காதலும் கடந்து போகும்…  (பாலாவின் இயக்கத்தில்)

எனக்கு வரும் கனவுகள் சற்று வினோதமானவை.  ஸீரோ டிகிரியில் உள்ள கவிதைகள் பலவும் கனவில் வந்தவைதான்.  காலையில் மறந்து விடும் என்பதால் கனவு முடிந்ததுமே எழுந்து எழுதி விடுவேன்.  இதற்காகவே அப்போதெல்லாம் காகிதமும் பேனாவும் பக்கத்திலேயே இருக்கும்.  சமயங்களில் க்ரைம் கதைகள் தோன்றும்.  விலாவாரியாக வரும்.  சுபம் வரை நீளமாகப் போகும்.  காலையில் எழுந்து பார்த்தால் புகைமூட்டமாகத் தெரியும்.  காட்சிகளும் கதையும் மறந்து போயிருக்கும்.  அந்தக் கதைகளை மட்டும் அப்போதே எழுந்து எழுதி விட்டால் நானும் ராஜேஷ் குமார் அளவுக்குப் பிரபலமான எழுத்தாளனாக ஆகியிருப்பேன்.

இந்த வழக்கப்படி நேற்று இரவு காதலும் கடந்து போகும் படம் காட்சி காட்சியாகக் கனவில் தோன்றியது பாலாவின் இயக்கத்தில். பிறகு அது முடிந்து வசந்த பாலன் இயக்கத்தில் காட்சி காட்சியாகத் தோன்றியது.  எல்லாம் காலையில் ஞாபகமும் இருந்தது.   அதை முடிந்தவரை இங்கே தொகுத்துத் தருகிறேன்.

 பாலாவின் இயக்கத்தில்:

மடோனாவும் விஜய் சேதுபதியும் தங்கியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் போர்ஷனில் குடியிருக்கும் தாத்தாவின் உண்மையான தொழில், பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமிகளைப் பிடித்து பாலியல் தொழிலுக்கு அனுப்புவது.  அப்படிப்பட்ட கோஷ்டி ஒன்றின் தலைவர் அந்தத் தாத்தா.  விஜய் சேதுபதி நலன் குமரசாமியின் இயக்கத்தில் ஒன்றுக்கும் உதவாத அடியாளாக வருகிறார் அல்லவா?  பாலா அவரை வேறு மாதிரி மாற்றுகிறார்.  விஜய் சேதுபதி இரவுகளில் சுடுகாட்டுக்குச் சென்று அங்கே சிதையில் வேகும் பிணங்களை எடுத்துத் தின்னும் வழக்கம் உடையவர்.  கடைசியில் அவர் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு விற்கும் தாத்தாவை உயிரோடு கடித்துக் கடித்துத் தின்று விடுகிறார்.

ஸாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள் மடோனா.  அந்த நிறுவனத் தலைவர் அங்கே வேலை செய்யும் பெண்களைப் பிடித்து ரஷ்யாவில் உள்ள பிராத்தல்களுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறார்.  மடோனாவை விஜய் சேதுபதி காப்பாற்றி, சாஃப்ட்வேர் முதலாளியைக் கடித்துத் தின்று விடுகிறார்.

இறுதியில் மடோனாவுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது.  ஆனால் படத்தில் அதற்கான காரணங்கள் மட்டும் லாஜிக்காக இல்லை.  கடைசிக் காட்சியில் “பைத்தியங்களுக்கு இந்த உலகத்தில் வேலை இல்லை, செத்துப் போ, செத்துப் போ” என்று சொல்லி விஜய் மடோனாவின் மண்டையிலேயே அடித்துக் கொன்று விடுகிறார்.  அதே நேரத்தில் மடோனாவின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சுபம்.

வசனம் ஜெயமோகன்.  நகைச்சுவைக் காட்சிகள் தூள் பரத்துகின்றன.  அறமூர்த்தி (படத்தில் விஜய் சேதுபதியின் பெயர்) பேசும் வசனங்களில் காவிய நயம் சொட்டுகிறது.  ’சுள்ளாணி அடிப்பதால் சம்மட்டி சுத்தியலாகிவிடாது’ போன்ற பஞ்ச் வசனங்கள் படம் பூராவும் நிழலைப் போல் தொடர்கின்றன.  மடோனாவின் அப்பா விஜய் சேதுபதியிடம் விஷ்ணுபுரம் பற்றிப் பேசும் போது பார்வையாளர்கள் கை தட்டி விசிலடிக்கிறார்கள்.  நான் மட்டும் எழுந்து டீ குடிக்கப் போய் விட்டேன்.

துணை வசனம் நாஞ்சில் நாடன்.  அறமூர்த்தி சுடுகாட்டில் வேகும் பிணங்களை நாஞ்சில் நாட்டுப் பக்குவத்தில் சமைப்பதைப் பார்க்கும் போது நாஞ்சில் நாடனின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.  இடையிடையே அறமூர்த்தி ’ஜெவுக்கு ஜே’ என்று உரக்கக் கோஷமிடுவதுதான் ஏன் என்று புரியவில்லை.  வசனங்களில் தொல்காப்பியம், சங்க இலக்கியமெல்லாம் மேற்கோள் காட்டப்படும் போது வசனத்துக்காகப் படமா, படத்துக்காக வசனமா என்ற கேள்வி எழுகிறது.

இசை இளையராஜா.  அவரது இசையில் இது இன்னொரு மகுடம்.  படம் பூராவும் சிம்ஃபனி தான்.  பாஹ்க், பீத்தோவன் போன்றவர்களைக் கேட்காதவர்கள் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

இந்தப் படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டு போகும் உலக சினிமா என்று சொல்லி விகடன் 89 மார்க் போடுகிறது.

வசந்த பாலன் இயக்கத்தில்:

அந்தத் தாத்தா பசியின் காரணமாக செத்து விடுகிறார்.  அவர் உடலைச் சுற்றி ஈக்கள் மொய்க்கின்றன.  ஒரு வாரமாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே பிணம் கிடந்து நாறுகிறது.

விஜய் சேதுபதி ரங்கநாதன் தெருவில் ஒரு ஜவுளிக்கடையில் காலை ஐந்து மணியிலிருந்து இரவு பனிரண்டு வரை வேலை செய்கிறார்.  கடை முதலாளி அவரை சாட்டையால் அடிக்கும் போது இளையராஜா போட்டிருக்கும் இசையை எந்த ஒரு மானிடப் பிறவியாலும் போட்டிருக்க முடியாது.  கடவுளின் அவதாரத்தினால்தான் இது முடியும்.  ரஹ்மான் ரசிகர்களே, ஓடிப் போங்கள்.

மடோனா வேலை பார்க்கும் சாஃப்ட்வேர் முதலாளி யாருக்கும் சம்பளமே கொடுப்பதில்லை.  அத்தனை தொழிலாளிகளும் பட்டினி கிடக்கிறார்கள்.

ஒருநாள் விஜய்யும் மடோனாவும் சினிமாவுக்குப் போய் விட்டு வந்து கொண்டிருக்கும் போது ஒரு கோடீஸ்வரனின் ஆடி கார் மோதி இருவருக்கும் கை கால் உடைந்து விடுகிறது.  அப்படியே அவர்கள் ரோட்டில் கிடக்கிறார்கள்.  ஒரு ஏழைப் பிச்சைக்காரன் அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறான்.  அங்கே ஒரு பணக்கார டாக்டர் (அவர்தான் அந்த ஆஸ்பத்திரியின் ஓனர்) அந்த இருவரின் கண்களையும் பிடுங்கி விற்று விடுகிறார்.  கண்களை விற்கும் கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருக்கிறான் அந்தப் பணக்கார டாக்டர்.

ஏழை வாழ்க, பணக்காரர்கள் ஒழிக என்ற கோஷத்தோடு படம் முடிகிறது.  வசனம் ஜெயமோகன் நாஞ்சில் நாடன் ஜோடிதான். கேட்க வேண்டுமா?  நயம் சொட்டுகிறது.

”இந்தப் படத்துக்கு மதிப்பெண் போடுவதற்கு எங்களுக்கு மனம் வரவில்லை;  சினிமா டீம் முழுவதுமே லீவு போட்டு விட்டு அழுது கொண்டிருக்கிறோம்” என்று விகடனில் விமர்சனம் வருகிறது.