கிரிமினல்களுக்கு இடையே…

ஒருவர் அல்ல, பல கிரிமினல்களுக்கு இடையே வாழ வேண்டியிருக்கிறது.  வாழ என்பதை எழுத என்று வாசித்துக் கொள்ளவும்.  எனக்கு எழுத்து தான் வாழ்க்கை என்பதால்.  சாருஆன்லைனில் பல கிரிமினல்கள் உள்ளே புகுந்து என்னென்னவே ஆபாச வேலைகளைச் செய்து வருகின்றனர்.  மொத்தம் பத்தாயிரம் பின்னூட்டங்கள் உள்ளன.  எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக நீக்குவது கடினம்.  தொழில்நுட்ப வேலை நடந்து வருகிறது.  வாசகர்கள் பொறுத்துக் கொள்ளவும்.

அதேபோல் தினமணியில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களிலும் பின்னூட்டம் என்ற பெயரில், நல்லவிதமான விமர்சனம் என்ற போர்வையில் ஒருவர் என் மீது சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்.  தொடரையே நிறுத்திக் கொள்ளலாமா என்று யோசித்தேன்.  ஆனால் ஜெயமோகன் ஒரு கடிதத்தில் அதை ஒரு க்ளாஸிக் தொடர் என்று எழுதியிருந்தார்.  இப்படி என் சக எழுத்தாளர்களாலேயே பாராட்டப்படும் ஒரு தொடரை ஒருசில கயவாளிகளை முன்னிட்டு நிறுத்துவதா என்றும் ஒரு சம்சயம்.  ஆனால் நான் மிகவும் பலஹீனமானவன் என்று மட்டும் தெரிந்து கொண்டேன்.  ஆபாச வசைகளால் பாதிக்கப்படுபவன் பலஹீனமானவன் தான்.  விமர்சித்தால் ஆபாச வசையா என்று அந்த rogues கேட்கக் கூடும்.  எழுத்தாளன் மீது மரியாதை இன்றி ஏதோ தவறைச் சுட்டிக் காட்டுவது போன்ற பாவ்லாவில் புழுதி வாரி இறைப்பதும் ஆபாசம் தான்!  தினமணி கட்டுரை என்னைப் பொறுத்தவரை ஒரு புனித யாத்திரை.  அந்த யாத்திரையைச் செருப்படி பட்டுக் கொண்டே செய்யும் அளவுக்கு எனக்கு மனோபலம் இல்லை.

நண்பர்கள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும்.  பழுப்பு நிறப் பக்கங்கள் தொடர்ந்து எழுதுவேன்.  செருப்படி பட்டுக் கொண்டே எழுத நான் வணங்கும் பாபா எனக்குப் போதுமான மனோபலத்தை அளிக்க வேண்டும் என்று பிரார்த்திக் கொள்கிறேன்.