je t’aime

ஏற்கனவே பலமுறை லாரா ஃபாபியான் பற்றி எழுதியிருக்கிறேன்.  ஃப்ரெஞ்ச் பாடகி.  அவரிடம் இருப்பது போன்ற ஒரு ஆவேசத்தை மைக்கேல் ஜாக்ஸனிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன்.  இந்தப் பாடல் Je suis malade (I am sick).  இந்த je என்ற வார்த்தையைத் தமிழில் எழுதுவது கடினம்.  ‘ஜ’வுக்கும் ‘ழ’வுக்கும் இடையே வரும் ஒலி.  எழுத முடியாது.  லாரா உச்சரிப்பதைப் பாருங்கள்.  தமிழில் உள்ள ‘ழ’ போல் வேறு எந்த மொழியிலும் இல்லை.  அது போல் ஃப்ரெஞ்சின் je (நான்).  வேறு எந்த மொழியிலும் இல்லை.  அதன் காரணமாகவே நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று ஃப்ரெஞ்ச் மொழி போல் வேறு எந்த மொழியிலும் அவ்வளவு இனிமையாகச் சொல்ல முடியாது என்பார்கள்.  (தமிழில் அந்தப் பிரயோகமே இல்லை என்பது வேறு விஷயம்!)  Je t’aime – நான் உன்னைக் காதலிக்கிறேன்.

சமீபத்தில் தொடர்ச்சியாக ஏழு சிறுகதைகள் எழுதினேன்.  அதில் ஒன்றுதான் உயிர்மையில் வந்தது.  இப்போதும் ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  இப்போது புத்தக விழா தள்ளிப் போயிருப்பதால் இந்த சிறுகதைத் தொகுதி அதற்குள் வந்து விடும்.  உயிர்மை வெளியீடு.  அதற்காக ஜான் ஜெனே எழுதிய வேலைக்காரிகள் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அதில் ஒரு பாடல் லாரா ஃபாபியான் பாடிய Je suis malade மாதிரியே இருந்ததால் லாராவின் ’மலாதே’வையும் கேட்டேன்.

பின்வருவது ’ஷு தேம்’ பாடல்.  சும்மா எழுத்து வசதிக்காகவே ஷு என்று எழுதியிருக்கிறேன்.  சரியான உச்சரிப்பு ’ஷ’ மற்றும் ’ழ’ இரண்டுக்கும் இடையில்.  ‘ஷு தேம்’ பாடல் எக்ஸைல் நாவலில் வருகிறது.

லாரா ஃபாபியான் ஃப்ரான்ஸில் மட்டுமல்லாமல் ஐரோப்பா முழுவதும் பிரபலமாக இருப்பது பின்வரும் இணைப்பைப் பார்த்தால் தெரியும்.  ‘ஷு தேம்’ பாடலை புடாபெஸ்டில் பாடுகிறார்.  அவர் பாடுவதற்கு முன்பே பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் ஒன்று சேர்ந்து பாடி லாராவை உணர்ச்சிவசப்பட வைக்கிறார்கள்.

வேலைக்காரிகள் நாடகத்தின் ஒரு பகுதி, ‘மலாதே’ பாடல்: