மூன்று கவிதைகள்

1.மௌனம்

இதுவரை அறிந்த

மௌனம்

ரம்யம்

நீ வந்த பிறகு

அறியுமிந்த

மௌனம்

குருதி கொப்புளித்தோடும்

ரணகளம்

எத்தனையோ ஆயிரம் பேர்

அறிந்த மௌனம்

பாடிய மௌனம்

துக்கித்த மௌனம்

உடலைத் துறந்து

உயிரை மாய்த்த

மௌனம்

ஏடுகளில் படித்ததுண்டு

பாடல்களில் கேட்டதுண்டு

வாதையாய் அறிந்ததில்லை

சாட்சியாய் நகரும் நிலவே

கூழாங்கற்களை

அடித்து விளையாடி

ஓடும் நதியே

இலைகள் சலசலக்க

சரசமாடிச் செல்லும்

தென்றலே

அவளிடம் இதை

மறக்காமல்

சொல்லி விடுங்கள்

நானொரு சொல்லாகி

சொல்லுக்குள்

மறைந்து போனேனென்று

2. ஞானம்

திரும்பும் வழியிலேயே

உயிர் துறக்கும்

வெண்புரவி

என் நினைவில்

நிரந்தரம் கண்டது

எதனால்?

சூன்யத்தின் பாழ்வெளியில்

தனியனாய் நிற்கிறேன்

நீ என்பது வெறும்

நினைவாய் நிற்பதை

ஏற்க முடியவில்லை

நீ நிஜமாய் வேண்டும்

நிஜத்தை ஸ்பர்ஸித்து

நிஜத்தை முத்தமிட்டு

நிஜத்தோடு கலவி

பயில வேண்டும்

அப்போது

அங்கேவோர் உருவிலியாய்

வந்தமர்ந்த

நிஜமெனக்கோர்

கதை சொன்னது

அந்தக் கதையினிலே

அன்றுதான் பிறந்த தன்

பாலகனை விட்டுவிட்டு

கானகமேந்தும் குமரனொருவன்

நதிக்கரையினிலே தன்

ஆடை களைந்து

தலைமுடி அகற்றி

உலக பந்தம் துறக்கிறான்

அப்போதொரு வெண்புரவி

அவன் பாதத்தில்

முகம் பதித்துக்

கண்ணீர் சொரிகிறது

இனி இவனைக் காண

முடியாதெனத் தெரிந்து விட்டது

புரவிக்கு

ஞானம் தேடச் செல்கிறேன்,

நீ திரும்பு அரண்மனைக்கு

என்கிறான் ஞானம்தேடிக்

கிளம்பியவன்.

3. வளரி

என் வசமிருந்த
ஆடல் பாடல்
எழுத்து பேச்சு
யாவற்றையும்
கவர்ந்துகொண்டாய்.
இந்தக் கணத்தின்
வெறுமையை
சொல்லால் சொன்னால்
அது தேய்வழக்கு.

பெரிதாக மெனக்கெட
வேண்டாம்
என் பெயரைச் சொன்னால் போதும்
உன் குரலில்.

எல்லாமே திரும்பிவிடும்.