சமயங்களில் இவரைப் பாராட்டி எழுதும் போது, எல்லோரும் சொல்வது போல் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறோமோ என்று சம்சயம் கொள்வதுண்டு. ஆனால் அவர் இன்று எழுதியுள்ள கட்டுரையைப் படித்த போது இப்படி எழுத இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று நினைத்தேன். நேற்று கோவையிலிருந்து ஸ்ரீதர் போன் செய்து அவர் என்ன வேறு இடத்துக்கு மாறி விட்டாரா, ஏன் அவர் கட்டுரையை ஒரு மாதமாகக் காணோம் என்று கேட்டார். பொதுவாக ஸ்ரீதர் எனக்கு போனே பண்ண மாட்டார். அவரே எனக்கு போன் செய்து கேட்டார் என்றால் அவரது கட்டுரைகளுக்கு அத்தனை தாக்கம் இருக்கிறதே, இன்று அவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்த போது இன்று அவர் கட்டுரை. திரும்பத் திரும்பப் படித்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் மாணவர்கள் பாடத்தை மனனம் செய்வது போல் வாய் விட்டுப் படித்தேன். பார்க்கில் உள்ள நண்பர்களிடம் அந்தக் கட்டுரை முழுவதையும் படித்துக் காண்பித்தேன்.
ஜனநாயகம் என்றால் என்ன, குடியரசு என்றால் என்ன? democracy, republic இரண்டுக்கும் வித்தியாசம் என்ன? அல்லது இரண்டும் ஒன்றுதானா? எனக்கு தத்துவத்தில் ஓரளவு பரிச்சயம் உண்டு. ஆன்வி (ennui) என்றால் அது பற்றி ரெண்டு மணி நேரம் பிரசங்கம் செய்யத் தெரியும். ஆனால் இன்று காலை அந்தக் கட்டுரையைப் படித்த போதுதான் இதுவரை எனக்கு ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் உள்ள வித்தியாசமே தெரியாது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஜனநாயகம், பெரும்பான்மை மக்களின் விருப்பம். குடியரசு – ஒவ்வொரு குடிமகனுக்குமான பிரதிநிதித்துவம்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் ஆட்சி. குடியரசு ஒவ்வொருவருக்குமான பிரதிநிதித்துவம். இப்போதைய ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை நம்முடைய அரசியல் நிர்ணயச் சட்டத்திலிருந்தே துவங்கி சொல்லிச் செல்கிறது இன்றைய கட்டுரை.
எழுதியவர் சமஸ். வெளிவந்த தினசரி, தி இந்து. அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. திரும்பவும் சொல்கிறேன். இப்படிப்பட்ட கட்டுரைகளை இந்திய ஆங்கில தினசரிகளில் நான் பார்த்ததில்லை.