ஓவியா

பிக் பாஸ் பற்றி முகநூலில் இதுவரை 42 குறிப்புகள் எழுதி விட்டேன்.  பின்வருவது 42-ஆவது குறிப்பு.  இதற்கு காயத்ரி ஆர் அவர்களின் பின்னூட்டம், எப்படியிருந்த சாரு இப்படி ஆகிட்டீங்க!!!

 

ஓவியாவை நான் ஏன் கொண்டாடுகிறேன்? ஓவியா அழகி என்பதாலா? சே. மாதுரி தீட்சித் போன்ற ஒரு பேரழகியோடு 25 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்படி வாழ்ந்தேன் என்பதை மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் என்ற ஒரே ஒரு சிறுகதையைப் படித்தால் தெரிந்து கொள்வீர்கள். எனக்கு இந்த அழகு விஷயமெல்லாம் ஜுஜுபி. ஏன் ஓவியாவைப் பிடித்திருக்கிறது என்றால் – இதை கணேஷ் அன்பு கூட புரிந்து கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது – ஓவியாவைத் தவிர மற்ற 12 பேரும் – ஓவியாவை அதிகம் வெறுத்த நமீதா உட்பட – என் சக எழுத்தாளர்கள். ஓவியா தான் நான். புரிகிறதா? ஓவியாவைத் தவிர மற்றவர்கள் என் சக எழுத்தாளர்கள். நான் ஓவியா. ஓவியாவுக்காவது ஆரவ் இருக்கிறார். எனக்கு ஆரவ் கூட இல்லை. தனி தனி தனி. எல்லோராலும் வெறுக்கப்பட்டேன். எல்லோராலும் நடிக்கிறேன் என்று அசிங்கப்படுத்தப்பட்டேன். ஒரு அற்புதமான நடனத்தைப் பார்த்தேன். என்னையும் அறியாமல் ப்ராவோ என்று சொன்னேன். – அப்போது நான் தீவிரமாக ஸ்பானிஷ் படித்துக் கொண்டிருந்தேன். – பக்கத்திலிருந்த காயத்ரி ரகுராம், ஹாரத்தி, நமீதா, கணேஷ் எல்லோரும் கேலியாகச் சிரித்தார்கள். ஒருவர் வாய்விட்டே என்னை ஏளனம் செய்தார். நடிக்கிறேனாம். என் பறைச் சேரியில் கிதாரை எடுத்துக் கொண்டு கிதார் வகுப்புக்குப் போவேன். கல்லால் அடித்தார்கள். சிரித்தார்கள். (கிதார் ஈ.எம்.ஹனீபாவின் மகன் ஓசி கொடுத்தது) அதே கேலியும் கிண்டலும்தான் இன்னமும் தொடர்கிறது. இப்போது வாசகர் வட்டம் வந்ததால் கொஞ்சம் இளைப்பாற முடிகிறது் அந்த வாசகர் வட்டமும் குடியை விட்டதிலிருந்து நின்று விட்டது. இப்போது புரிகிறதா? பிக்பாஸின் சக ஜீவிகளால் ஓவியா எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்படுகிறாரோ அதே மாதிரிதான் நான் அவமானப்படுத்தப்பட்டு வாழ்ந்து வருகிறேன். தொலைக்காட்சி மூலம் ஓவியாவை எல்லோரும் பார்ப்பதால் அவர் மீது அன்பு செலுத்துகிறார்கள். என் விஷயத்தில் அதுவும் நடக்கவில்லை. இந்த 64 வயது வரை எனக்கு விகடன் போன்ற பத்திரிகைகளில் வாய்ப்பு தரப்பட்டதில்லை. 64 வயதில்தான் குமுதத்தில் முதல்முதலாக எழுதுகிறேன். இதுவும் ஒருவன் முதல் முதலாக 64 வயதில் திருமணம் செய்து கொள்வதும் ஒன்றுதான். நான் குமுதத்தில் எதை எழுத நினைத்தாலும் அதை ஏற்கனவே 2000 பேர் படிக்கும் ஒரு பத்திரிகையில் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. நாம் உண்மையாக இருக்கும் போது அதை நடிப்பு என்று மற்றவர்கள் நினைப்பதும் நம்புவதும் மிக மோசமான அவமானம். அதையும் சிரித்துக் கொண்டே ஏற்பதால்தான் ஓவியா ஞானி.

பேசும் போது கூட ஆடுகிறாராம் ஓவியா.  அது செயற்கையாம். நடிப்பாம். நானும் அப்படித்தான் வாழ்ந்தேன். அமெரிக்கக் கறுப்பின மக்கள் அப்படித்தான் பேசுவார்கள். ஓவியா எப்போதுமே அப்படித்தான். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் அப்படித்தான் என்று என் நண்பர் ராம்ஜி நரசிம்மன் சொல்கிறார். அவர்தான் களவாணி தயாரிப்பாளர்.