புத்தக வெளியீட்டு விழா

ஹாய் சாரு,

ம்யூசியம் தியேட்டரிலும், சர் பிட்டி தியாகராய அரங்கிலும் தலா 500 பேர் தான் உட்கார முடியும். நமக்கு பத்தாதுங்க சாரு. ஃபிலிம் சேம்பர் அரங்கில் 350 பேர் உட்காரலாம். அதுவும் பத்தாது.

ம்யூசிக் அகாடமி, வாணி மஹால், நாரத கான சபா ஆகியவற்றில் தொலைபேசியில் கேட்டேன். டிசம்பர் முழுவதுக்கும் கச்சேரிக்கு மட்டும்தான் இடம் என்று கூறி விட்டனர்.

லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் 1200 பேர் உட்காரலாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரூபாய் ஆகிறது. போக, ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிற்கணும் போன்ற ஏகப்பட்ட விதிமுறைகள். அது வேண்டாம்.

ராஜா அண்ணாமலைபுரம் இமேஜ் ஆடிட்டோரியத்தில் 900 பேர் உட்காரலாம். சில வருடங்கள் முன் ஒரு மருத்துவக் கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். பிரம்மாண்டமான அரங்கம். வாடகை இரண்டு லட்சம். (அதில் ஐம்பதாயிரம் திரும்பத் தந்து விடுவார்கள்.)

சேத்துப்பட்டில் Chinmaya Heritage Centre அரங்கம் எனக்கு சரி எனப் படுகிறது. பால்கனி சேர்த்து 750 பேர் உட்காரலாம். மூன்று மணி நேரத்திற்கு நாற்பதைந்தாயிரம் ருபாய் + சேவை வரி. கூடுதல் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏழாயிரம் ரூபாய்.

கலைவாணர் அரங்கம் மீண்டும் கட்டப்படுகிறது. செப்டம்பரில் திறக்கப்படலாம் என்கின்றனர். ஆயிரம் பேர் உட்காரலாம். ஆனால், திறப்பு விழா தாமதமானால், அந்நேரத்தில் மற்ற அரங்கங்கள் கிடைக்காமல் போய்விடக்கூடாது.

திரும்பவும் காமராஜர் அரங்கம் வேண்டாம் சாரு. அது bad omen மாதிரி இருக்கிறது. புதிய எக்ஸைல் விழாவுக்கு சுமார் 550 முதல் 650 பேர் வந்தனர். ஆனால் காமராஜ் அரங்கின் கொள்ளளவு 1700. காலி இருக்கைகள் தான் கடைசியில் பேசப்படுகிறது. அது negative publicity ஆகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் உலகத் திரைப்படங்கள் பேருரை Russian Cultural Centre இல் சில வருடங்கள் முன் நடந்தது. அரங்கின் கொள்ளளவு
250. நிறைய பேர் நின்று கொண்டு பார்த்தனர். Positive publicity.

பார்வையாளர்கள் யாரும் நிற்கக் கூடாது என நீங்கள் நினைக்கிறீர்கள். நிற்கட்டும். தப்பில்லை.

நண்பர்களுடன் கலந்தாலோசித்து, எந்த அரங்கம் என முடிவு செய்து, சீக்கிரம் முன்பதிவு செய்ய வேண்டும் சாரு.

டாக்டர் ஸ்ரீராம்.

டியர் ஸ்ரீராம்,

உங்கள் கடிதத்தில் உள்ள விபரங்கள் பலருக்கும் உதவக் கூடும் என்பதால் அதை இங்கே பிரசுரம் செய்கிறேன்.  சுமார் பதினைந்து நூல்கள் பிரசுரம் செய்யக் கூடிய நிலையில் உள்ளன.  யாரும் அவ்வளவாக கவனிக்காத நியூஸ் சைரன் பத்திரிகையில் வந்த கட்டுரைகள் போல் பல விஷயங்கள் புத்தகமாக வர வேண்டும்.  துக்ளக் கட்டுரைகள் கூட.  அந்திமழை கேள்வி பதில்.  இப்படி நிறைய.

உங்கள் கடிதத்தை மிகக் கவனமாகப் படித்த பிறகு காமராஜ் அரங்கத்தை முன்பதிவு செய்யலாம் என்றே முடிவுக்கு வந்தேன்.  சென்ற முறை நாம் காமராஜர் அரங்கில் விழா நடத்தியது ஜனவரி 5-ஆம் தேதி அன்று.   அது திங்கள் கிழமை.  கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து திங்கள் கிழமை அலுவலகங்களும் கல்வி நிலையங்களும் துவங்குகின்ற தினம்.  டிசம்பர், ஜனவரி ஆகிய இரண்டு மாதங்களிலுமே இரண்டு தேதிகளில்தான் அரங்கம் காலியாக இருந்தது.  அதனால் ஜனவரி 5 திங்கள் கிழமையை எடுத்தோம்.  காலியாக இருந்த இன்னொரு நாள் ஜனவரி 21.  அப்போது புத்தக விழா முடிந்திருக்கும் என்பதால் ஜனவரி 5-ஐத் தேர்ந்தெடுத்தோம்.  காமராஜர் அரங்கத்துக்கு அன்றைய தினம் 750 வந்தார்கள் எனில் அது 3000 பேருக்குச் சமம்.  ராஜேஷும் ஸ்ரீவாணியும் பெங்களூரிலிருந்து தங்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.  அவர்கள் இருவருக்கும் அது எத்தகைய சிரமம் என்று எனக்குத் தெரியும்.  தில்லியிலிருந்து தாரணி வந்திருந்தார்.  திங்கள் கிழமை வெளியூரிலிருந்து சென்னை வர வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமையும் அலுவலகம் செல்ல முடியாது.  அதனால் பல நண்பர்கள் விமானத்தில் வந்து விட்டு விமானத்தில் சென்றார்கள்.  குஜராத்திலிருந்து ஷிவா வந்திருந்தார்.  அவருக்கும் அதே சிரமம்.  செவ்வாய் அதிகாலை விமானம் பிடித்து பதினோரு மணிக்கு அலுவலகம் சென்றார்.  ஈரோட்டிலிருந்து ஸ்ரீதர் தம்பதி.   பொள்ளாச்சி வாசகி சுகன்யா பள்ளி ஆசிரியை.  கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து ஜனவரி 5 பள்ளி திறக்கிறார்கள்.  எக்காரணம் கொண்டும் விடுப்பு தர முடியாது என்று பள்ளி முதல்வர் மறுக்கவே, என்னென்னவோ போராட்டம் செய்து விடுப்பு வாங்கி விட்டார்.  திங்கள் கிழமை மட்டும்.  திங்கள் இரவே பத்து மணிக்கு ரயிலைப் பிடிக்க வேண்டும்.  ஒன்பது மணிக்கு அரங்கத்தை விட்டுக் கிளம்பி விட்டார்.  ஒன்பதுக்கு மேல்தான் நான் பேசவே ஆரம்பித்தேன்.  விடுமுறை முடிந்து முதல் நாளே விடுப்பு எடுக்க ஒரு பள்ளிக்கூடத்தில் எவ்வளவு சிரமம் என்று எல்லோருக்கும் தெரியும்.  இப்படி பல நூறு நண்பர்கள் வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள்.  அது போதும்.  என் புத்தக வெளியீட்டு விழாக்கள் ஒரு குடும்ப விழா.  அதில் யாருமே இடம் இல்லாமல் நிற்கக் கூடாது.  மூன்று மணி நேரம் யாரையும் நிற்க வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.  எனவே காமராஜர் அரங்கமே சரி.  ஒரு விஷயம் சொல்ல மறந்து போனேன்.  ஜெகா கத்தரிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு அந்த விழாவுக்காக வந்திருந்தார். இப்படி நிறைய பேர்.

ரெமி மார்ட்டின் காலத்திலேயே இப்படி என்றால், இப்போது நான் மகாத்மா காந்தியின் வழியில் நடக்க ஆரம்பித்த பிறகு எப்படி இருப்பேன் என நீங்கள் யூகித்துக் கொள்ளலாம்.  என்ன ஆனாலும் யாரும் என் பொருட்டு நிற்கலாகாது.  மேலும், இனிமேல் எக்காரணம் கொண்டும் திங்கள் கிழமை போன்ற தினங்களில் புத்தக வெளியீட்டு விழா இருக்காது.  சனிக்கிழமை தான்.  எந்த சனிக்கிழமையில் காமராஜர் அரங்கம் கிடைக்கிறதோ அந்த சனிக்கிழமை வெளியீட்டு விழா நடக்கும்.  ஃபெப்ருவரி என்றால் ஃபெப்ருவரி.  டிசம்பர், ஜனவரியில்தான் நடத்த வேண்டும் என்று என்ன கட்டாயம்?  புத்தக விழா முடிந்த பிறகு கூட நடத்தலாம்.  எதை எப்படி எப்படியெல்லாம் வளைத்து நெளித்துச் செய்தாலும் என் நூல்கள் அதிக பட்சம் 3000 பிரதிகள் தான் விற்கிறது.  எனவே, காமராஜர் அரங்கத்தில் எந்த சனிக்கிழமை கிடைக்கிறதோ அந்த சனிக்கிழமை வைத்துக் கொள்வோம்.  திங்கள்கிழமை விசாரிக்கிறேன்.

மேலும், இந்த முறை பிரபலங்கள் யாரையும் அழைக்கப் போவதில்லை.  ஏனென்றால், நான் பேசும் போது ஒன்பதரை ஆகி என் பேச்சை யாரும் கேட்க முடிவதில்லை.  மேடை ஒருங்கிணைப்பையும் நானோ கணேஷோ செல்வகுமாரோ அராத்துவோ செய்து விடலாம்.  மேடையின் மீது பெண்களுக்கு அனுமதி இல்லை.  எப்போதுமே இனிமேல் இதுதான் விதி.  பார்வையாளர்களாக எவ்வளவு பெண்கள் வந்தாலும் சம்மதம். வரவேற்கிறேன்.  இந்த முறை வாசகர்கள் நிறைய பேர் பேசலாம்.  பிரபலங்களை அழைப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததன் காரணம் என்னவெனில், ரஜினியையே வரவழைத்தாலும் ஒரு விளம்பரமும் கிடைக்காது.  ரஜினிக்காக ஒரு பிரதி கூட அதிகம் விற்காது.   சென்ற ஆண்டு ப்ரீ ஆர்டரில் 1000 பிரதிகள் விற்றன.  இது ஒரு சாதனை.  ஆனால் அது எனக்கு நஷ்டம்தான்.  ஏனென்றால், அந்த ஆயிரம் பேரும் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கக் கூடிய என்னுடைய தீவிரமான வாசகர்கள்.  ப்ரீ ஆர்டர் திட்டமெல்லாம் 10000 பிரதிகள் போனால்தான் அதற்கு அர்த்தமே இருக்கும்.  ஆயிரம் பிரதி என்பதெல்லாம் ப்ரீ ஆர்டரை அவமானப்படுத்துவதாகும்.

அடுத்து, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் எதிர்மறை விளம்பரம் பற்றி.  மகாத்மாவாக வாழ்ந்த ஒருவரையே கண்டபடி திட்டும் இந்த சமூகம் ஒரு transgressive எழுத்தாளனை எப்படி எதிர்கொள்ளும்?  காமராஜர் அரங்கத்தில் 1700 பேரும் வந்தால் கூட லாரியில் ஆள் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றுதான் எழுதுவார்கள்.  எனவே அது பற்றி நாம் கவலையே பட வேண்டாம்.  1700 பேர் அமரக் கூடிய காமராஜர் அரங்கில் 300 பேர் வந்தாலே எனக்குப் போதும்.  இது ஒரு குடும்ப விழா.  மனுஷ்ய புத்திரன் அடிக்கடி என்னிடம் குறிப்பிடுவார்.  ”உயிர்மையை எனக்காகவும் என் நண்பர்களுக்காகவும்தான் நடத்துகிறேன்.  அதனால் எனக்கும் நண்பர்களுக்கும்தான் முன்னுரிமை.  ஜனநாயகம் எல்லாம் இதில் கிடையாது.”  அதையேதான் என் புத்தக வெளியீட்டு விழாவுக்கும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.  இது என் குடும்ப விழா.  குடும்பத்தினர் மட்டும் வந்தால் போதும்.  கத்தர், குஜராத், பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, தில்லி, பெங்களூர் என்று பல ஊர்களிலும்  என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் 300 பேர் இருக்கிறார்கள்.  எல்லோரும் இந்த முறையும் வந்து விடுவார்கள்.  நிர்மலையும் கார்ல் மார்க்ஸையும் கூட வரச் செய்ய வேண்டும்.  எப்போதும் போல் மலேஷியா, சிங்கப்பூர் நண்பர்கள் வெறும் பேச்சோடு சரி.  அறந்தாங்கி நண்பர்களை மறந்து போனேன்.  அவர்களும் என்னுடைய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வந்து விடுவார்கள்.  இந்த முறை ஜாலியாக ஒரு சனிக்கிழமை அன்று நடத்துவோம்.  எப்போதும் போல் என் எழுத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் வாசகர் வட்ட நண்பர்கள் இந்த முறையும் இந்த விழாவை சிறப்புற செய்து கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அன்புடன்,

சாரு