வையமேழும் கண்டேன்

செவிச்சே உணவுக்காகவும்
பிஸ்க்கோ மதுவுக்காகவும்
லீமா சென்றவன்

ராணுவ அதிகாரியால்
கை வெட்டப்பட்ட போதும்
கித்தார் வாசித்து
விடுதலையின் பாடலைப் பாடிய
கலைஞனின் குருதி தோய்ந்த
நிலத்தைக் காண
சாந்த்தியாகோ சென்றவன்

என்றோ ஒருநாள் கனவில் வந்த
மேக்காங் நதி காண
தாய்லாந்து சென்றவன்

அந்த ஊர்சுற்றியின் பட்டியலில்
இப்படி ஓராயிரம்
நிலங்களிருந்தன

இன்று
கடல்கடந்து எங்கும்
சென்றானில்லை

எழுத்தை விட
நாடும் நகரமும் மேலென்று
திரிந்தலையும்
நீ இன்று
இருந்த இடத்தில்
இருந்துகொண்டிருப்பதன்
காரணம் யாதென்று கேட்டது
மைனா

வையமேழும் கண்டேனென்
வையத்து நாயகியின்
பின்கழுத்துத் தோகையிலே
முத்தம் பதிக்கையிலே
என்றா
னவன்