எப்போதும் சாப்பாட்டுக்கு வெளியே செல்லும் போதெல்லாம் யாரையாவது துணைக்கு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இரண்டே பேர். ராம்ஜி, அல்லது ஸ்ரீராம். இது பற்றி கொஞ்சம் சம்சயம் கொள்வதுண்டு, நண்பர்களுக்குத் தொல்லை கொடுக்கிறேனே என்று. அதைச் சொல்லிக் கொண்டிருந்த போது மற்றொரு நண்பர் சொன்னார், மனிதர்களைப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே நீங்கள் மனிதர்களை ரொம்பவும் தேடுகிறீர்கள் என்று. அது பற்றி அதிகம் யோசித்தேன். எழுத்தாளனின் வேலை என்பது உலகில் மற்ற எல்லா வேலைகளிலிருந்தும் வித்தியாசப்பட்டிருக்கிறது. எழுத்தாளன் என்ற இடத்தில் கலைஞன் என்று போட்டுக் கொள்ளலாம். ஓவியனும் இப்படித்தான். இசைக் கலைஞனும் இப்படித்தான். எழுத்தாளன் ஒரு உடம்பில் இருந்தாலும் அவன் ஆயிரக் கணக்கான மனிதர்களை, விலங்குகளை, தாவரங்களைத் தன் மனதில் இருத்தி வாழ்கிறான். உதாரணமாக, தில்லியில் பஸ்ஸில் நடந்த சம்பவம் பலருக்கும் மறந்திருக்கலாம். ஆனால் நான் அதை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். படுகொலை செய்யப்பட்ட பெண்ணாக மட்டும் அல்ல; அந்தப் படுகொலையைச் செய்த அந்த ஆண்களாகவும் அந்த ஆண்களையும் வாழ்கிறேன். இந்த மூர்க்கம், இந்த வன்முறை எங்கிருந்து வருகிறது. எப்படி வருகிறது. இப்படி ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கை என் மனதில் குதித்துக் கொண்டிருக்கிறது.
ஆயிரம் பேய்களின் வாழ்விடம் என் மனம். அந்த ஆயிரம் பேய்களின் கூச்சலை நான் கேட்க வேண்டியிருக்கிறது. அந்தக் கூச்சலோடுதான் நானும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. நான் நான் இல்லை. என்னுடைய நூற்றுக் கணக்கான கதாபாத்திரங்களாகவும் நான் வாழ வேண்டியிருக்கிறது. ஐந்து பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் வலியையும் வாங்கிக் கொள்ள வேண்டியிருப்பதோடு அந்த ஐந்து பேரின் குரூரத்தையும் வாழ வேண்டியிருக்கிறது. அதனால்தான் எழுத்தாளர்கள் குடிக்கிறார்கள். விசித்திரமாக நடந்து கொள்கிறார்கள்.
காலைஎட்டரை மணியிலிருந்து இந்தத் தருணம் வரை 100 பக்கங்களை – Marginal Man – எடிட் செய்தேன். 25 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் ஓடியது போல் இருக்கிறது. கொஞ்சம் வைன் குடிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டு மதுவைத் தொடப் போவதில்லை. எஸ்.ரா.வின் கார்ல் மார்க்ஸ் பற்றிய ஒன்னேமுக்கால் மணி நேர உரையைக் கேட்டேன். இன்னும் எழுத்தாளன் இந்த தேசத்தில் என்ன தான் செய்ய வேண்டும். கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களின் இடையே ஒரு கயிறு கட்டி அதன் மேல் நடக்கப் பழக வேண்டும். அதை மட்டும் தான் தமிழ் எழுத்தாளன் இன்னும் செய்ய வில்லை. அடப்பாவிகளா, சென்ற நூற்றாண்டில் ஐரோப்பா எழுத்தாளர்களை சிறையில் அடைத்தது. தமிழ் நாட்டில் எழுத்தாளர்களுக்கு நடக்கும் அக்கிரமம் அதையெல்லாம் மிஞ்சி விடும் போல் இருக்கிறது. எஸ்.ரா. கார்ல் மார்க்ஸ் பற்றி ரெண்டு மணி நேரம் பேசியது எனக்குப் பிரச்சினை இல்லை. அதற்கு அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் ஒரு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். அப்படியானால் அதுதான் சரியான சமூகம். ஆனால் அவர் ஓசியில்தான் பேசியிருப்பார். நாமும் யூட்யூபில் ஓசியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சமூகத்துக்கு ட்டிவி தினகரனும் சசிகலாவும் எடப்பாடியும்தான் தலைவர்களாகக் கிடைப்பார்கள்!!!