பிரிவு

இந்த 64 வயது வரை எந்த இழப்புக்காகவும் வருத்தப்பட்டதில்லை. எந்தப் பிரிவும் என்னைப் பாதித்ததில்லை. உயிருக்கு உயிராக இருந்த உறவுகள் நட்புகள் பிரிந்தன. ஒரு துளியும் கலங்கவில்லை. இரண்டு முறை என் உயிரே பிரிந்து விடுவேன் என பயமுறுத்தியது. கவலையே படவில்லை. எதுவுமே என்னை அசைத்ததில்லை. ஆனால் இன்று காலையிலிருந்து ஒரு விஷயம் என்னைப் பிழிந்து கொண்டிருக்கிறது. துயரம் என்ற உணர்வையே அனுபவித்தறியாததால் இதுதான் துயரமா என்றும் தெரியவில்லை. இருக்கலாம். இதுதான் துயரமாக இருக்கும். இந்த ஒரு வருட காலத்தில் ஒரு நாள் கூட ச்சிண்ட்டு வீட்டுக்கு வராமல் இருந்ததில்லை. சில நாள் இரவு இரண்டு மணிக்கு வந்து குரல் கொடுக்கும். சில நாள் காலை நாலு மணிக்கு. ஆனால் பொதுவாக ஆறு மணிக்கு வந்து விடும். சாப்பிட. கொலைப்பசியில்தான் வரும். மாடியிலேயே தூங்கி விட்டாலும் காலை ஆறு மணிக்கு என் அறை வாசலில் அமர்ந்திருக்கும். இன்று காலை ஆறு மணிக்கு வரவில்லை. இப்போது மணி நாலு. இப்போது வரை வரவில்லை. நேற்று பகல் பூராவும் மாடியில் படுத்திருந்து விட்டு, மாலை ஏழு மணிக்கு வந்து ரெண்டு மத்தி மீன் தின்று விட்டு வெளியே போனதுதான். இந்தக் கணம் வரை சத்தமே இல்லை. மயான அமைதி. எங்கே போயிருக்கும் என்று புரியவே இல்லை. எங்கே போனாலும் பத்து மணிக்காவது வந்து விடுமே? மத்தி மீனைத் தவிர, cat food தவிர வேறு எதைக் கொடுத்தாலும் தின்னாது. பசி தாங்காது. பசித்தால் தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கும். 20 மணி நேரமாக எப்படிப் பசிக்காமல் இருக்கும்? பெரும் துயரம் ஆட்கொள்கிறது. ச்சிண்ட்டு ச்சிண்ட்டு என குரல் கொடுத்துப் பார்த்தேன். ம்ஹும். சத்தமே இல்லை. எப்படித்தான் சித்தார்த்தன் தன் குதிரையைப் பிரிந்து போனானோ?