எழுத்தாளனின் தனிமை – 2

நேற்று ஒரு ஆவேசமான தருணத்தில் இதன் முதல் பகுதியைத் தட்டினேன்.  சில விபரங்கள் விடுபட்டு விட்டன.  கார்ல் மார்க்ஸ் பற்றி எஸ்.ரா. பேசிய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பேச்சை நீங்கள் ஷ்ருதி டிவி இணைப்பில் காணலாம்.  இரண்டு மணி நேரமும் அவர் தண்ணீர் கூட அருந்தாததை கவனித்தேன்.  அது போகட்டும்.  ஆனால் இப்படி ஒரு பேச்சை அவர் ஒரு வாரத்தில் தயாரித்திருக்க முடியாது.  வாழ்நாள் பூராவும் கார்ல் மார்க்ஸ் அவர் குருதியில் ஓடியிருக்க வேண்டும்.  வாழ்நாள் பூராவுமான வாசிப்பு தான் அந்தப் பேச்சை சாத்தியமாக்கி இருக்கிறது. தேவதச்சன் கவிதைகள் பற்றியும் அவர் ஒரு மணி நேரம் பேசியதைக் கேட்டிருக்கிறேன்.  ஒரு வாசகர் கவிதையை எப்படி அணுக வேண்டும் என்பதற்கு அது ஒரு பாடம்.  நான் இப்போதும் எப்போதும் மாணவன் தான்.  அந்த வகையில் எனக்கு எல்லோருமே ஆசான்கள்.  அராத்து, பிரபு காளிதாஸ், சரவணன் சந்திரன் போன்றவர்கள் கூட ஒவ்வொரு வகையில் எனக்கு ஆசான்களே.  நான் எப்போதுமே என் செவிகளைத் திறந்து வைத்திருப்பதால்தான் இதை எந்தக் கூச்சமும் இல்லாமல் தைரியமாகச் சொல்கிறேன்.  உதாரணமாக, விசாரணை படத்தைப் பார்த்த போது – பார்த்தவுடன் அந்தப் படம் எனக்குப் பிடித்தது.  ஆனாலும் ஏதோ நெருடியதால் பிரபு காளிதாஸிடம் பேசினேன்.  எங்கே பிரச்சினை என்று புரிந்து விட்டது.  அந்தப் படமும் விஜய் படமும் கட்டமைப்பிலும் அணுகுமுறையிலும் கதையிலும் கதை சொல்லும் செய்தியிலும் ஒன்றுதான் என்று புரிந்தது.  அவர் டார்ச்சை அடித்தார்.  நான் பாதை போட்டுக் கொண்டேன்.  அதனால்தான் எனக்கு எல்லோருமே ஆசான்கள் என்கிறேன்.  இன்றும் கூட என்னுடைய முக்கியமான கட்டுரைகளுக்கு மனுஷ்ய புத்திரனை ஆலோசனைகள் கேட்கத் தவறுவதில்லை.

நேற்று ஒரு சர்வதேசப் பதிப்பகம் ஒன்றில் என்னைத் தவிர வேறு எழுத்தாளர்களின் நாவல்களை ஆங்கில மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைக்கச் சொன்னார்கள்.  யாமம், இடக்கை இரண்டு நாவல்களையும் பரிந்துரைத்தேன்.  கொஞ்சம் யோசித்தேன்.   நோபல் பரிசோ, புக்கரோ எனக்கு முன்னே அவருக்குக் கிடைக்கக் கூடும் அல்லவா? ஆனால் இதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழ் மொழியில் யாருக்கு சர்வதேசப் பரிசு கிடைத்தாலும் அதை எனக்குக் கிடைத்ததாகவே கொண்டாடுவேன்.  சில விதிவிலக்குகள் உண்டு.  நூற்றுக்கு ஐந்து மதிப்பெண் கூடப் போட முடியாத, ரமணி சந்திரன் நாவலை விட சாதாரணமான ஒரு ’எலக்கிய’ நாவல் டி.எஸ்.ஸி பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அந்த எழுத்தாளருக்குக் கிடைத்திருக்கும் உலகப் புகழே காரணம்.  பரிசு 40 லட்சம் ரூபாய்.  அந்த மாதிரி நடந்தால்தான் வருத்தப்படுவேன்.  எஸ்.ரா., ஜெயமோகன் எல்லாம் என் சகாக்கள்.   (என் நண்பர் ஒருவர் சொன்னார், உங்கள் சாதி பற்றியும் இப்படி ஏதாவது கொளுத்திப் போடுங்களேன், டி.எஸ்.ஸி அவார்டு கிடைக்கும் என்று.  நல்ல ஐடியாதான்.  என் சாதியைத் தானே கன்னாபின்னா என்று 40 ஆண்டுகளாகத் திட்டி எழுதுகிறேன்.  ஒரு பயல் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறானே?  என் சாதி என்ன என்கிறீர்களா? தமிழ்ச் சாதி.

எழுத்தாளர்களுக்குள் அடித்துக் கொள்வதாக பல சராசரிகள் அவ்வப்போது கண்ணீர் சிந்துவதுண்டு. மேலே உள்ளதைப் படித்துப் பாருங்கள்.  அடித்துக் கொள்வதெல்லாம் தத்துவார்த்த சமாச்சாரங்கள். இலக்கியம் என்று வரும் போது நாங்கள் எல்லோரும் ஒன்றே.