கோரக்பூரின் குழந்தைகள்
…………………………………………………….
மனுஷ்ய புத்திரன்
……………………………………………..
உங்களையெல்லாம்
ஒரு பேச்சுக்கு
ஹிட்லர் என்று அழைத்தால்
கேஸ் சேம்பரில்
கொன்றது போலவே
குழந்தைகளை சாகவிடுவீர்களா?
அங்கே மருத்துவமனை வாசலில்
நுறுகுழந்தைகளின்
நூறு ஜோடி செருப்புகள்
குவிந்திருக்கின்றன
ஆக்ஸிஜன் இல்லாமல்
குழந்தைகள் சாகவிடப்படுகிறார்கள்
’இது ஒரு சிறிய சம்பவம்
இந்த தேசத்தில்
இதுபோல இதற்கு முன்பும்
சம்பவங்கள் நடந்திருக்கின்றன’
என்கிறார் அரசரின் முதன்மை பணியாளர்
ஆம் இந்த தேசத்தில் இதற்கு முன்பும்
கோடானுகோடி குழந்தைகள்
ஏதேதோ காரணங்களுக்காகவோ
காரணமில்லாமலோ
இறந்திருக்கிறார்கள்
இது ஒரு சம்பிரதாயம்
இது ஒரு சடங்கு
குழந்தைகளுக்கு மட்டுமா
எனக்கும்தான் ஆக்ஸிஜன்
போதுமான அளவு கிடைப்பதில்லை
எனக்கு அவ்வளவு மூச்சுத்திணறுகிறது
உங்கள் அரசாட்சியில்
மக்கள் அனைவருக்குமே
மூச்சுத்திணறுகிறது
சிலர் உண்மையாகவே சாகிறார்கள்
கோடிக்கணக்கான மக்கள்
நடைப்பிணமாகிறார்கள்
நீங்கள் இந்த தேசத்தில்
மக்கள் அனைவருக்குமான
ஆக்ஸிஜனை பூதங்களைபோல
குடித்துத் தீர்க்கிறீர்கள்
யாரோ ஒருவனை பலிகடாவாக்குகிறீரகள்
உங்கள் கைகளின் ரத்தக் கறையை
ஒரு சொம்பு தண்ணீரில்
கழுவுவது ஒன்றும்
உங்களுக்குப் புதிதல்ல
ஒரு கிருஷ்ண ஜெயந்தியில்
இது நடந்திருக்கக் கூடாது
நூறு குழந்தைகளின்
இறுநூறு வண்ணமயமான
பாதச்சுவடுகள்
பதியமுடியாமல் போய்விட்டது
நூறு கிருஷ்ணர்களை
நீங்கள் சாகவிடுகிறபோதுதான்
உங்கள் கையாலாகாதனத்தை
இந்த தேசம் பார்க்கிறது
இதை மறைப்பதற்காக
எவ்வளவு பேசுகிறீர்கள்
வெறும் சொற்களின் கூட்டத்தைதவிர
வெறும் பிணங்களின் குவியலைத்தவிர
வேறு எதையும் நாங்கள் பார்க்கவில்லை
எனது குழப்பமெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
ரோமியோ தடுப்புப் படைகள் மூலம்
காதலர்களை பிரித்த்து
புதிய சந்ததிகள் உருவாகாமல்
பார்த்துக்கொள்கிறீர்கள்
இன்னொரு புறம்
பிறந்த குழந்தைகளை
ஆக்ஸிஜன் இல்லாமல் சாகவிடுகிறீர்கள்
இந்த தேசத்தின்
கடைசி தலைமுறையாக
நீங்களே இருக்கப்போகிறீர்களா?
15.8.2017
இரவு 11.04