆச்சரியமும் தெரியவில்லை.  கணபதி பவானி விஷயத்தையே எல்லோரும் கண்ணீர் மல்கப் பேசும் போது என் மனதில் கெட்ட வார்த்தைதான் தோன்றுகிறது.  அடப் பாவிகளா, உங்கள் மனைவியிடம், காதலியிடம், கணவனிடம், காதலனிடம் அப்படி இருக்க மாட்டீர்களா?  இருப்பீர்கள் என்றால் அதில் ஏன் ஆச்சரியம்?

படத்தில் என்னை ஆச்சரியப்படுத்திய, அதிசயமாய்த் தெரிந்த விஷயம்- ஆண் பெண் உறவு பற்றிய அந்த இளம் ஜோடியின் தவறான புரிதலும் பின்னர் அதில் உள்ள ஆழமான உள்நீரோட்டத்தைப் புரிந்து கொள்வதும்தான்.  கணபதி அங்கிள் மாதிரி நீ இருப்பியா என்று தாரா கேட்கும் போது வெகு சாதாரணமாக ஆமாம், அதில் என்ன ஆச்சரியம் என்கிறான் ஆதி.

ஒரு பாடலில் அதிசயம் அதிசயம் என வருகிறது.  இந்தப் படத்தின் எளிமை இன்றைய தமிழ் சினிமாவில் ஒரு அதிசயம்தான். இன்றைய இளைய தலைமுறை பற்றிய ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் ஓ காதல் கண்மணி.  இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது.  சமீபத்தில் இரண்டு இளைஞர்களைக் ”காதலித்து”  வம்பில் மாட்டிக் கொண்ட ஒரு இளம்பெண்ணின் வாட்ஸ் அப் விவகாரம் அது.  அந்தக் கதையை மணி ரத்னத்தினால் எடுக்க முடியாது.  கையில் காசு இருந்தால் நான் எடுப்பேன்.

 

Comments are closed.