எரியும் சொற்கள்

1

இப்படியொரு பெருநகரில்

நம் வீட்டு ஜன்னல் கம்பியில்

வந்தமரும் மைனாவைக்

காண்பதரிது

வெகுகாலமாக

வந்துகொண்டிருக்கிறது

இந்த மைனா

பறவை பூனைக்கு

ஆகாரமாதலால்

பறவைக்கும் பூனைக்கும்

பகை

ஆனால்

எங்கள் வீட்டுப் பூனைகள்

பூனை குணம் கொண்டவையல்ல

ஜன்னலுக்கு வரும் மைனாவிடம்

கொச்சு கொச்சென்று

கொஞ்சியபடியே இருக்கும் பூனைகள்

மைனாவின் பேச்சு

சங்கீதம் சங்கீதம்

அந்த உரையாடலைக்

காண்பதிலும் கேட்பதிலும்

எனக்கோர் இன்பம்

2

ஒருநாள் மைனா

’ஏன் சோர்வாய் இருக்கிறாய்

இப்படி நீயிருந்து கண்டதில்லையே?’

என்றது என்னிடம்.

’மோகினிக் குட்டியைக்

காண முடியவில்லை;

என்ன செய்வதென்றும்

தெரியவில்லை;

காற்றின்றித் தடுமாறுகிறது

பிராணன்’ என்றேன்.

‘ஒன்று செய், தியாகராஜர்

தொண்ணூற்றாறு லட்சம் முறை

ராமநாமம் செப்பி

ராமனைக்

கண்

டார்

உனக்குப் பிடித்த கவி

அலெஹாந்த்ரோ பிஸார்நிக்

பத்து லட்சம் முறை

தன் காதலன் பெயர்

சொன்னாள்.

உன் நண்பன் வெர்னர்

வாழ்வின் இறுதிப் பக்கங்களை

எழுதிக்கொண்டிருந்த தன்

தோழியைக் காண

ம்யூனிச்சிலிருந்து பாரிஸுக்கு

பூஜ்ய ரேகை பனிப்பொழிவில்

இருபத்தோரு தினங்கள்

பாதயாத்திரை

சென்றான்

இப்போது

உனக்கு முன்னே

இருப்பது இரண்டு

பாதைகள்

ஒன்று, நாமஜெபம்

இரண்டு, பாதயாத்திரை

தேர்வு செய்’

என்றது மைனா.

‘இதுயெதுவும் என்னாலாகாது

என் காதலியின் பெயர் ஓரெழுத்து

அதையும் ஒருமுறைதான்

சொல்வேன்.’

சொல்லென்று

சொல்லிவிட்டுப்

பறந்தது

மைனா.